Monday, August 26, 2019

சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா? இன்று விசாரணை

Updated : ஆக 26, 2019 06:39 | Added : ஆக 26, 2019 06:37

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள, முன்ஜாமின் மனு மீது இன்று(ஆக.,26) விசாரணை நடைபெறுகிறது.

மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீட்டைப் பெற, 2007ல் அதற்கு அனுமதி வழங்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர், சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, அவருடைய மகன் கார்த்தியின் தலையீட்டால் அனுமதி வழங்கப்பட்டதாக, இந்த அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம் தொடர்ந்திருந்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, அவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இன்று(26ம் தேதி) வரை, நான்கு நாட்கள் காவலில் விசாரிக்க, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், அனுமதி அளித்தது.

இந்நிலையில் சிபிஐ.,யின் நான்கு நாள் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். காவல் நீட்டிப்பு கேட்டு சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
முன் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024