சென்னை கூட்டத்தால், 'வெட்டிச்செலவு' 'சிண்டிகேட்' உறுப்பினர்கள் அதிருப்தி
Added : மார் 14, 2020 22:39
கோவை: கோவை பாரதியார் உட்பட பிற பல்கலைகளின், 'சிண்டிகேட்' கூட்டம், சென்னையில் நடத்தப்படுவதால், தேவையற்ற செலவினம், சிரமங்கள் ஏற்படுவதாக, உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துஉள்ளனர்.
கடந்த ஆண்டுகளில், கோவை பாரதியார் பல்கலையில், துணைவேந்தர் இல்லாத சமயத்தில், உயர்கல்வி துறை முன்னாள் செயலர் மங்கத்ராம் சர்மா தலைமையில், சிண்டிகேட் கூட்டங்கள், சென்னை செயலர் அலுவலகத்தில் நடத்தப்பட்டன.தற்போது, துணைவேந்தராக காளிராஜ் செயல்பட்டு வரும் நிலையிலும், சிண்டிகேட் கூட்டம் வரும், 20ம் தேதி, சென்னை செயலர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இதற்கு, உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பல லட்சம், 'காலி'பாரதியார் பல்கலையில் இருந்து, 12 சிண்டிகேட் உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், நிர்வாக அதிகாரிகள், ஓட்டுனர் என, 20 பேர், இக்கூட்டத்துக்காக சென்னை செல்ல உள்ளனர்.
இவர்களுக்கான, விமான டிக்கெட், தனித்தனி வாகன வசதி, நட்சத்திர ஓட்டல், உணவு என, பல்வேறு பிரிவுகளில் செலவினங்கள் உள்ளன. ஒரு கூட்டத்துக்கு, குறைந்தபட்சம், 5 லட்சம் ரூபாய் செலவாகும் எனக், கூறப்படுகிறது.
இதுபோன்ற, அனைத்து பல்கலைகளின் நிர்வாகிகளும் சென்று வந்தால், பல லட்சம் தேவையின்றி செலவிட வேண்டிஇருக்கும்.அறிவுறுத்தல்சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'சிண்டிகேட் கூட்டம், பல்கலை வளாகத்தில் நடத்த வேண்டும் என்பதே விதிமுறை. தற்போது, பட்ஜெட் கூட்டம் நடப்பதால், அனைவரையும் சென்னை வர அறிவுறுத்தியுள்ளனர்.'
சனி, ஞாயிற்று கிழமைகளில், பட்ஜெட் கூட்டத்தொடர் இல்லாத நிலையில், பல்கலை கூட்டத்தில், செயலர் உள்ளிட்ட பிறர் பங்கேற்கலாம். 'ஆனால், அவரவர் வசதிக்காக, பல்கலைக்கு தேவையற்ற செலவினங்களை ஏற்படுத்தி வருகின்றனர்' என்றார்.துணைவேந்தர் விளக்கம்துணைவேந்தர் காளிராஜ் கூறியதாவது:பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதால், செயலர் மற்றும் பிற துறை செயலர்கள், அதிகாரிகள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல இயலாது. மார்ச் இறுதிக்குள், அனைத்து பல்கலையின் நிதிக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.பாரதியார் பல்கலையின் நிதிக்குழு கூட்டம், 20ம் தேதி காலையும், சிண்டிகேட் கூட்டம், மதியமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில், உயர்கல்வித் துறை செயலர், நிதித் துறை அதிகாரிகள், கல்லுாரி கல்வி இயக்குனர் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக, கூட்டம் சென்னையில் நடத்தப்படுகிறது. இனி வரும் காலங்களில், கட்டாயம் பல்கலையில் தான் நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'கொரோனா' பீதிமத்திய, மாநில அரசுகள், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையை, தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தேவையற்ற பயணங்களை தவிர்க்க, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஒவ்வொரு பல்கலையில் இருந்தும், 20 பேர் சிண்டிகேட் கூட்டத்துக்காக, சென்னை சென்று வருவது, உறுப்பினர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment