Wednesday, April 8, 2020


ஊரடங்கு: குடியை மறக்கக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு!- மீள வழிசொல்லும் முன்னாள் குடிநோயாளி   08.04.2020

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. காந்தியவாதி சசிபெருமாள் தொடங்கி பலரும் மதுவுக்கு எதிராகப் போராடிய போதும் மூடப்படாத மதுக்கடைகளை கரோனா அச்சம் மூடவைத்திருக்கிறது.

படித்தவர்கள் நிறைந்த கேரளத்திலேயே மது கிடைக்காத விரக்தியில் ஒரே வாரத்தில் 9 பேர் தற்கொலை செய்துகொண்டனர். தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் இல்லாததால் சேவிங் லோஷன் உள்ளிட்டவற்றைக் குடித்து உயிர்விட்ட சம்பவங்களும் நடந்தன.

ஆனால், ஒட்டுமொத்தக் குடிநோயாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இந்த இழப்புகள் மிக மிகக் குறைவான எண்ணிக்கையாகும். இந்த நிலையில், தற்போது மூடிக் கிடக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துவருகிறது.

அதேநேரத்தில் இப்படியான சூழலைப் பயன்படுத்தி குடிநோயாளிகள் மிக எளிதாக அதிலிருந்து மீண்டுவர முடியும் எனப் பாதை காட்டுகிறார் ரமேஷ். நாகர்கோவில், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இவர் முன்னாள் குடிநோயாளி. அதில் இருந்து முற்றாக விடுபட்டு நாகர்கோவிலில் உள்ள ஏசுசபை போதைநோய் பணிக் குழுவில் ஆற்றுப்படுத்துநராக இருக்கிறார்.

அவர் இதுகுறித்து 'இந்து தமிழ் திசை'யிடம் கூறியதாவது; “100 குடிகாரர்களில் 20 பேர்தான் குடிநோயாளியாக இருப்பார்கள். இவர்கள் மது வேண்டாம் என மனதளவில் நினைத்தாலும் இவர்களது உடல் மதுவுக்கு ஏங்கும். நானும் 15 ஆண்டுகள் தீவிர குடிநோயாளியாக இருந்தேன். காலையில் டூத் பேஸ்ட்டின் மூடியைக் கூட திறக்க முடியாத அளவுக்கு என் கைகள் அப்போது நடுங்கும்.

பிரஷில் பேஸ்ட்டை வைக்கவே மிகவும் போராடுவேன். பல் தேய்ச்சதுமே வாந்தி வரும். அதுக்காகவே பல் தேய்க்காமல் இருப்பேன். உயிர்வாழ ஆக்சிஜன் தேவை இல்லை... ஆல்கஹால்தான் தேவைன்னு எனக்கு நானே நினைக்க ஆரம்பித்த தருணம் அது. என் சட்டையில் இருக்கும் ஐந்து பட்டனைப் போடுவதற்குள் டைப்ரைட்டிங் மிஷினில் கைவைத்த விரலைப் போல ஆட்டம் பிடிக்கும்.

அப்போது நாகர்கோவிலில் கம்ப்யூட்டர் சென்டர் வெச்சுருந்தேன். காலையிலேயே குடித்துவிட்டுத்தான் சென்டர் திறக்கவே போவேன். அங்கேயும் பாட்டில் வாங்கி வைச்சுருப்பேன். குடிக்க ஆரம்பிச்ச புதுசில் பூமித்தாய்க்கு மூணு சொட்டுன்னு கீழ சிந்துவேன். ஆனா போகப் போக, அந்த மூணு சொட்டையும் விட்டுக்கொடுக்க மனசில்லாத அளவுக்கு தீவிரக் குடிநோயாளி ஆகிட்டேன்.



அப்படிப்பட்ட நானே குடியிலிருந்து மீண்டு வந்துட்டேன். இதுதான் கடைசி பாட்டில்னு நினைச்சே ஒரு ஆயிரம் பாட்டில் குடிச்சிருப்பேன். இந்த ஊரடங்கும், மதுக்கடைகள் மூடிக்கிடப்பதும் குடி நோயாளிகளுக்கு கிடைச்ச மிகப்பெரிய வரம். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி சில நுட்பங்களைச் செய்தாலே குடியில் இருந்து நிரந்தரமாக மீண்டு விடலாம்.

குடிநோயாளிகள் முதல்ல சரியான நேரத்துக்கு உணவை எடுத்துக்கணும். எக்காரணம் கொண்டும் கோபப்படக் கூடாது. அதேமாதிரி, குடியை நிறுத்துனவங்க கடினமான வேலைகளைச் செய்யக்கூடாது. அப்படி செஞ்சா உடம்பு இளைப்பாறுதலுக்கு போதையைத் தேட ஆரம்பிச்சுடும். அதேமாதிரி, சரியான நேரத்துக்குச் சாப்பிட்டு வயிறு நிறைஞ்சுட்டா குடிக்கணும்னு எண்ணம் வராது.

காரணம், உளவியல் ரீதியாவே குடிநோயாளிகள் நல்லா குடிச்சுட்டு சாப்பிடணும்னு பழகியிருப்பாங்க. தனிமையான சூழலை தவிர்த்துட்டு குடும்ப உறுப்பினர்களோடு அதிக நேரத்தைச் செலவு செய்யணும். இனிய இசையை கேட்பதும் நல்ல பலன் கொடுக்கும். ஊரடங்கு காலத்தில் இதையெல்லாம் அவங்க செய்யலாம்.

ஆனால், இவற்றால் மட்டும் குடிப்பழக்கம் போய்விடாது. மது அரக்கனைவிட மன அரக்கன் கொடூரமானவன். என் வாழ்விலும் அப்படி நடந்தது. குடியை விட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையில் ஒரு சம்பவம் நடந்தது. செல்போனில் ரீசார்ஜ் செய்ய ஒருகடைக்குப் போயிருந்தேன். அங்கு ஒருவர் கையில் ஜின் வகை மது வைத்திருந்தார். உடனே, மனம் சஞ்சலப்பட்டது. ஒருநாளைக்கு முந்நூறு ரூபாய்க்கு குறையாமல் குடித்தவன் நான். அப்படிப் பார்த்தால் மூன்று வருடங்களில் மூன்று லட்ச ரூபாய் மிச்சம் பிடித்திருக்கிறேன். ஆனால், இந்த ஜின்னை ஒருநாள் அடித்தால் என்ன எனத் தோன்றியது. அடிக்காதே என்ற உப பதிலையும் மனமே சொன்னது. உடனே, என்னைப் போல் குடிநோயில் இருந்து மீண்ட என் வழிகாட்டி ஒருவருக்கு போன் செய்தேன்.


அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர் முதலில், சாப்பிட்டீங்களா? என்றார். இல்லை என்று சொன்னதும், பக்கத்தில் உணவகம் இருக்கிறதா? எனக் கேட்டார். நான் இல்லை என்றதும், பேக்கரியாவது இருக்கிறதா? என விடாமல் கேட்டார். ஆனால், அதுவும் அங்கு இல்லை. உடனே உங்கள் வீட்டுக்கும், நீங்கள் நிற்கும் இடத்துக்கும் எவ்வளவு தூரம் எனக் கேட்டார். ஒரு கிலோ மீட்டர் என்றேன். அதற்கு அவர், அப்படியானால் உடனே வீட்டுக்குப் போய் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு கூப்பிடுங்கள் பேசுவோம் என சொல்லிவிட்டு கட் செய்தார்.

நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு கை கழுவும்போது அவர் என்னை அழைத்தார். ஆனால், வயிறு நிறைய சாப்பிட்டதுமே எனக்குக் குடிக்கும் ஆசை போய்விட்டது. வீட்டுக்குப் போய் சாப்பிடும்போது குழந்தையைப் பார்த்ததும்கூட உளவியல்ரீதியாக ஒரு காரணம். இதேபோல் குடிக்கும் ஆசை வரும்போது இனிப்பு சாப்பிட்டாலும் மனம் வேறு திசையில் திரும்பும்.

குடியை நிறுத்திய பின்பு அல்லது பாட்டில் கிடைக்காத சில தினங்கள் சவாலான நாள்கள். அதில் 3, 7 மற்றும் 14-வது நாள்கள் முக்கியமானவை. குடியை விட்ட அந்த நாள்களில் ஏதோ ஒரு உருவம் அழைப்பது, காதில் பாடல் கேட்பது, பாம்பு சுற்றுவது, சங்குச் சத்தம் ஆகியவற்றை நான் உணர்ந்தேன். ‘நீ போய் செத்துவிடு’ என ஏதோ ஒருகுரல் என்னைத் தற்கொலைக்கு தூண்டிக்கொண்டே இருந்தது.

இது எல்லாமே மது கிடைக்காத உளவியல் சிக்கல்தான். மனநல மருத்துவரிடம் ஆலோசித்தால் அதற்கும் தீர்வு கிடைத்துவிடும். குடிக்க ஆசைப்படும்போது, இன்று வேண்டாம் என்னும் மனநிலையோடு பாட்டிலை தொடப்போனாலும் குடியை நிறுத்திவிடலாம். அதேபோல், குடிநோயாளி உணர்ச்சி வயப்படவும் கூடாது. அவர் இந்த கரோனா காலத்திலேயே மீண்டுவர அவர்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம்” என்றார் ரமேஷ்.


இதுகுறித்து மனநல மருத்துவரான எஸ். மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டதற்கு, குடியிலிருந்து மீண்டு வந்த ரமேஷ் சொல்வது உண்மையே. இது மிதமான, ஓரளவு அதிகமாகக் குடிக்கும் குடிநோயாளிகளுக்குப் பொருந்தும்.



குடிநோயில் சிக்கி இருப்பவர்களுக்கு குடிக்க வேண்டும் என்ற உந்துதல் வரும். உடனே குடிக்காதீர்கள். ஒரு இருபது அல்லது முப்பது நிமிடங்கள் பொறுக்க வேண்டும். அதன்பின் அது தானாகவே அடங்கிவிடும். அந்த இடைவெளியில் வயிறார உணவு உட்கொண்டு விட வேண்டும். குடும்பத்தினரிடம் வந்து ஐக்கியமாகி விட வேண்டும். முக்கியமாகத் தனிமையில் இருக்கக் கூடாது.

வழக்கமான நாட்களாக இருப்பின் ஒரு சினிமாவுக்கோ அல்லது ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களுக்கோ சென்று நம் கவனத்தைத் திசை திருப்பிக் கொள்ளலாம். அல்லது உடனே ஒரு (மதுப்பழக்கமில்லாத) உற்ற நண்பனை அழைத்துப் பேசி மன சஞ்சலத்தைப் போக்கிக் கொள்ளலாம். இல்லையேல் உங்களுக்குச் சிகிச்சையளித்த மருத்துவரிடமோ உளவியல் ஆலோசகரிடமோ ஆலோசனை பெற்றால் நீங்கள் தடம் புரள்வதிலிருந்து தப்பிக்கலாம்.

குடிக்கத் தூண்டும் உந்துதலைக் கட்டுப்படுத்த வல்ல மருந்துகள் மற்றும் குடித்தால் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மருத்துவச் சிகிச்சையும் உண்டு. மனநல மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் இத்தகைய சிகிச்சைகளை எடுத்துக் கொண்ட எத்தனையோ பேர் இன்று மதுவிலிருந்து மீண்டு விட்டனர்.

தீவிரமான குடிநோயாளிகளுக்கு இச்சூழலில் வலிப்பு மற்றும் 'டெலிரியம்' (Delirium) என்று சொல்லக்கூடிய குழப்ப நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் உடனே மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்” என்றார் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024