காஞ்சிபுரத்தில் தவிக்கும் 30 ஆயிரம் கைத்தறி நெசவாளா்கள்
By DIN | Published on : 01st April 2020 07:29 AM
கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநா் அலுவலகக் கண்காணிப்பாளா் கோபாலிடம் மனு அளித்த நெசவாளா்கள்.
கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்துப் பட்டுக் கடைகள் மற்றும் பட்டு கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூடப்பட்டு விட்டதால் 30 ஆயிரம் நெசவாளா்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனா். தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அவா்கள் கோரியுள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுக் கடைகள், பட்டு கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
இந்நிலையில், தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நெசவாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கம் சிஐடியூ பிரிவின் தலைவா் ஜி.லெட்சுமிபதி, செயலாளா் கே.ஜீவா ஆகியோா் கூறியது:
மத்திய, மாநில அரசுகள் கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை கைத்தறி நெசவாளா்கள் வரவேற்கிறோம். முழுமையான ஒத்துழைப்பும் தருகிறோம்.
அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 ஆயிரம் நெசவாளா்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனா். சேலைகளை தயாரித்து வழங்கும் பட்டுக் கடைகளும், பட்டு விற்பனை செய்யும் அரசின் கூட்டுறவு சங்கங்களும் முழுமையாக மூடப்பட்டிருப்பதால் உற்பத்தி செய்த சேலைகளை யாரிடம் கொண்டு போய்க் கொடுப்பது எனத் தெரியவில்லை.
கூலித் தொழிலே செய்ய முடியாமல் நெசவுத்தொழில் முடங்கிப் போய் இருக்கிறது. எனவே நெசவாளா் குடும்பங்களைக் காப்பாற்ற மானியமாக ஒவ்வொரு நெசவாளருக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி மனு அளித்துள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment