Sunday, August 18, 2019

அதிக மதிப்பெண் பெற்ற மாணவியரை ஆகாயத்தில் பறக்க வைத்த மக்கள்!

Updated : ஆக 18, 2019 01:50



நாமக்கல், அரசு பள்ளியில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவியரை, தலைமையாசிரியரோடு, விமானத்தில், சென்னைக்கு, கல்விச் சுற்றுலா அனுப்பியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், காவேட்டிப்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. தலைமை ஆசிரியராக, கயல்விழி, 50, உள்ளார். அப்பள்ளியில், 110 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

அங்கு, 2018 - 19ம் கல்வியாண்டில், எட்டாம் வகுப்பில், ஜெய்சிகாஸ்ரீ, 14, என்ற மாணவி, முதல் மதிப்பெண்ணும், சல்மா, 14, என்ற மாணவி, இரண்டாம் மதிப்பெண்ணும் பெற்றனர்.அவர்களை பாராட்டும் விதமாகவும், நடப்பாண்டு, மாணவ - மாணவியரை ஊக்குவிக்கும் வகையிலும், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள், இரு மாணவியர் மற்றும் தலைமை ஆசிரியரை, விமானத்தில், சென்னைக்கு கல்விச் சுற்றுலா அனுப்ப முடிவுசெய்தனர்.

இதையடுத்து அவர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு, சேலத்திலிருந்து, விமானத்தில், சென்னை வந்தனர். கவர்னர் மாளிகை, அண்ணா நுாலகம், வள்ளுவர்கோட்டம், கடற்கரை மற்றும் ஐ.ஐ.டி., ஆகியவற்றை பார்வையிட்டனர். நேற்று இரவு, ரயிலில், சேலத்திற்கு திரும்பி சென்றனர்.

கல்வி சுற்றுலாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஊர் மக்கள் செய்துள்ளனர். மாணவியர் மற்றும் தலைமையாசிரியரை விமானத்தில் பயணிக்க செய்து, கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராம மக்களை, சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.04.2024