Monday, August 5, 2019

அன்று ஹீரோ... இன்று வில்லன்... `குடி'யால் ஒரே நாளில் சரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

மலையரசு  vikatan

விபத்து நடந்த 9 மணி நேரம் கழித்தே அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை, விபத்து நடந்த போது ஸ்ரீராம் உடன் இருந்த மாடல் அழகியும், அவரது நண்பருமான பெண் ஒருவரும் இருந்துள்ளனர்.


ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையைச் சேர்ந்தவர் கே.எம் பஷீர். மலையாள நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் பஷீர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் தன் வேலைகளை முடித்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் அதிக வேகத்தில் வந்த ஒரு சொகுசு கார் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பஷீரின் வாகனம் தூக்கிவீசப்பட்டு அருகிலிருந்த சுவரில் பலமாக மோதியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திலேயே பஷீர் பரிதாபமாக உயிரிழந்தார்.


பஷீர்

பஷீரின் பரிதாப உயிரிழப்பு கேரளாவில் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. அதற்கு காரணம் விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன். தன் சொகுசு காரை குடிபோதையில் ஸ்ரீராம் இயக்கியதே விபத்துக்குக் காரணமாக அமைந்தது. அவர் காரில் இருந்து இறங்கும்போது குடிபோதையில் இருந்ததை மக்களும் பார்த்துள்ளனர். இந்த விபத்தால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட பஷீரின் குடும்பம் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆனால் பஷீரின் உயிரிழப்பைக் கண்டுகொள்ளாமல், அதிகாரிகள் ஸ்ரீராமை காப்பாற்ற முயன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளதாகக் கூறுகிறது மலையாள ஊடகங்கள்.

விபத்து நடந்த சிறிது நேரம் கழித்து ஸ்ரீராமை விசாரணைக்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் தான் காரை ஓட்டவில்லை எனக் கூறிய அவர் பிறகே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு மது அருந்தியதற்கான ரத்தப் பரிசோதனை செய்வதில் போலீஸார் தாமதம் காட்டியுள்ளனர். விபத்து நடந்த 9 மணி நேரம் கழித்தே அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை, விபத்து நடந்த போது ஸ்ரீராம் உடன் இருந்த மாடல் அழகியும், அவரது நண்பருமான பெண் ஒருவரும் இருந்துள்ளனர்.


ஸ்ரீராம் வெங்கட்ராமன்

காரின் உரிமையாளரான அந்தப் பெண் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கால தாமதம் செய்துள்ளனர். இதன்பிறகு விவகாரம் பெரிதாகவே ஸ்ரீராம் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீராம். இதற்கிடையே, விபத்து குறித்த செய்திகள் வெளியானதும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராமை வசைபாடத் தொடங்கினர் மக்கள். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கண்டனங்கள், விமர்சனங்கள் அதிகமாகப் பகிரப்பட்டன.

சமூகப் பணிகள் செய்ய வேண்டிய ஒரு ஐ.ஏஸ் அதிகாரியே குடிபோதையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்தலாமா என்றெல்லாம் கண்டனங்கள் குவிந்தன. மக்களின் இந்த எதிர்ப்புக்கு அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதைத் தாண்டி மற்ற காரணங்களும் இருக்கின்றன. கொச்சியில் பிறந்த ஸ்ரீராம் ஒரு மருத்துவர். மருத்துவராகத் தேர்ச்சி பெற்றாலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ தொழிலை விடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தார். வாத்தியார் பிள்ளை (ஸ்ரீராமின் அப்பா கல்லூரி விரிவுரையாளர்) என்பதாலோ என்னவோ எந்தவித ஸ்பெஷல் கோச்சிங்கும் எடுக்காமல் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.


ஸ்ரீராம்

இரண்டாவது முயற்சிலேயே (2013ம் ஆண்டு) இரண்டாவது ரேங்க் எடுத்து ஐ.ஏ.எஸ் ஆகத் தேர்ச்சியும் பெற்றார். துடிப்பு மிக்க வாலிபரான அவர் மத்திய உணவு பாதுகாப்பு துறை பணியில் இருந்தார். பின்னர் 2016ம் ஆண்டு இடுக்கி அருகே உள்ள தேவிகுளம் பகுதி சப்-கலெக்ட்ராக பணியமர்த்தப்பட்டார். இங்கு தான் அவருக்கு ஏறுமுகம் ஏற்பட்டது. சப்-கலெக்டராக பணியில் அமர்ந்தவுடன் இடுக்கி மலைப்பகுதியில் இருந்து விதிகளை மீறி கட்டிடம் கட்டியவர்கள், லேண்ட் மாஃபியாக்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.

 தொடர்ந்து  தனது செயல்களில் அதிரடி காட்ட லோக்கல் அரசியல்வாதிகளின் பகையும் சம்பாதித்தார். இதனால் சப்-கலெக்டர் பதவி பறிபோனது. இருந்தாலும் அதன்பிறகு எந்த துறைக்கு சென்றாலும் அங்குத் தனி முத்திரை பதித்துவந்தார். அரசியல்வாதியாக இருந்தாலும், வேறுநபராக இருந்தாலும் அவர்கள் மீது தைரியமாக இவர் எடுக்கும் நடவடிக்கை இளைஞர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. வலைதளங்களில் அவருக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.


ஸ்ரீராம்

முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் முதல் பலரும் அவரின் நடவடிக்கையைப் பாராட்டினர். இவர் பேசும் காட்சிகள் அவ்வப்போது இளைஞர்கள் மத்தியில் பரவ `ஹீரோ'வாக வலம்வரத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்ற ஸ்ரீராம் இந்தவாரம் தான் நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் கேரள சர்வே துறை இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். தனக்குக் கிடைத்த புது பதவியை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் ஸ்ரீராம். இங்கு தான் அவருக்கு வினையே ஏற்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024