Tuesday, August 6, 2019

உத்தரவை மீறிய கல்லூரிகளும் அதிகாரிகளும்! - ஊழலில் திளைக்கும் தஞ்சை! #EndCorruption

எம்.திலீபன்

vikatan

அரசின் நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு ஆதரவாகச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொண்டிருக்கிறார்கள்.



சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

நமது நாட்டின் தேசிய வியாதி ஊழல் என்பார்கள். அந்த வகையில், அரசு நிலங்களைத் தனியார் கல்லூரிகள் ஆக்கிரமித்து மிகப்பெரிய ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் புகார்கொடுத்தும், பணத்துக்காக நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள், தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள். தஞ்சை மாவட்டம், திருமலை சமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அரசுக்குச் சொந்தமான 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.

``ஊழல் நம் நாட்டின் தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது. ஊழலுக்கு முக்கியமான அதிகாரிகளை எடுக்க வேண்டும்." கரிகாலச் சோழன்

அதேபோன்று ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரியும் 35 ஏக்கருக்கும் மேல் நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியுள்ளது. அரசின் நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு ஆதரவாகச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கரிகாலச் சோழனிடம் பேசினோம்.

கரிகாலச் சோழன்

``ஊழல் நம் நாட்டின் தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது. ஊழலை ஒழிக்க முக்கியமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்" என்று ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார். "தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக விவகாரம் பல வருடங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கல்லூரி, அரசின் அனுமதி இல்லாமல் அரசுக்குச் சொந்தமான 58 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டி கல்லூரி நடத்திவருகிறது.


ஆக்கிரமிப்பு இடங்கள்

இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று சட்டரீதியாகப் போராடி வருகிறேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு நிலத்தில் கட்டியுள்ள கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் எதையுமே மதிப்பதில்லை. இப்போது சென்னை உயர் நீதிமன்றம், அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று இரண்டு மூன்று முறை உத்தரவு போட்டது. ஆனால், இன்றுவரையிலும் நடவடிக்கை இல்லை. அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகேயுள்ள ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரியும் 38 ஏக்கருக்கும் மேல் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியுள்ளது. இவற்றை மீட்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம்.

அவர், அந்த மனுவை டி.ஆர்.ஓ சக்திவேலிடம் அனுப்பினார். ஆனால், அவருக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்து மாதாமாதம் பணம் மற்றும் விழாக்காலங்களில் பரிசுப்பொருள்கள் வீடு தேடி வருவதால், அவர் அந்தக் கல்லூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.

நீதிமன்றம் சொல்லியும் டி.ஆர்.ஓ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் என்ன அரசியல் பின்புலத்தில் இருப்பார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். டி.ஆர்.ஓ சக்திவேலால் மாவட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவரை இங்கிருந்து மாற்ற வேண்டும்; அப்படி மாற்றம் செய்தால் மட்டுமே தஞ்சாவூருக்கு விமோசனம் பிறக்கும். இல்லையேல் லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடும்” என்று ஆதங்கத்தோடு முடித்துக்கொண்டார்.



டி.ஆர்.ஒ சக்திவேல்

தகவலைச்சொல்லி டி.ஆர்.ஓ சக்திவேலிடம் பேசினோம். முழுமையாகக் கேட்டுக்கொண்ட அவர், "நான் மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுங்கள்" என்று மழுப்பலாக போனைத் துண்டித்தார்.

இதுகுறித்து கல்லூரி தரப்பிடம் கருத்து கேட்பதற்கு, அவர்களைப் பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. இதுதொடர்பாக இதற்கு முன்பு நம்மிடம் பேசியவர்கள், "இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிறகு பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Coimbatore-Mayiladuthurai Jan Shatabdi Express service with LHB coaches launched

Coimbatore-Mayiladuthurai Jan Shatabdi Express service with LHB coaches launched The Southern Railway began operating the service on Saturda...