Sunday, January 5, 2020

நீட் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் புதிய மனு

By நமது நிருபர் | Published on : 05th January 2020 03:24 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு "ரிட்' மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தது.

நீட் தேர்வை கட்டாயமாக்கி, கடந்த 2017 மற்றும் 2018-இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை மத்திய அரசு 2016-இல் பிறப்பித்தது.

எனினும், தமிழகத்துக்கு அந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.

நிகழாண்டுக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடை   முறைகள் டங்கப்பட்டுள்ளன. இதற்கான கடைசி தேதி ஜனவரி 6 ஆகும்.இந்நிலையில், நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை தமிழக சுகாதாரத் துறை சார்பில் புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 மற்றும் 2018-இல் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தத்துக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு, மத்திய சுகாதார- குடும்ப நல அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்டவை பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் மனுவில், "நீட் தேர்வை கட்டாயமாக்கும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டங்களில் முறையே 2017, 2018-ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தின் உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. சமூகத்துக்கு மாநில அரசு செய்யும் கடமைகளைத் தடுக்கும் வகையில் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பள்ளித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற நிலையிலும் நீட் தேர்வு காரணமாக அவர்களால் மருத்துவ சேர்க்கை பெற முடியவில்லை. இதனால், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. ஆகவே, அந்த திருத்தங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024