Tuesday, August 6, 2019

240 கி.மீ... 2.55 மணிநேரப் பயணம் - குழந்தையின் உயிரைக் காக்க தங்கள் உயிரைப் பணையம் வைத்த ஓட்டுநர்கள்

குருபிரசாத்  vikatan

தேனியிலிருந்து கோவைக்கு 2.55 மணி நேரத்தில் தங்களின் உயிரைப் பணையம் வைத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசாமி-ஆர்த்தி தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால், அங்கு போதுமான சிகிச்சை வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தனர். ஆனால், தேனியிலிருந்து கோவைக்கு வர 5 மணி நேரத்துக்கு மேல் ஆகும். அது ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையை அழைத்துச் செல்வது என்றால் இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் கொண்டு செல்ல வேண்டும். முடிந்த வரை விரைவாக மருத்துவமனையை அடைய வேண்டும்" என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



ஆம்புலன்ஸ்


இதையடுத்து, கடந்த 30-ம் தேதி இரவு 'ஆபத்தான சூழலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்க உதவி தேவை' என வாட்ஸ்அப் மூலம் வந்த தகவலை அடுத்து துரை டிரஸ்ட் ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் சதீஷ் குமார் என்பவர் இந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தானாக முன் வந்தார். கடந்த 31-ம் தேதி இன்குபேட்டர் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸை கேரள மாநிலத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நண்பர்கள் மூலம் குறைந்த விலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அன்று மதியம் 3.15 மணியளவில் ஆம்புலன்ஸ் தேனி அரசு மருத்துவமனையில் இருந்து, கோவைக்கு கிளம்பியது. மருத்துவரின் ஆலோசனையின்படி செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்படுத்தப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகள் வாட்ஸ் அப் குழுவின் மூலம் நடைபெற்றது. இந்தத் தகவல்கள் தேனி மாவட்ட ஓட்டுநர்கள், திண்டுக்கல் மாவட்ட ஓட்டுநர்கள், திருப்பூர் மாவட்ட ஓட்டுநர்கள், கோவை மாவட்ட ஓட்டுநர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வைத்தது. இதன்படி குழந்தையை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸுக்கு முன்புறம் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. `குழந்தையின் உயிர் ஆபத்தான சூழலில் உள்ளது. உடனடியாக மருத்துவமனையை அடைய வேண்டும். ஆகவே வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஒதுங்கி'ச் செல்ல ஒலிபெருக்கி மூலம் `அலர்ட்' செய்யப்பட்டது. இப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலர் அவரவர் மாவட்டத்தில் தங்களால் முடிந்த உதவி எல்லாம் வழியெங்கிலும் செய்தனர். முதலில் செம்பட்டி முதல் ஒட்டன்சத்திரம் வரை குழந்தையை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸுக்கு முன்பு அலர்ட் செய்துக்கொண்டே தனியார் வாகனம் முன் சென்றது. அதையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வேறொரு ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலான பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் பயணம் செய்தது.


குழந்தை

அதையடுத்து தாராபுரம் முதல் பல்லடம் வரை `பேட்ரோல் போலீஸ்' மற்றும் ஆம்புலன்ஸ் உதவியுடன் பயணம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பல்லடம் பகுதியிலிருந்து காரணம்பேட்டை வரை மீண்டும் வேறு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டது. அதையடுத்து காரணம்பேட்டை முதல் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மாசானிக் ஹாஸ்பிடல் வரை ஹைவேல் பேட்ரோல் போலீஸ் உதவியுடன் வெற்றிகரமாக சுமார் 6.10 மணி அளவில் கொண்டு வரப்பட்டது. குழந்தையை இப்படி வெற்றிகரமாகக் கொண்டுவர தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் சாலைகளில் ஓரத்தில் நின்றுக்கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீரமைத்தனர்.

சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தை 2.55 மணி நேரத்தில் கடந்து உயிருக்குப் போராடிய குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி கொண்டு வந்து சேர்த்தார். குழந்தையை உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் உடனடியாகச் சிகிச்சை அளித்தனர். தற்போது அந்தக் குழந்தை குணமடைந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த சதீஷ்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.


ஆம்புலன்ஸ்

இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதீஷ்குமார், "இந்தக் குழந்தையைத் தேனியில் இருந்து கோவை வரை கொண்டுவர அனைவரின் கூட்டு முயற்சியே காரணம். ஓட்டுநர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்பால் 2.55 மணிநேரத்தில் குழந்தையைப் பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது. குழந்தைக்கு உடனடி சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளது. இந்த நிகழ்வு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024