Sunday, August 11, 2019

கோவை அரசு மருத்துவமனையில் அள்ளிக் கொடுக்கப்படும் மாத்திரைகள்: எந்த மாத்திரையை எப்போது உட்கொள்வது? புரியாமல் திணறும் நோயாளிகள் 



த.சத்தியசீலன்

கோவை 10.08.2019

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் அள்ளிக் கொடுக்கப் படுகின்றன. எந்த மாத்திரையை எப்போது உட்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் திணறுகின்றனர், நோயாளிகள்.

கோவை-திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாகவும், 1,500 முதல் 1,700 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் பாதிப்புக்கு ஏற்ப வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை, மொத்தமாக அள்ளிக் கொடுப்பதால், எந்த மாத்திரையை எப்போது சாப்பிடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர், நோயாளிகள்.

“சிகிச்சை பெறுவதற்கு, நோயாளிகள் விவரம், நோயின் தன்மை குறித்து தெரிவித்து அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும். அதன்பின்னர் பரிசோதனை செய்து, நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுக்கின்றனர்.

மருந்து கொடுக்கும் இடத்தில் மருத்துவர் எழுதி கொடுக்கும் மாத்திரைகளை இந்தந்த மாத்திரைகளை, இந்தந்த வேளைகளில் உட்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறி, அள்ளி கொடுத்து விடுகின்றனர். வீட்டுக்குச் சென்றவுடன் எந்த மாத்திரையை எப்போது உட்கொள்ள வேண்டும் என்பது மறந்து விடுகிறது. படிப்பறிவற்றவர்கள், முதியவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். மருத்துவர்கள் எழுதிய மருந்துச்சீட்டை படிக்கத் தெரிந்தவர்கள் மாத்திரைகளைக் கண்டுபிடித்து உட்கொள்கின்றனர். ஆனால் படிக்காதவர்களுக்கு முடியாது.

எந்தெந்த மாத்திரைகளை, எப்போது உட்கொள்ள வேண்டும் என்று பேப்பர் கவரில் எழுதி, அதில் மருந்து மாத்திரைகளைப் போட்டு கொடுத்தால் காலை, மதியம், இரவு குறிப்பிட்டுள்ளதைப் பார்த்து மருந்துகளை உட்கொள்ள நோயாளிகளுக்கு எளிதாக இருக்கும்” என்றனர், நோயாளிகள்.

இது குறித்து கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ் கூறும்போது, ‘நோயாளிகளுக்கு மாத்திரைகளை பேப்பர் கவரில் தெளிவாக எழுதி கொடுக்க வேண்டியது அவசியம். மருந்து, மாத்திரைகள் நோயாளிகளின் உயிருடன் சம்பந்தமுடையது. கோடிக்கணக்கில் முதலீடு செய்து சிகிச்சைக்காக கருவிகள், உபகரணங்கள் வாங்கப் படுகின்றன. மாத்திரைகளைப் போட்டு கொடுக்க பேப்பர் கவர்கள் வாங்கி வைக்கலாம். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இம்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளித்தால், பேப்பர் கவர்களை மருத்துவமனைகளுக்கு வழங்குவர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...