Tuesday, April 7, 2020

கொரோனா வைரஸ் யாருக்கும் பரவலாம்! அறிகுறி இருந்தால் சிகிச்சைக்கு வர அறிவுரை

Added : ஏப் 07, 2020 00:42


சென்னை: தமிழகத்தில், 'கொரோனா'வுக்கு பலியானோரின் எண்ணிக்கை, ஆறாக உயர்ந்துள்ளது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 621 ஆகவும் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், 50 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ''தமிழகத்தில், யாருக்கு வேண்டுமானாலும், கொரோனா வைரஸ் பரவலாம்; எப்படி பரவியது என்று, அவர்களுக்கே தெரியாது. பாதிப்பு இருப்பவர்கள் தானாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும்,'' என, சுகாதாரத்துறை செயலர், பீலா ராஜேஷ் கூறினார்.

டில்லியில் நடந்த, மத ரீதியான மாநாட்டில், தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் பங்கேற்றனர். அவர்கள், தமிழகத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்த போது, கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காணும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 507 பேர் உட்பட, 571 பேராக இருந்தது; இறந்தவர்கள் எண்ணிக்கை, ஐந்தாக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும், 50 பேருக்கு புதிதாக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கொரோனா பாதிப்பை தொடர்ந்து, 91 ஆயிரத்து, 851 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அரசு கண்காணிப்பு மையங்களில், 205 பேர் உள்ளனர். 28 நாட்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பு முடிந்து, 19 ஆயிரத்து, 60 பேர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதுவரை, 5,016 பேரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

அதில், புதிதாக, 50 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், இரண்டு பேர் சென்னையை சேர்ந்தவர்கள். அவர்களில், 57 வயது பெண்ணுக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. அவர், கடைசி நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், சென்னையில் இருந்து, திருச்சிக்கு ரயிலில் சென்று திரும்பியது தெரிய வந்துள்ளது. அவருக்கு தொற்று ஏற்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம். இதன் வாயிலாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஆறாக உயர்ந்துள்ளது.

அதேபோல, டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது, புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 573 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதுவரை, டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 1,475 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில், 885 பேருக்கு பாதிப்பு இல்லை என, தெரிய வந்துள்ளது; தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், 250 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.

தமிழகத்தில் இதுவரை, 32 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், 'சீல்' வைக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம். அது, எப்படி பரவியது என்று, அவர்களுக்கே தெரியாது. எனவே, வைரஸ் பாதித்தவர்களை, தவறாக சித்தரிக்க கூடாது. பாதிப்பு உள்ளவர்கள், தானாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவக்கூடாது என்பதற்காக, காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து, தொழில்நுட்ப உதவியுடன், பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

71 வயது முதியவர் பலி

சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த, 71 முதியவர், கொரோனா அறிகுறியுடன், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என, தெரியவந்தது

* சென்னை அண்ணாநகரில் கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் ஒருவருக்கு, தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதுபோன்ற தகவல் எதுவும் இல்லை என, சுகாதாரத்துறை மறுத்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியல்

மாவட்டங்கள் / எண்ணிக்கை

சென்னை - 110

கோவை - 59

திண்டுக்கல் - 45

திருநெல்வேலி - 38

ஈரோடு - 32

திருச்சி -30

நாமக்கல் - 28

ராணிப்பேட்டை - 25

செங்கல்பட்டு - 24

கரூர் -23

தேனி - 23

மதுரை - 19

விழுப்புரம் - 16

கடலுார் - 13

சேலம் - 12

திருவள்ளூர் - 12

திருவாரூர் - 12

நாகை - 11

துாத்துக்குடி -11

விருதுநகர் - 11

திருப்பத்துார் - 11

திருவண்ணாமலை - 9

தஞ்சாவூர் - 8

திருப்பூர் -7

கன்னியாகுமரி - 6

காஞ்சிபுரம் - 6

சிவங்கங்கை - 5

வேலுார் - 5

நீலகிரி - 4

கள்ளக்குறிஞ்சி -2

ராமநாதபுரம் -2

அரியலுார் -1

பெரம்பூர் -1

மொத்தம் - 621

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024