Wednesday, April 8, 2020


வங்கிகளில் ரூ.2,000 கோடி கடன் வாங்க மின்வாரியம் முடிவு

Updated : ஏப் 08, 2020 07:00 | Added : ஏப் 08, 2020 06:58

சென்னை: மின் கட்டணம் வசூலிக்காததால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து, 2,000 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.

பராமரிப்பு பணி:

தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, மாதம் 3,000 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம், மின் நிலையங்களுக்கான எரிபொருள், பழுது மற்றும் பராமரிப்பு பணி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகமாக இருப்பதால், மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' ஆகிய நிதி நிறுவனங்களிடம் இருந்தும், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளிடம் இருந்தும், மின் வாரியம் கடன் வாங்குகிறது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 24 நள்ளிரவு முதல், ஏப். 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து, மார்ச், 25 முதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், அபராதம் இன்றி, ஏப். 14ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம், அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல்:

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் போன்றவை செயல்படாததால், தினமும், 10 கோடி யூனிட்கள் வரை, மின்சார விற்பனையும் பாதித்துள்ளது. இதனால், செலவுகளை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து, குறுகிய கால கடனாக, 2,000 கோடி ரூபாய் வாங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024