மனசு போல வாழ்க்கை 08: மனம் வாயிலாக பதிவுசெய்யும் உடல்!
எல்லா உடல் நோய்களுக்கும் மனம் ஒரு பெரும் காரணம் என இன்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். மனத்தின் பங்கு இல்லாமல் உடலில் எதுவும் நிகழாது என்று கூறலாம். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். முழுமையாகவோ குறைவாகவோ இருக்கலாம். நிச்சயம் மனத்தின் பங்களிப்பு உண்டு. “எப்படி அப்படிச் சொல்ல முடியும்? மழையில் நனைந்து காய்ச்சல் வருகிறது. ஊரெல்லாம் தொற்று நோய் பரவி வந்து உங்களையும் தாக்குகிறது.
அல்லது சாலை விபத்து நடக்கிறது. இதெல்லாம் வெளிப்புறக் காரணங்கள் இல்லையா?” என்று கேட்கலாம். ஒரு லட்சம் பேர் மீது பொழியும் மழையில் சில நூறு பேருக்கு மட்டும் ஏன் காய்ச்சல் வருகிறது? அது அவரவர் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பொறுத்தது என்று சொல்லலாம். நோய் எதிர்ப்பு ஆற்றலில் மனத்தின் பங்கு அதிகம் என்று இன்று Psycho - Immunology தெளிவுபடுத்துகிறது.
இதை கவனித்தீர்களா?
விபத்துக்கு ஆளாவோர் பற்றிய உளவியல் ஆராய்ச்சிகள் Accident Prone Behaviour என்ற ஒன்றைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகள்கூடச் சராசரிகளை வைத்துத்தான் முடிவுகளைப் பொதுமைப்படுத்துகின்றன. ஆனால், விதிவிலக்குகளைத் தீவிரமாக ஆராயும்போதுதான் உளவியல் காரணங்கள் தெரியவரும்.
உதாரணத்துக்கு, ஒரு மருந்தைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் பொதுவாக நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். ஒரு குழுவுக்கு மருந்தைக் கொடுப்பார்கள். இன்னொரு குழுவுக்குச் சிகிச்சை அளிக்காமல் சற்றுத் தாமதிப்பார்கள். அல்லது மாற்று சிகிச்சை தருவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னே நோயின் வீரியத்தை இரண்டு குழுவிலும் கணக்கிடுவார்கள்.
மருந்து அளிக்கப்பட்ட குழுவில் 100-க்கு 75 பேருக்கு நோய் தன்மை குறைந்திருந்தால் அதை வீரிய மருந்து என்று ஒப்புக்கொள்வார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவர்கள் கவனிக்கத் தவறும் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, மருந்து கொடுக்கபப்டட குழுவில் நோய்த்தன்மை குறையாத 25 பேருக்கு இடையிலான பொதுத்தன்மை என்ன? இரண்டாவது, மருந்து கொடுக்கப்படாத குழுவிலும் நோய்த்தன்மை குறையும் 10 பேருக்கு எது பொதுவானது? இங்குதான் நம்பிக்கைகளின் நோய் எதிர்ப்புதன்மை புலப்படுகின்றது.
இதை Placebo Effect என்று சொல்வார்கள். வெறும் தண்ணீரை மிக வீரியம் மிக்க மருந்து என்று கூறிக் கொடுக்கும்போது நோய் சரியாவதைப் பல முறை நிரூபித்துள்ளார்கள். அதேபோல நோய் பயத்தினாலும் எதிர்மறையான அணுகுமுறையாலும் நல்ல சிகிச்சை கூடப் பலன் அளிக்கத் தாமதமாகிறது. இதை Nocebo Effect என்பார்கள்.
உணர்வும் உடலும்
நம்பிக்கை சார்ந்த மாற்று சிகிச்சை முறைகள் எல்லாமும் முதலில் நோயாளியை மனதளவில் நன்கு போஷிக்கின்றன. பெரும் ஆறுதல் வார்த்தைகள் அங்கு அளிக்கப்படுகின்றன. ஆழ்மன அளவில் நோய் சரியாகும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. பலன் அடைந்தவர்களின் சாகசக் கதைகளைக் காண வைக்கின்றன. இவை அனைத்தையும் மனம் வாயிலாக உடல் பதிவு செய்துகொள்கிறது. அதனால்தான் நம் மேல் மனத்தில் தர்க்கரீதியாக ஒப்புக்கொள்ள முடியாத வழிமுறைகளைக்கூட, ஆழ்மன நம்பிக்கைகள் மூலம் ஒப்புக்கொள்கிறோம். அதன் பலன்களை உணரும்போது தர்க்கத்தைக் கழற்றி வைத்துவிட்டு நிவாரணத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறோம்!
இதற்கு நேரெதிரான ஒன்றையும் அடிக்கடி பார்க்கிறோம். பெரும்பான்மையோருக்கு வெற்றிகரமாக நிவாரணம் தரும் ஒரு மருத்துவச் சிகிச்சைகூடச் சிலருக்குப் பலன் அளிப்பதில்லை. அதனால்தான் எந்த வைத்தியரும் எந்த நோய்க்கும் உறுதியான வாக்குறுதி தருவதில்லை. காரணம் உடல் என்பது எலும்பும் சதையும் ரத்தமும் நரம்பும் மட்டுமல்ல. மனத்தின் தன்மை ஒவ்வொரு உடல் அணுவிலும் உறைந்து இருப்பவை.
உணர்வின் தன்மையால் உடல் எப்படியெல்லாம் மாறும் என்பதற்கு வைத்தியச் சான்றுகள் எல்லாம் தேவையில்லை. தினசரி வாழ்க்கையில் ஆயிரம் அனுபவங்களை நாமே காண்கிறோம். நல்ல பசியுடன் சாப்பிடும்போது சாம்பாரில் செத்த பல்லி கிடப்பதாகச் சொல்கிறார் நண்பர். குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி வருகிறது. பின்னர் நண்பர் ‘எல்லாம் கிண்டலுக்கு’ என்று ஆயிரம் சொல்லியும் உணவு உண்ண முடியவில்லை.
நெருங்கிய உறவினர் இறந்தவுடன் இரவு முழுக்கத் தூக்கமில்லை. இப்படி ஒவ்வொரு உணர்வும் உடலை மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கின்றன. மகிழ்ச்சி உடலை இலகுவாக்குகிறது. அழுத்தமும் நெருக்கடியும் உடலை நோய்களுக்குத் தயார்படுத்துகின்றன.
உணர்வுகள் நோய்களைக் உருவாக்குகின்றன என்பது உண்மை என்றால், அந்த நோய்களை குணப்படுத்தும் ஆற்றலும் உணர்வுகளுக்கு உண்டு என்பது உண்மைதானே! அப்படி என்றால் உடல் தன்மையைச் சீராக்க அதற்கேற்ற உணர்வு நிலைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
உணர்வுகளைத் தோற்றுவிக்கும் எண்ணங்களை தேர்ந்தெடுத்து கையாள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், மனம் ஏற்படுத்தும் சேதாரத்தை மனத்தைக்கொண்டே நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இந்தச் சுயச் சிகிச்சைக்கு மனப் பயிற்சி அவசியமாகிறது.
(தொடரும்)
- டாக்டர். ஆர். கார்த்திகேயன்
மனிதவளப் பயிற்றுநர்
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார் டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in
No comments:
Post a Comment