Tuesday, August 6, 2019

`எஸ்.எம்.எஸ்ஸில் விடைகள்!' - கேரளாவை அதிரவைத்த காவலர் தேர்வு முறைகேடு 

சிந்து ஆர்  vikatan

போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில், விடைகளை எஸ்.எம்.எஸ் மூலம் பெற்று முதலிடம் பிடித்த எஸ்.எஃப்.ஐ மாணவர்களின் முறைகேட்டை சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.



கேரள அரசு பணியாளர் தேர்வாணயம்

முறைகேட்டில் ஈடுபட்ட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது.

சிவரஞ்சித் & நஸீர்

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி எஸ்.எஃப்.ஐ. மாணவர் சங்க நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆற்றுகால் பகுதி எஸ் எஃப்.ஐ நிர்வாகி அகில் சந்திரன் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் பல்கலைக்கழக எஸ்.எஃப்.ஐ. தலைவர் சிவரஞ்சித், எஸ்.எஃப்.ஐ செயலாளர் நஸீர், பிரணவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிவரஞ்சித்தின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில் பல்கலைக்கழகத் தேர்வுக்கான விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநரின் சீலும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரணை நடத்தியதில் சிவரஞ்சித், கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வில் 96 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் இருப்பது தெரியவந்தது. அதுபோல எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகளில் ஒருவரான பிரணவ் 78 மதிப்பெண் பெற்றிருந்தது தெரியவந்தது. பல்கலைக்கழக விடைத்தாளில் மோசடி நடந்ததா என விசாரணை நடத்துவதற்காக ஏற்கெனவே தேர்வு நடத்தப்பட்ட விடைத்தாள்களை போலீஸ் கேட்டிருந்தது.

கேரள பல்கலைகழகம்

ஆனால், விடைதாள்கள் காணாமல் போய்விட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கேரள அரசுப் பணியாளர் தேர்வின்போது சிவரஞ்சித் மற்றும் பிரணவ் ஆகியோர் மொபைல்போன் பயன்படுத்தியதாகவும். அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் விடைகள் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் எம்.கே.ஸ்க்கீர் கூறுகையில், ``காவலர் தேர்வில் சிவரஞ்சித் மற்றும் பிரணவ் ஆகியோர் இரண்டு மணி முதல் மூன்றேகால் மணிவரை போனில் விடைகளைப் பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவரஞ்சித்துக்கு இரண்டு எண்களில் இருந்தும், பிரணவுக்கு மூன்று எண்களில் இருந்தும் எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.

கேரள அரசு பணியாளர் தேர்வாணயம்


கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி நடந்த இந்தக் காவலர் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் மொபைல் எண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மிகப்பெரிய அளவில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வர்களுக்கு வெளியில் இருந்து சிலர் உதவியுள்ளதால் காவல்துறை விசாரணை கோரியுள்ளோம்" என்றார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024