Wednesday, August 7, 2019

பி.ஆர்க்., தரவரிசையில் குளறுபடி :கவுன்சிலிங் ரத்து செய்ய கோரிக்கை

Added : ஆக 07, 2019 01:27

சென்னை:பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தரவரிசையில் குளறுபடி நிகழ்ந்துள்ளதால், கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 'ஆர்கிடெக்ட்' என்ற, கட்டட வடிவமைப்பு கலை பயிற்றுவிக்கும் கல்லுாரிகளில், பி.ஆர்க்., முதலாம் ஆண்டு கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க, 1,827 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால், நடத்தவில்லை.

மாறாக, 'கட் ஆப்' மதிப்பெண் மற்றும் தரவரிசை அடிப்படையில், கவுன்சிலிங்கில் நேரடியாக பங்கேற்க, மாணவர்கள் அழைக்கப்பட்டனர். நேற்று, இன்று, நாளை என, மூன்று நாட்கள், மாணவர்களின் பெயர்கள் பிரிக்கப்பட்டு, கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர்.சென்னை, தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில், நேற்று காலையில், சிறப்பு பிரிவினருக்கு, கவுன்சிலிங் துவங்கியது.

அப்போது, சான்றிதழ் சரிபார்த்ததில், சிலரது தரவரிசை மாறியிருந்தது. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு, கவுன்சிலிங் முடிந்தது.பின் மதியம், 2:00 மணிக்கு மேல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான, கவுன்சிலிங் துவங்கியது.அப்போது, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடு துவங்கியது.

இதில், பல மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதிகள் மாறின. ஜாதி சான்றிதழ் இல்லாதது, உரிய கல்வி தகுதி பெறாதது, 'நாட்டா' மதிப்பெண் பதிவில் தவறு போன்ற பிரச்னையால், பல மாணவர்கள், தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.அதனால், அனைவருக்குமே தரவரிசை மாறும் நிலை ஏற்பட்டது. பின், அங்கேயே, தரவரிசை மாற்றி வழங்கப்பட்டது.

அதனால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பல மாணவர்கள், இன்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்க காத்திருக்கின்றனர். அவர்களுக்கு, இந்த குளறுபடி தெரியாது.இது குறித்து, பெற்றோர்கள் கூறியதாவது:சான்றிதழ் சரிபார்ப்பை, கவுன்சிலிங்குக்கு முன்பே நடத்தாமல் விட்டதால், இவ்வளவு குளறுபடி ஏற்பட்டுள்ளது.

குறைந்த மதிப்பெண் உள்ளவர்களுக்கு, முன்னணி கல்லுாரிகளிலும், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, பின்வரிசை கல்லுாரிகளிலும் இடம் கிடைக்கும் அபாயம் உள்ளது.இந்த கவுன்சிலிங்கை ரத்து செய்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்திய பின், தரவரிசை பட்டியல் வெளியிட்டு, இடங்களை ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.உயர் கல்வி துறை அமைச்சர், அன்பழகனிடம் கேட்டபோது, ''இதுகுறித்து, விசாரணை நடத்தி, பிரச்னை இருந்தால், அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

T.N. orders merging of govt. data centre and pension directorate with treasuries dept.

T.N. orders merging of govt. data centre and pension directorate with treasuries dept. The Hindu Bureau CHENNAI 17.11.2024  The Tamil Nadu g...