மருத்துவமனை 'டீன்'களுக்கு அறிவுறுத்துவாரா முதல்வர்? கவசப் பொருட்களை உடனடியாக விடுவிக்க கோரிக்கை
Updated : ஏப் 07, 2020 01:30 | Added : ஏப் 07, 2020 00:38
சென்னை: 'கொரோனா' வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை உடனே வழங்கும்படி மருத்துவமனை 'டீன்'களுக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை அரசு போதிய அளவு கொள்முதல் செய்தபோதும் மருத்துவமனை டீன்கள் 'இண்டென்ட்' தயாரித்து அனுப்பி அவற்றை பெறுவதில் காலதாமதம் செய்வதாக தெரிகிறது. இதனால் பாதுகாப்பு விவகாரத்தில் அரசாங்க சம்பிரதாயங்கள் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க தேவையான மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக மூன்றடுக்கு முகக்கவசங்கள், 'என்- 95' முகக்கவசங்கள், 'வென்டிலேட்டர்'கள், பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா நோய் தாக்குதலை தடுப்பதில் முன்னணி படை வீரர்களாக அரசு மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் அரசு சிறப்பு மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
கொரோனா வார்டுகளில் மின் இணைப்பு மற்றும் கருவிகளை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித் துறை 'எலக்ட்ரிஷியன்'களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. தேவையான அளவு முகக்கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அது உரியவர்களை சென்றடையவில்லை. பல அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் பணியில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கள் சொந்த பணத்தில் தங்களுக்கு தேவையான முக கவசங்கள் மற்றும் கையுறைகளை வாங்கி வருகின்றனர்.
பல குடும்பத்தினர் 'வாட்ஸ் ஆப்' குழு வாயிலாக தங்கள் வீட்டு மாணவர்களுக்கு தேவையான மருத்துவ கருவிகளுக்கு பணம் திரட்டும் அவலம் நடந்து வருகிறது. அவர்கள் வெளிச்சந்தையில் பாதுகாப்பு உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
முதல்வர் பழனிசாமி நேற்று '3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. மேலும் 2,500 வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 'என் 95' உள்ளிட்ட முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளன. துரித பரிசோதனை உபகரணங்கள் ஒரு லட்சம் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
ஆனால் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏன் அவை சென்றடையவில்லை என தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக வட்டாரத்தில் விசாரித்த போது பல உண்மைகள் தெரிய வந்தன.
அந்த வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கழகத்தின் கிடங்குகளில் போதுமான அளவு முகக்கவசங்கள் உள்ளன. மேலும் தேவைப்படும் பாதுகாப்பு ஆடைகள் 'ஆர்டர்' செய்யப்பட்டுள்ளன. ஒரு சில நாட்களில் அவை வந்து விடும்.ஆனால் இவற்றை போதுமான அளவு 'இண்டென்ட்' தயாரித்து அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டியது அந்தந்த மருத்துமனைகளின் டீன்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகளின் பொறுப்பு. ஆனால் அவர்கள் தாமதம் செய்து வருகின்றனர்.
எனவே மருத்துவமனை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வாங்கி வழங்கும்படி மருத்துவமனை டீன்களுக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்.தற்போதுள்ள சூழ்நிலையில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதை உணர்ந்து டீன்கள் செயல்பட வேண்டும். தாமதம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கமான 'பைல்' நடவடிக்கைகளை தவிர்த்து விரைவாக பாதுகாப்பு உபகரணங்கள் களப் பணியாளர்களை சென்றடைய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் மருத்துவ பணிகள் கழகத்தின் கிடங்குகளில் இருந்து தேவைப்படும் பாதுகாப்பு கவசங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் மருத்துவமனைகளுக்குப் போய் சேர்ந்திருக்கின்றன என்பதையும் சுகாதாரச் செயலர் தன்னுடைய அன்றாட செய்திக் குறிப்பில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment