Monday, August 26, 2019

"ஸ்மார்ட் டிவி' தயாரிப்பு...மின்னல் வேகத்தில் "ஸ்மார்ட்போன்' நிறுவனங்கள்!

By DIN | Published on : 26th August 2019 02:48 AM


வரும் காலங்களில் அனைவரது இல்லங்களிலும் ஸ்மார்ட் டிவி மட்டுமே சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக இருக்கும் என்ற எதார்த்த உண்மையை உணர்ந்த பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பில் மின்னல் வேகத்தில் களமிறங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அதிலும், குறிப்பாக ஜியோமி, மைக்ரோமேக்ஸ், ரெட்மி (ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட்), ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்களின் ஆர்வம் இதில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. அதன் காரணமாகத்தான், ஸ்மார்ட் டிவி சந்தையில் இதுவரையில் கோலோச்சி வந்த சோனி, எல்ஜி, சாம்சங், பானாசோனிக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் தங்களது செயல்பாட்டை வலுவாக்க ஆயத்தமாகி வருகின்றன.

இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி என்பது இந்தியாவுக்கு மிக புதிது. எனவே, இப்பிரிவிலான டிவி விற்பனை எதிர்காலத்தில் அசுர வளர்ச்சி காணும் என்பது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் கணிப்பு. இதற்கு, குறைந்து வரும் இணையதள பயன்பாட்டு கட்டணங்களும் வலுவான கூடுதல் அச்சாரமிடும்.

இப்பிரிவில் ஜியோமி நிறுவனம் "எம்ஐ' ஸ்மார்ட் டிவி என்ற பெயரில் ஏற்கெனவே தனது விற்பனையை ஆரம்பித்து விட்டது. அதன் துணை நிறுவனமான ரெட்மியும் விரைவில் ஸ்மார்ட் டிவியை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனம், முன்னணி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மலிவான விலையில் செல்லிடப்பேசிகளை எவ்வாறு இந்தியாவில் விற்பனை செய்ததோ அதேபோல் ஸ்மார்ட் டிவி பிரிவிலும் குறைந்த விலையில் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
சந்தையில் பரந்து விரிந்த வாய்ப்பை உணர்ந்த ஒன்ப்ளஸ் நிறுவனமும் வரும் செப்டம்பரில் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து விட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் பீடீ லாவூ கூறும்போது, "வாடிக்கையாளர்களின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்து வருவதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அதேபோன்று, ஒவ்வொரு இந்தியர்களின் இல்லங்களிலும் இடம்பிடிக்கும் வகையில் ஒன்ப்ளஸ் டிவியை தாமதமின்றி உடனடியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

ஒன்ப்ளஸ் நிறுவனம் முதலில் இந்தியாவில் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிறகுதான், வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்த நிறுவனம், மிக குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் சந்தையில் கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட் டிவி சந்தையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நுழைந்தது. அப்போது, "எம்ஐ' எல்இடி ஸ்மார்ட் டிவி 4 என்ற மாடலை ரூ.39,999-க்கு அறிமுகம் செய்தது. அதன்பிறகு, மிக மலிவு விலை மாடலாக 32-அங்குல எல்இடி டிவியை ரூ.12,999-க்கு சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதனால், நடப்பாண்டு மே மாதத்தில் மட்டும் அந்த நிறுவனம் 20 லட்சம் டிவிக்களை விற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த 2016-17 நிதியாண்டில் ஸ்மார்ட் டிவி விற்பனையை தொடங்கியது. அந்த நிறுவனம் அண்மையில், ஆண்ட்ராய்டு வசதி கொண்ட ஸ்மார்ட் டிவியை ரூ.13,999-விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐடிசி ஆய்வு நிறுவன புள்ளிவிவரப்படி, நடப்பு 2019-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட் டிவி விற்பனையில் ஜியோமி நிறுவனம் 39 சதவீத பங்களிப்பை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, எல்ஜி 15 சதவீத பங்களிப்பையும், சோனி 14 சதவீத பங்களிப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ஆன்லைன் விடியோ என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. எனவேதான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஸீ5, அமேசான் பிரைம் வீடியோ போன்றவைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது.

கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஆன்லைன் விடியோ பார்வையாளர்களின் எண்ணிக்கை வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 50 கோடியை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் இணையதள பயன்பாட்டுக்கு 4 கோடி பேர் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி, ஜியோ பைபர் திட்டத்தின் மூலம் பிராட்பேண்ட் சேவையை வீடுகளுக்கு அளிக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மிக குறைந்த ரூ.700 கட்டணத்தில் லேண்ட் லைன் சேவை, இணையதள சேவை, டிஜிட்டல் டிவி சேவை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைந்து வழங்க உள்ளதாக ஜியோ நிறுவனம் கூறியுள்ளது சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜியோ பைபர் சேவை செப்டம்பர் 5-ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என ஜியோ நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
ஜியோ நிறுவனத்தில் தற்போது 30 கோடி பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஜியோ பைபர் திட்டத்தை மாதம் ரூ.700 கட்டணத்துக்கு அந்நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும் நிலையில், ஸ்மார்ட் டிவி விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என்பதே சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இன்றைய இளம் தலைமுறையினரிடம் சாதாரண டிவி மீதான மோகம் வெகுவாக குறைந்து வருகிறது. கணினியில் உள்ள அனைத்து அம்சங்களும் டிவியிலும் இடம்பெற வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக, விடியோ செயலிகள், விளையாட்டு இதர பொழுதுபோக்கு சேவைகள் அனைத்தும் டிவியில் இடம்பெற வேண்டும் என்பதே பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு. இந்த அனைத்து அம்சங்களையும் ஸ்மார்ட் டிவி உள்ளடக்கியுள்ளதால் வருங்காலத்தில் அதன் விற்பனை புயல் வேகத்தில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.




- அ. ராஜன் பழனிக்குமார்

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...