யார் இந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.,?
Updated : ஏப் 07, 2020 01:51 | Added : ஏப் 06, 2020 23:29
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்., இவரை தான் இன்று இன்று தமிழகமே உற்று நோக்குகிறது. ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை, என அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஊடகங்கள் முன்பு புள்ளிவிவரங்களுடன் இவர் தான் அறிவித்து வருகிறார். இவர் தான் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒரு தொடர்பு பாலமாகவும் இருக்கிறார். கொரோனா அளவுக்கு தமிழகத்தில் இப்போது பலருக்கும் தெரிந்த பெயர் பீலா ராஜேஷ். யார் இந்த பீலா ராஜேஷ்.. அவரது பின்புலம் என்ன?
பாரம்பரிய குடும்பம்:
பீலா ராஜேஷ் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். வெங்டேசன் - ராணி தம்பதிகளுக்கு மகளாக 1969ம் ஆண்டு பிறந்தார். பீலாவின் அப்பா வெங்கடேசன், போலீஸ் டி.ஜி.பி.,யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது அம்மா ராணி வெங்கடேசன், பாரம்பர்ய காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன், 2006 சட்டசபைத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனவர். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி தான் வெங்கடேசனின் சொந்த ஊர்.
வெங்கடேசன் - ராணி வெங்கடேசன் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் கார்த்திக். மகள் பீனா இருவரும் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட, மற்றொரு மகள் பீலா மட்டும் இந்தியாவில் இருக்கிறார்.
டாக்டர்.. பின் ஐ.ஏ.எஸ்.,:
பீலா, படித்து, வளர்ந்தது எல்லாமே சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம் தான். படிப்பில் கெட்டிக்காரராக இருந்த பீலா, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தார். 1989 ஒடிசா கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராஜேஷ் தாஸை காதலித்து 1992ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின், ராஜேஷ் தாஸ் தமிழகத்துக்கு தன் பணியிடத்தை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். தற்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் ஏ.டி.ஜி.பி.,யாக ராஜேஷ் தாஸ் உள்ளார். கொட்டிவாக்கத்திலுள்ள இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேதான் பீலா ராஜேஷின் பெற்றோரும் வசிக்கின்றனர்.
வைராக்கியம்:
கணவரைப் போல தானும் படித்து உயர்பொறுப்புக்கு வர வேண்டுமென்ற உத்வேகத்தில், இந்திய குடிமைப் பணிகள் தேர்வெழுதி 1997ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஆனார் பீலா ராஜேஷ். முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர் ஒதுக்கப்பட்டது. ஐ.பி.எஸ்., அதிகாரியான தன் கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை மேற்கோள்காட்டி, 2000-ம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை தற்காலிகமாக மாற்றிக்கொண்டார்.
பின்னர், 2003-ம் ஆண்டு பீகாரிலிருந்து பிரிந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின் மத்திய அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். நீண்ட போராட்டத்துக்குப் பின், மீண்டும் தமிழ்நாடு கேடர், இவருக்குக் கிடைத்தது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு துணை கலெக்டர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், சுகாதாரத்துறை செயலாளராக, 2019 பிப்., மாதம் பொறுப்பேற்றார். ஆரம்பம் முதலே பீலா ராஜேஷ் துடிப்புடன் செயலாற்றுவதில் பெயர் பெற்றவர். இரவு எந்நேரமானாலும் கொட்டிவாக்கத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்குச் சென்ற பின் தான் இரவு உணவை உண்பார்.
இறகுப் பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பீலா, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பணிச்சூழல் காரணமாக இப்போது விளையாடுவதில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பீலா ராஜேஷுக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது. தினமும் காலை 8 மணிக்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் சண்முகம் இருவரிடத்திலும் கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட்டுகளை பகிர்ந்துகொள்கிறார்.
18 மணி நேரம் உழைப்பு:
தமிழகம் முழுவதும் எடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை, புதிய நோயாளிகளின் பட்டியல் என்று ஒருநாளைக்கு 18 மணிநேரம் பம்பரமாக உழைக்கிறார். இரவு 12 மணி வரையில் கொரோனா நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றால், காலை 6 மணிக்கெல்லாம் திரும்ப எழுந்துவிடுகிறார்.
பீலா ராஜேஷிடமிருந்துதான் தினமும் ரிப்போர்ட்டுகளை மத்திய அரசும் பெறுகிறது. பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, தமிழகம் பரபரப்பாகி உள்ள சூழலில், பதற்றமில்லாமல் நிதானத்துடனும் ஓய்வில்லாமலும் பணியாற்ற வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு பீலா ராஜேஷுக்கு இருக்கிறது. ஊடகங்களை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எதிர்கொண்டு அனைத்து புள்ளிவிவரங்களையும் தெரிவித்து வருகிறார்.
மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள இவர், கொரோனாவையும் வெல்வோம் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்துள்ளார். அவரது துரித நடவடிக்கைகள் தொடரட்டும்...
No comments:
Post a Comment