Monday, August 26, 2019

தலையங்கம்

விண்ணைநோக்கி எகிறும் தங்கத்தின் விலை

உலகம் முழுவதிலும் தங்கத்திற்கென தனி மவுசு இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தங்கம் ஒரு தனி மதிப்புடன் உலவி வந்திருப்பதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன.

ஆகஸ்ட் 26 2019, 04:00

உலகம் முழுவதிலும் தங்கத்திற்கென தனி மவுசு இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தங்கம் ஒரு தனி மதிப்புடன் உலவி வந்திருப்பதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன. பண்டையகால மக்கள் குறிப்பாக மன்னர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை மிகப்பெருமையாக கருதி இருக்கிறார்கள். அதனால்தான் மன்னர்கள் இறந்தவுடனும், அவர்கள் குடும்பத்தினர் இறந்தவுடனும் அவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களோடு புதைக்கும் வழக்கம் இருந்தது என பல அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தங்க ஆபரணங்களுக்கு 7 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு உண்டு. தொடர்ந்து இன்றையநாள் வரை ஆபரணங்களாக அணிவதற்கும், அதற்கும் மேலாக சேமிப்பாக முதலீடு செய்வதற்கும் தங்கம்தான் உயர்ந்ததாக கருதப்படுகிறது. பல இடங்களில் வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டுமின்றி, ஏழை–எளிய வீடு என்றாலும் திருமண பேச்சு நடக்கும்போது பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுகிறீர்கள்? என்று கேட்பதும் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ளது.

பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. ஆனால் தங்கத்தின் மதிப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக குடும்பங்களிலும் தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கம் காலம்காலமாக இருக்கிறது. குறிப்பாக விவசாய குடும்பங்களில் ஏதாவது பொருளாதார நெருக்கடி, அதாவது அவசர செலவுகள் வரும்போது உடனடி பணத்தேவைக்காக தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள வீடுகளில் மட்டும் 20 ஆயிரம் டன்னுக்கும் மேலாக தங்கம் இருக்கிறது. மற்ற சேமிப்புகளைவிட, தங்கத்தில் செய்யப்படும் முதலீடு குறைந்த காலத்தில் அதிக வருவாய் கிடைக்கிறது என்றும் மக்களிடையே கருத்து நிலவுகிறது. இவ்வளவுக்கும் இந்தியாவில் தங்கம் கிடைப்பதில்லை. ஆண்டுதோறும் ஏறத்தாழ ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தாற்போல, அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருள் இந்தியாவில் தங்கம்தான். பல நாட்கள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை அதன்பிறகு இடை இடையே சில நாட்கள் மட்டும் சற்று இறங்கியபிறகு, மீண்டும் உயர்ந்து விண்ணை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.29,440. அடுத்த ஒருசில நாட்களில் ஒரு பவுனின் விலை ரூ.30 ஆயிரத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண ஏழை–எளிய வீடுகளில்கூட இப்போது ஆவணி மாதம் பிறந்துவிட்ட நேரத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாமே என்று நினைப்பவர்கள் மனதில் எல்லாம் இந்த விலை உயர்வு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வதற்கு இந்தியா எந்தவகையிலும் காரணமல்ல. பொதுவாக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகம் இருந்தால் தங்கத்தின் விலை குறையும். தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறையப்போகிறது என்ற அச்சமும், அமெரிக்கா–சீனாவுக்கு இடையே நடக்கும் வர்த்தகப்போர் காரணமாக, இது உறுதியாக நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், சீனாவின் யுவான் நாணய மதிப்பு இறக்கம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்கம் என்று பல்வேறு சர்வதேச பிரச்சினைகளின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏற்றத்துக்கான எந்த காரணமும் சீரடைவதுபோல் தெரியாததால், தங்கத்தின் விலை சமீபத்தில் குறைவதற்கான சாத்தியமே இல்லை. மொத்தத்தில், தங்கம் வாங்குபவர்களுக்கும், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கும் நிச்சயமாக இது ஒரு சுமைதான்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...