Saturday, August 24, 2019

தலைவலியல்ல, புற்றுநோய்!

By ஆசிரியர் | Published on : 24th August 2019 01:33 AM

ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடரும் மக்கள் போராட்டம் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. சீனா ஒருபுறம் பொறுமை இழந்து வருகிறது என்றால், இன்னொரு புறம் ஆசியாவின் பொருளாதார மையங்களில் ஒன்றான ஹாங்காங்கில் அலுவல்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஹாங்காங் பிரச்னை காரணமாக சீனாவுக்கு வரும் முதலீடுகளில் தேக்கம் ஏற்பட்டிருப்பது அதன் ஏற்றுமதியையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. 

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், 1997-இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சர்வாதிகார ஆளுமையில் உள்ள கம்யூனிஸ்ட் சீனாவைப் போல அல்லாமல், ஹாங்காங்கில் முன்பு போலவே ஜனநாயகம் தொடரும் என்கிற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஒரே நாடு இரண்டு நிர்வாக முறைகள் என்கிற அடிப்படையில் ஹாங்காங்கின் அரசை மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

கடந்த 20 ஆண்டுகளில் ஹாங்காங் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கைவிடப்படுகின்றன. தலைமை நிர்வாகியின்தேர்வுக்கு நேரடித் தேர்தல் என்பது கைவிடப்பட்டது முதல் ஹாங்காங் மக்கள் மத்தியில் சீன ஆட்சியாளர்கள் மீது ஒருவிதமான வெறுப்பும், சலிப்பும் ஏற்படத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்னால் குடைகளை ஏந்திக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஹாங்காங் வீதிகளில் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினார்கள். அதன் நீட்சியாகத்தான் இப்போதைய போராட்டத்தைக் கருத வேண்டும். 
 
ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சீனாவுக்கு அழைத்துப் போய் விசாரிப்பது என்று கூறப்பட்டது. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமேயானால், அதைப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரானவர்களை ஹாங்காங்கிலிருந்து அப்புறப்படுத்திவிட முடியும் என்கிற அச்சம்தான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம். 

மக்கள் போராட்டம் பெருமளவில் வலுத்தவுடன் அதை எதிர்கொள்ள முடியாமல், நாடு கடத்தல் சட்டத்தை தற்போதைக்கு நிறுத்திவைப்பதாக கேரி லாம் அறிவித்தார். போராட்டக்காரர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், ஒருவேளை நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது. 

ஒரு கட்டத்தில் ஹாங்காங்கின் நாடாளுமன்றக் கட்டடத்தைக் கைப்பற்றி போராட்டக்காரர்கள் சேதம் ஏற்படுத்தினார்கள். இரண்டு வாரங்கள் முன்பு ஹாங்காங் விமான நிலையம் போராட்டக்காரர்களால் நிறைந்தபோது, ஹாங்காங்கின் விமானப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இப்போதும்கூட, ஹாங்காங்கின் விமான சேவை தடைபட்டிருக்கிறது. இவையெல்லாம் மிக அதிகமான நிதி பரிவர்த்தனை நடக்கும் ஆசியாவின் பொருளாதார மையமான ஹாங்காங்கை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன. 

நாடு கடத்தும் சட்டத்தை கேரி லாம் ஆரம்பத்திலேயே கைவிடாமல் போனதால், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் இப்போது அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. நாடு கடத்தும் சட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று கூறிய போராட்டக்காரர்கள், அடுத்தகட்ட கோரிக்கையாக தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தனர். இப்போது கேரி லாம் பதவி விலகினாலும்கூட, தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிடுவதாக இல்லை. நாடு கடத்தும் சட்டத்தைக் கைவிடுவது, கேரி லாம் பதவி விலகுவது, காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்குகள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும் என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது வரை அவர்களது கோரிக்கைகள் நீண்டு கொண்டே போகின்றன.

கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் தொடரும் போராட்டத்தை, 1989-இல் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலையுடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். ஆனால், கம்யூனிஸ சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்த ஆயிரக்கணக்கான மாணவர்களை ஈவிரக்கம் இல்லாமல் தியானன்மென் சதுக்கத்தில் சுட்டுக் கொன்று போராட்டத்துக்கு முடிவு கட்டியதுபோல, ஹாங்காங்கை அடக்கிவிட முடியாது. இப்போது உலக வல்லரசாகியிருக்கும் சீனா, தன்னுடைய கெளரவத்தையும், பொருளாதார ஸ்திரத் தன்மையையும் ஹாங்காங்கில் அடக்குமுறை நடத்தி தொலைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. 

அமெரிக்காவின் ஆசிபெற்ற தனி நாடான தைவான் தீவு போராட்டக்காரர்களுக்கு உதவுகிறது என்கிற சீனாவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக்கூடும். சீனாவின் கையிலிருந்து ஹாங்காங் நழுவினால், அடுத்தகட்டமாக ஏற்கெனவே சீனாவுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பெளத்தர்கள் நிறைந்த திபெத்தும், உயிகர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியும் ஹாங்காங்கைத் தொடர்ந்து வெளியேற முற்படும். அதனால், ஹாங்காங்கை விட்டுவிடவும் முடியாமல், போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியாமல் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறது சீனா.
புரட்சியால் உருவான கம்யூனிஸ சீனா, இப்போது ஹாங்காங்கில் நடக்கும் போராட்டக்காரர்களின் புரட்சியால் அலமலந்து போயிருக்கிறது.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...