Monday, August 5, 2019

ஒரு காஃபி குடிச்சிருக்கலாமே சித்தார்த்தா…

காஃபிடே அதிபர் சித்தார்த்தா : கோப்புப்படம்

“பணத்தைத் தேடித்தான் முதல்ல ஓடுவோம், 5 அல்லது 10 கோடிகளைப் பார்த்தபின் பணத்தால் எந்தப் பயனும் இல்லை என உணர்ந்துவிடுவோம். என்னைப் பொறுத்தவரை வியாபாரத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் ஒரு உணர்ச்சிப் பொருள்தான் பணம்..”

இந்த வாசகத்தைக் கூறியது..காஃபி கிங்காக வலம் வந்து, பல வெற்றிகளைக் குவித்தபின், தான் தொழிலில் தோற்றுவிட்டேன் என்று கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட காஃபே காஃபி டே உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தாதான்.

தேயிலை குடிக்கும் தேசத்தை காஃபி தேசமாக ஏன் மாற்றக்கூடாது என்று யோசித்து காஃபிக்கு மாற்றிக்காட்டியவர் சித்தார்த்தா. ஒரு காஃபியால் ஏராளமானவற்றை நடத்த முடியும் (A lot can happen over coffee) என்ற தனது கடையின் வாசகத்தை இளைஞர்கள், தொழில்முனைவோர் மனதில் பதியவைத்து, நிரூபித்தவர் சித்தார்த்தா.

209 நகரங்களுக்கும் மேல், 1,843 காஃபி டே கிளைகள், சர்வதேச அளவில் பல நாடுகளில் கிளைகள், மென்பொருள் நிறுவனம், ஏற்றுமதி நிறுவனம் என பல தொழில்களைச் செய்து இந்தியாவின் 20 பணக்காரர்கள் இடத்துக்குள் சித்தார்த்தா வலம் வந்தார்.

கடந்த திங்கள்கிழமை பெங்களூருவில் இருந்து சாக்லேஷ்பூருக்கு அந்த கார் சென்றது. மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் வந்தபோது தனது ஓட்டுநரை காரை நிறுத்தக் கூறியுள்ளார் சித்தார்த்தா.

ஓட்டுநரும் காரை நிறுத்தினார். “சிறிது நேரம் இங்கு நில்லுங்கள்”, “நான் வாக்கிங் சென்றுவிட்டு வருகிறேன். அதன்பின் போகலாம்” என்று சொல்விட்டுச் சென்ற சித்தார்த்தா அதன்பின் திரும்பவில்லை. இரு நாட்கள் தேடுதலுக்குப் பின் கடந்த 29-ம் தேதி நேத்ராவதி ஆற்றில் ஹோகே பசார் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டபோது 24 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பிய காஃபி சாம்ராஜ்ஜியம் சரிந்துபோனது.



தொழிலில் வெற்றியாளராக இருந்த சித்தார்த்தாவுக்கு என்ன ஆயிற்று, அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன இருந்தது, புற உலகத்தில் தொழில்முனைவோராக வெற்றி பெற்ற சித்தார்த்தா, அவருக்கான அக உலகத்தில் தொழில்முனைவோராக தோற்றுவிட்டாரா.. எனப் கேள்விகளெல்லாம் எழுகின்றன.

கர்நாடகத்தில் சிக்மங்களூரில் உள்ள கோடீஸ்வரக் குடும்பத்தில்தான் 1959-ம் ஆண்டு சித்தார்த்தா பிறந்தார். சித்தார்த்தாவின் தந்தை, தாத்தா என குடும்பத்தினர் என 140 ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரையாக, காபித் தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டவர்கள்.

இவர்களுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் காஃபித் தோட்டம் இருக்கிறது. சிறுவயதில் இருந்தே காஃபித் தோட்டத்துக்கு சென்று வந்ததால் என்னவோ சித்தார்த்தா உடலில், ரத்தத்தோடு சேர்ந்து, காஃபியும் ஓடியது என்று ரசனைக்கு கூறலாம்.

மங்களூரில் உள்ள ஆலோசியஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் பயின்ற சித்தார்த்தாவின் ஆரம்பகட்ட நோக்கம் தொழில்முனைவோராக வருவதைக் காட்டிலும் “கம்யூனிஸ்ட் தலைவராகவே” சித்தார்த் உருவாக விரும்பினார்.
ஆனால் காலத்தின் கட்டாயம் சித்தார்த்தாவை தொழில்முனைவோராக்க விரும்பியது. இதற்காக சித்தார்த்தா தனது 21-வது வயதில் முதலில் மும்பையில் உள்ள ஜேஎம். நிதி மற்றும் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து இரு ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றார்

அதன்பின் சொந்தமாக தொழில் நடத்த வேண்டும் எனத் திட்டமிட்டு, தனது தந்தையிடம் சென்று ரூ.5 லட்சம் பெற்றார். அதில் 3 லட்சத்துக்கு சிக்மங்களூரில் நிலம் வாங்கினார். மீதமுள்ள பணத்தில் சிவன் செக்யூரிட்டீஸ் என்ற பெயரில் பெங்களூருவில் ஒரு பங்கு முதலீட்டு நிறுவனத்தை 1984-ம் ஆண்டு தொடங்கினார்.


லத்திலும், பங்கு நிறுவனத்திலும் செய்த முதலீடு பல மடங்கு பெருகியது. சிவன் செக்யூக்ரிட்டீஸ் நிறுவனம் முதலீடுகள் குவிந்து வீறுநடை போட்டது, அதைத் தொடர்ந்து வே டூ வெல்த் நிறுவனத்தை சித்தார்த்தா தொடங்கினார்.

தனது குடும்ப பாரம்பரிய காஃபி தோட்ட வியாபாரத்தையும் விடக்கூடாது என்பதால், 1993-ம் ஆண்டு அமால்கமேட்டட் பீன் கம்பெனி (ஏபிசி) எனும் காஃபி கொட்டை வர்த்தக நிறுவனத்தை சித்தார்த்தா தொடங்கினார். ஆண்டுக்கு ரூ 6 கோடி விற்றுமுதலுடன் நிறுவனம் சக்கைபோடு போட்டது. இன்று அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,500 கோடியாக உயரந்திருக்கிறது.

இதற்கிடையே ஜெர்மன் காஃபி நிறுவனமான சிபோ நிறுவனத்தாருடன் சித்தார்த்தா ஒருநாள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தானும் இதுபோன்ற காஃபி செயின் வர்த்தகத்தை தொடங்க வேண்டும் என விரும்பினார். ஜெர்மன் நிறுவன உரிமையாளர்களுடனான சந்திப்புக்குப் பின் அன்றைய இரவு சித்தார்த்தாவுக்கு தூக்கம் வரவில்லை என்று அவரே ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். அன்று அவர் சிந்தனையில் உருவானதுதான் காஃபி டே.

அதன்பின் கடந்த 1996-ம் ஆண்டு, ஜுலை 11-ம் தேதி பெங்களூருவில் உள்ள பிரிகேடியர் சாலையில் சிசிடி (CCD) எனச் சொல்லப்படும் கஃபே காஃபி டே கடையின் முதல் கிளையை சித்தார்த்தா தொடங்கினார். 'லாட் கேன் ஹேப்பன் ஓவர் ஏ காஃபி' என்ற வாசகத்துடன் தொடங்கப்பட்டு இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது.
தொடக்கத்தில் வாடிக்கையாளர்களைக் கவர கடையிலேயே இருந்த சித்தார்த்தா, இளைஞர்களுக்கு இலவசமாகக் காஃபியை வழங்கி அவர்களை ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் முன்னேறத் துடிக்கும் பல இளைஞர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி காஃபி டே கடையை கலகலப்பாக மாற்றினார்.

காதலர்களும், இளம் தம்பதிகளும், புதிய தொழில்முனைவோரும் பேசிக்கொள்வதற்கு பெரிய ஹோட்டலை நாடி அதிக செலவு செய்ய வேண்டிய நிலையை சித்தார்த்தா தொடங்கிய காஃபி டே கடை மாற்றிக்காட்டியது.

இளைஞர்கள் அமர்ந்து பேசவும், ஒரு காஃபியை வைத்துக்கொண்டு உலகக் கதைகளை தனக்குப் பிடித்தவர்களுடன் கடலை போடவும் காஃபிடே சரியான இடம் என்பதை இளைஞர்களுக்கும், தம்பதிகளுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் சித்தார்த்தா உணர்த்தினார்.


வசதியாக அமரும் இருக்கைகள், இடம், அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை அனைத்து வகையிலான கேப்பசினோ, பிளாக் ஃபாரஸ்ட், ஐஸ் கஃபே, பிளாக் கஃபே என பல வகைகளை இளைஞர்களுக்குப் பிடித்தவாறு தனது கடையிலேயே தயாரித்து அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவிலையில் சித்தார்த்தா வழங்கினார். இதுதவிர க்ரீன் டீ, லெமன் டீ, நொறுக்குத்தீனிகள், பீட்ஸா, பர்கர் வழங்கி இளைஞர்களை கட்டிப்போட்டார் சித்தார்த்தா.

களிப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு சாமரங்களையும், புதிதாக தொழில்முனைவோராகத் துடிக்கும் இளைஞர்களுக்கு போதிக்கூடமாகவும் காஃபிடே மாறிப்போனது. காஃபி டேயின் கவர்ந்திழுக்கும் மனம், பல்வேறு சுவையை ருசிக்க வரும் இளைஞர்கள் ஒருபக்கம், தங்களின் எதிர்காலத்துக்கு ஆலோசனைகளைக் கேட்க சித்தார்த்தாவைச் சந்திக்க வரும் இளம் தொழிலமுனைவோர்கள் கூட்டம் என காஃபி டே கடைகளும், கிளைகளும் களைகட்டத்தொடங்கின.

காஃபி டே வெற்றி நடைபோட, அடுத்த 10 ஆண்டுகளில் காஃபி நுரைபோல லாபத்தை காஃபிடே நிறுவனம் பொங்கச் செய்தது, நூற்றுக்கணக்கான கிளைகள் நாடெங்கும் வியாபித்தது.
கொஞ்சம் காஃபி நிறைய பேச்சு என்ற வகையில், குறைந்த வெளிச்சத்தில், இதமான சூழலில் ஒரு காஃபி செலவில் கூட்டம் நடத்த சித்தார்த்தாவின் காஃபி டே உதவியதை காஃபி உலகம் மறக்காது.

ஜம்மு காஷ்மீர் முதல் தமிழகம் வரை, மணிப்பூர் மாநிலத்தின் கடைக் கோடிவரை காஃபி டேயின் சுகந்தத்தையும், சுவையான காஃபியையும் சித்தார்த்தா பருகவைத்தார்.



அதுமட்டுமல்லாமல் காஃபி டே குழுமத்தின் சார்பில் காஃபித் தோட்டங்களும் மேற்கு இந்தியப் பகுதிகளில் வாங்கிக்குவித்தார் சித்தார்த்தா. கத்லேகான் எஸ்டேட், ஹலாசூர் எஸ்டேட், தேவதர்ஷினி எஸ்டேட், கிரிகான் எஸ்டேட், குர்குன்முட்டி எஸ்டேட், பத்ரா எஸ்டேட் என ஏராளமான எஸ்டேட்கள் சித்தார்த்தா தலைமையில் உருவாகின.

அதிலும் குறிப்பாக சித்தார்த்தா வாங்கிய கத்லேகான் எஸ்டேட்டில் விளையும் 'டார்க் ஃபாரஸ்ட் காஃபி' பீன்ஸ் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சர்வதேச தரத்துக்கு ஈடாகப் போட்டியிட்டது. இந்த கத்லேகான் எஸ்டேட்டில் விளைவிக்கப்படும் 'பிளாக் ஃபாரஸ்ட் காஃபி' கொட்டைகளுக்கு உலக அளவில் வரவேற்பு இருந்தது. இதுதவிர ரோபஸ்டா, அராபிகா வகை காஃபி வகைகளையும் பயிர் செய்தார்.

இந்த காஃபி வகைகளில் இருந்து விளையும் காஃபி பவுடர்களை விற்பனை செய்ய 'காஃபி டே பிரஷ்' எனும் நிறுவனம், உயர்ரக மக்கள் வந்து செல்லும் 'காஃபி டே ஸ்குயர்' சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பையில் அமைக்கப்பட்டன.

900 கிளைகள் கொண்ட 'காஃபி டே எக்ஸ்பிரஸ்', 50 ஆயிரத்துக்கும் மேலான எந்திரங்கள் கொண்ட 'காஃபி டே பிவேரஜஸ்', 'காஃபி டே எக்ஸ்போர்ட்ஸ்', 'காஃபி டே பெர்பெக்ட்', 'காஃபி டே பி2சி பிளான்ட்' என பல்வேறு கிளைகளை காஃபி டே குழுமத்துக்குள் சித்தார்த்தா உருவாக்கினார்.

வெளிநாடுகளிலும் கிளை பரப்ப முடிவு செய்த சித்தார்த்தா, 2010-ம் ஆண்டு செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த காஃபி எம்போரியோ நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன்பின் ஆஸ்திரியா, எகிப்து, நேபாளம், கோலாலம்பூர் என பல்வேறு நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பினார்.

சித்தார்த்தாவின் பிரதான தொழிலாக காஃபி வர்த்தகம் மட்டுமே இருந்தது. தன்னுடைய ஏபிசி நிறுவனம் மூலம் உலக அளவில் அதிக அளவு தரமான காஃபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக உயர்த்தினார்.

சமீபத்திய கணக்குப்படி ஆண்டுக்கு 20 ஆயிரம்டன் காஃபிக் கொட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த சித்தார்த்தா, உள்நாட்டில் 2 ஆயிரம் டன் காஃபிக் கொட்டைகளை விற்பனை செய்யும் நிறுவனமாக மாற்றினார். தன்னுடைய ஏபிசி நிறுவனத்துக்கு சொந்தமாக மட்டும் 12 ஆயிரம் ஏக்கர் காஃபித் தோட்டங்களை வாங்கிக் குவித்தார். அவரின் கனவு காஃபித் தோட்டத்தோடு முடியவில்லை, காற்புள்ளி வைத்து கனவை நீட்டித்தார்.

1999-ம் ஆண்டு அசோக் சூட்டா, ரோஸ்டா ராவணன், சுப்ரோட்டோ பாக்சி ஆகியோருடன் இணைந்து மைன்ட்ட்ரீ(Mindtree) எனும் மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார் சித்தார்த்தா. இந்நிறுவனத்தின் கிளைகள் வியன்னா, செக் குடியரசு என பல்வேறு இடங்களில் உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினார்.


இந்த மைன்ட் ட்ரீ நிறுவனத்தின் மூலம்தான் சித்தார்த்தாவுக்கு முதல்கட்ட இழப்பு ஏற்படத் தொடங்கியது. சித்தார்த்தாவின் முதலீட்டுக்கு கைகொடுத்த பங்குச்சந்தை, அவரின் நிறுவனத்தைப் பட்டியலிட்டு பங்குகளை விற்பனை செய்தபோது பங்குச்சந்தை கைகொடுக்கவில்லை. காஃபி டே நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்தே தொடர்ந்து நஷ்டத்தையே காட்டியது.

இதனால் காஃபி தோட்டத்தை வாங்க ஏராளமாக கடன் வாங்கி இருந்த சித்தார்த்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. சமீபத்திய தகவல்படி காஃபி டே நிறுவனத்தின் கடன் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது. ஆனால், காஃபி டே நிறுவனத்தின் மதிப்பு, கையிருப்பு ஆர்டர், நிலங்களின் மதிப்பு, கடைகளின் வருவாய் ஆகியவற்றின் மதிப்பைக் கணக்கிட்டால், கடன்தொகையைக் காட்டிலும் 4 மடங்கு என கணக்கிடப்பட்டுள்ளது.

சித்தார்த்தாவின் காஃபி வர்த்தகத்தில் உள்ள சொத்துகளை மட்டும் விற்றால்கூட அதன் மதிப்பு இன்றைய தேதிக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வரும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், பங்குச்சந்தையில் காஃபி டே நிறுவனத்தின் பங்குகளின் இழப்பு, அதிகரித்த கடன்சுமை ஆகியவற்றால் முதல்முறையாக சித்தார்த்தா கலங்கினார்.

அதன்பின் கடந்த மார்ச் மாதம் ஒருநாள் தொழிலதிபர்களின் கூட்டம் ஒன்றில் எல்அன்ட்டி நிறுவனத்தின் உரிமையாளரைச் சந்தித்துப் பேசிய சித்தார்த்தா தனது மைன்ட் ட்ரீ நிறுவனத்தில் தனது பங்குகளை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு எல்அன்ட்டி நிறுவனரும் சம்மதிக்கவே, இருவருக்கும் இடையே அடுத்தடுத்த கட்டங்களில் பேச்சு நடந்து, பங்கு விற்பனை முடிந்தது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சித்தார்த்தாவுக்கு ரூ.3300 கோடிக்கு மேல் கிடைத்தது/ இதில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடியை திருப்பிச் செலுத்தியதில், 60 சதவீதக் கடன் அடைக்கப்பட்டதாக ஆக்ஸிஸ் வங்கி கூறுகிறது. மீதமிருக்கும் கடனையும் தனது சொத்துகளால் அடைத்துவிட்டு, சித்தார்த்தா காஃபி தொழிலை மட்டும் கவனித்திருந்தாலே ஓய்வுக் காலத்தை சுகமாக கழித்திருக்கலாம்.



இந்த தொழில்மட்டுமல்லாமல் 3 ஆயிரம் ஏக்கரில் வாழைத்தோட்டம் அமைத்து வாழைப்பழம் ஏற்றுமதி, டார்க் ஃபாரஸ்ட் பர்னிச்சர் கம்பெனி என சித்தார்த்தா நடத்தி வந்தார்.

சிலஅரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பாலும், பங்குகளை விற்பனை செய்ததில் முறையாக கணக்குக் காட்டவிட்டவில்லை. காஃபிடே வருமானத்தில் சரியான வருமானவரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

பெங்களூரு, சென்னை,மும்பை, சிக்மங்களூரு ஆகிய இடங்களில் சித்தார்த்தாவுக்கு சொந்தமான இடங்கள், கடைகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பின் வருமான வரித்துறையினர் அளித்த நெருக்கடி, சொத்துகள் முடக்கம், கடன் நெருக்கடி போன்றவற்றைத் தாங்கமுடியாமல் சித்தார்த்தா விபரீதமான முடிவை எடுத்தார். வருமான வரித்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் நெருக்கடி காரணம் என்று சித்தார்த்தா தனது கடைசிக் கடிதத்தில் தெரிவித்தாலும், அது நியாமில்லை என வருமான வரித்துறையும் விளக்கம் அளித்தது.

தொழிலதிபராக பல வெற்றிகளைக் குவித்த சித்தார்த்தா, தொழிலில் தோற்றுவிட்டதாகக் கூறி மீளமுடியா இடத்துக்குச் சென்றது மற்ற தொழிலதிபர்களை அசைத்துப் பார்க்கவே செய்யும்.
பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானவர்கள்கூட திடீரென அனைத்தையும் துறந்த தற்கொலை எனும் தவறான முடிவுக்குச் செல்வது, அன்றாடம் பிழைப்பு நடத்தும் மக்களுக்கும், நித்தமும் கஷ்டத்தில் திளைக்கும் மக்களுக்கும் ஆச்சர்யத்தையே அளிக்கிறது.

ஆனால், ஒருவர் பணக்காரராகவும், தொழிலதிபராகவும் இருப்பதாலேயே தற்கொலை முடிவு எடுக்கும் சூழல் எழுந்துவிடாது. தனது நிறுவனங்கள் அனைத்தையும் முன்னின்று நிர்வாகம் செய்த சித்தார்த்தா, தனது நிறுவனத்தின் கஷ்டங்கள், துயரங்கள், பொறுப்புகள், கடன்களை தன் மீது மட்டுமே சுமந்துகொண்டதால் அவர் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எந்த தனி மனிதரின் வாழ்விலும் கஷ்டங்களும், போராட்டங்களும் நிரம்பித்தான் இருக்கும். அதுதான் இயற்கையின் நியதி. ஆனால், ஏதோ ஒரு தருணம், ஒரு செயல், ஒரு சம்பவம், வாழ்வைச் சூனியமாக்கிவிடுகிறது. அந்தச் சில தருணங்களில் எந்த ஒரு சரி - தவறும் கண்ணுக்குத் தெரிவதில்லை.


நம் கனவுகளும் ஆசைகளும் இதர மகிழ்ச்சியும் அற்ற ஒரு வெளியாக அந்த தருணம் இருக்கிறது. அப்போது ஒரு மனிதன் எடுக்கும் கடைசி ஆயுதமே தற்கொலை. தன் இருப்பு இந்த உலகில் அர்த்தமற்றது, யாருக்கும் நாம் தேவையில்லை, நாம் போனபின் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள், அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிட்டோம் என்று எண்ணம் மேலோங்குகிறது.

சிலவினாடிகள் சித்தார்த்தா தனது மனைவி, பிள்ளைகளை நினைத்திருந்தால் இந்த முடிவு எடுத்திருப்பாரா? பல நாட்களாக வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் அடக்கி வைத்திருக்கும் கவலைகள், பிரச்சினைகள், வலிகள், கோபம், ஆத்திரம் ஆகியவை மெல்ல மெல்ல ஒரு நபரை மகிழ்ச்சியில் இருந்து வெளியே இழுக்கின்றன, வெற்றிடத்துக்குள் தள்ளப்படுகிறோம்.

ஒரு சின்ன நம்பிக்கைதான் அந்த தருணத்தில் தேவை, அது தன் குழந்தையின் சிரிப்பு, மனைவியின் காதல், பெற்றோரின் அன்பு, நட்பின் அரவணைப்பு, தன் நாயின் வாலாட்டல் என்று ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும். ஆனால், அப்போது யாருமில்லாமல் போகும் போதுதான், தற்கொலை நடக்கிறது.

தற்கொலை என்பது கோழைத்தனம் என்பதைத் தாண்டி ஒரு மிகப் பெரிய உளவியல் சிக்கல், பிரச்சினை என்பதை நாம் உணர வேண்டும்.


வெறும் பணப் பிரச்சினை, கடன் தொல்லை, குடும்பத் தகராறு, வாழ்க்கையில் தோல்வி என்று அதை ஒதுக்கிவிட முடியாது. ஒரே பிரச்சினையைச் சந்திக்கும் இரு நபர்களில் ஒருவர் மட்டும் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார் என்று சிந்திக்க வேண்டும்

கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையில் கூறுகிறார், சாவைச் சாவு தீர்மானிக்கும் 

வாழ்வை நீ தீர்மானி; புரிந்து கொள், சுடும் வரைக்கும் நெருப்பு சுற்றும் வரைக்கும் பூமி போராடும் வரைக்கும் மனிதன் நீ மனிதன் "ஏ லாட் கேன் ஹேப்பன் ஓவர் ஏ காஃபி" என்று தனது வெற்றியின் ரகசியமாக வைத்திருந்த சித்தார்த்தா கடைசியில் ஒரு காஃபி குடித்திருக்கலாம்….

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024