Thursday, April 2, 2020

மது கிடைக்காத குடி நோயாளிகள்.. குடும்பத்தினருக்கு எச்சரிக்கை!


2.4.2020

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் குடிநோயாளி ஒருவர் மது கிடைக்காததால் தனது கழுத்தை பிளேடால் கீறிக் கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார் என்றொரு செய்தி. இவர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என நாம் நினைத்தாலும், குடியில் இருந்து மீண்டு வரும்போது ஏற்படும் வித்ட்ராயல் அறிகுறிகளின் விளைவாகக் கூடஅவரது தற்கொலை அமைந்திருக்கலாம்.

குடியில் இருந்து மீண்டு வரும்போது ஏற்படும் தொல்லைகளை ‘ஆல்கஹால் வித்ட்ராயல் சிண்ட்ரோம்’ என்போம். இன்றைய ஊரடங்கு நாட்களில் குடிநோயாளிகள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினை இது.மனித மூளையில் ‘ரிவார்டு சென்டர்’ என்றொரு பகுதியில் ஏற்படும் வேதிப்பொருட்களின் மாற்றமே ஒருவன் குடிக்கு அடிமையாக காரணம். இவர்களால் குடிக்காமல் இருக்க முடியாது. முழு நேரமும் உடலும் மனமும் மதுவையே சார்ந்திருக்கும் குடிநோயாளிகளாக இருப்பார்கள்.

இப்படி மதுவுக்கு அடிமைப்பட்ட குடிநோயாளி மது கிடைக்காத இந்நாட்களில் எப்படி இருப்பார்?

குடி பழக்கம் உள்ள அனைவரையும் குடிநோயாளிகள் எனச் சொல்லிவிடமுடியாது. அதேபோல் மிதமாகக் குடிக்கிற, ஆரோக்கியமான இடைவெளி விட்டுக் குடிக்கிற, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிப்படையாத நிலையில் நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் குடி பழக்கம் உள்ளவர்களுக்கு மிக தீவிரமாக வித்ட்ராவல் அறிகுறிகள் இருப்பதில்லை.


தீவிர குடிநோயாளிகளுக்கு குடியை நிறுத்தி 6-லிருந்து 8 மணி நேரத்துக்குள்ளாக கைவிரல்களில் நடுக்கம் இருக்கும். சிலருக்கு வியர்க்கும். குமட்டல், லேசான வயிற்றுப்போக்கு, நெஞ்சு படபடப்புபோன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

அதையடுத்து 8 மணி நேரம் முதல் 12 மணி நேரத்துக்குள்ளாக மனப்பிறழ் உணர்வு தொந்தரவுகள் ஏற்படலாம். யாரும் பேசாமல் காதில்மாயக் குரல்கள் கேட்கலாம். மிரட்டுவது போலவும் பயமுறுத்துவது போலவும் அக்குரல்கள் இருக்கும்.

இதற்கும் அடுத்த கட்டம் வலிப்புவரும் நிலை (ரம் ஃபிட்ஸ்) . இது மதுவை நிறுத்தி 12 மணி நேரம் முதல் 24 மணிநேரத்தில் வரும்பாதிப்பு. அப்படி வலிப்பு வரும்நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருந்து நோயாளிக்கு முதலுதவி அளிப்பதுடன், மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது.டாக்டர் எஸ்.மோகன வெங்கடாசலபதி

ஆபத்தான நிலை இதுதான்

இதற்கு அடுத்த நிலை ஆபத்தானது. குடியை நிறுத்திய 3 நாட்களில் இருந்து இந்த ‘ரிஸ்க்’ ஆரம்பிக்கும். குடி நோயாளி ஒரு விதகுழப்ப நிலைக்கு செல்வார். தானாகப் பேசுவார். கடும் எரிச்சலுடன் காணப்படுவார். குடி நோயாளியின் இந்நிலையை ’டெலிரியம் ட்ரெமென்ஸ்’ என்று சொல்வோம். இந்நிலை ஒரு மருத்துவ அவசர நிலையாகும். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தால் ஒரு சில நாட்களில் நிலைமை சற்றே சீரடையும்.

குடிநோயாளிகள் அனைவருக்கும் ‘டெலிரியம் ட்ரெமென்ஸ்’ வரும் என புரிந்துகொள்ளக் கூடாது.அளவுக்கு அதிகமான குடி, உணவே சாப்பிடாமல் குடித்து அனைத்து சத்துப் பொருட்களையும் இழந்த குடி நோயாளிதான் இப்படி பாதிப்படைவர்.

கரோனா தாக்கியவர்களில் மிகச் சொற்பமான சதவிகிதத்தினரே உயிரிழக்க நேரிடும். அது போன்று மிகச் சொற்பமானவர்களுக்கு வரும் இந்நிலை குறித்து, குடிநோயாளிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் சில எச்சரிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டும். காரணம், தற்போதைய அசாதரணமான சூழலில் குடி நோயாளிகள் ஆபத்துகளை சந்திக்காமல் இருக்க, உடனே மருத்துவ உதவியை நாடினால் பல சேதாரங்களைத் தவிர்க்கலாம்.

குடி நோயாளிகள் எப்படி மீள்வது?

குடி நோயாளிகள் இந்த ‘வித்ட்ராவல்’ அறிகுறிகளை வீட்டிலேயே சரி செய்துகொள்ள முடியும். கை கால் நடுக்கம், தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை, படபடப்பு, வாந்தி போன்றவை தானாகவே சரியாகிவிடும். நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காலை சூரிய வெளிச்சத்தில் உலாவ வேண்டும். குடும்பத்தினரின் அன்பு, அரவணைப்பு மற்றும் அருகில் இருத்தல் குடி நோயாளிக்கு இந்நேரத்தில் மிக அவசியம். இந்த சந்தர்ப்பத்தை நேர்மறையாக எதிர்கொண்டு மதுவில் இருந்து மீண்டு வந்துவிட முடியும் என்கிற உந்துதலை குடிநோயாளிக்கு குடும்பத்தினர் கொடுக்க வேண்டும்.

நான்கைந்து நாட்கள் சமாளித்துவிட்டால் உடலில் இருக்கும் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி (detoxification) தனது உண்மையான ஆரோக்கியத்தை அவரே உணர ஆரம்பிப்பார். உடலும் மனமும் புத்துணர்ச்சிஅடையும். இத்தருணத்தில், தொடர்ந்த ஆலோசனைகள் மூலம் அவரை குடி பழக்கத்தில் இருந்து மீட்டெடுத்து விட முடியும்.

யாருக்கு கவனம் தேவை?

தீவிர அறிகுறிகளான வலிப்பு மற்றும் ‘டெலிரியம்’ என்ற குழப்ப நிலையில் இருந்தால் மருத்துவ உதவியை நாடியே ஆக வேண்டும்.

இந்த அறிகுறிகள் குடி பழக்கத்துக்கு அடிமையான நபரிடம் தென்பட்டால், குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்குச் சென்றால் குடி நோயாளியை மீட்டெடுக்க முடியும்.

இது போன்ற அசாதாரண சூழலில் அரசும் பிற மருத்துவ அமைப்புகளும் குடிநோயாளிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024