Sunday, April 5, 2020

கரோனா எதிரொலி: மாணவர்கள் வீட்டிலிருந்தே TOEFL, GRE தேர்வுகளை எழுதலாம்

03.04.2020

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேசத் தேர்வுகளான டோஃபல் மற்றும் ஜிஆர்இ தேர்வுகளை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்கப் பரவி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்துள்ள கரோனா வைரஸால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகக் கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் டோஃபல் மற்றும் ஜிஆர்இ தேர்வுகளை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டோஃபல் நிர்வாக இயக்குநர் ஸ்ரீகாந்த் கோபால் கூறும்போது, ''கரோனா வைரஸால் மாணவர்கள் குறிப்பாக தேர்வு எழுதுபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தேர்வு மையங்களில் நடைபெறுவதாக இருந்த டோஃபல் மற்றும் ஜிஆர்இ தேர்வுகளை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம். சூழல் சரியாகும்வரை இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்புத் தன்மையுடன் மாணவர்கள் உயர் தரத்தில் தேர்வெழுதும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயற்கை நுண்ணறிவு வசதியைக் கொண்டு அதிதொழில்நுட்பக் கண்காணிப்பு வசதியோடு தேர்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழித் திறனைச் சோதிக்கும் தேர்வு டோஃபல் (TOEFL) எனப்படுகிறது. இத்தேர்வில் ஆங்கிலத்தை வாசிக்கும் திறன், கேட்டுப் புரிந்துகொள்ளும் திறன், ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் திறன் ஆகியவை சோதிக்கப்படுகின்றன. இந்த நான்கு விதமான சோதனைகளில் குறிப்பிட்ட மதிப்பெண்களைக் குவித்தால் மட்டுமே வெளிநாட்டு மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தும் அயல் நாடுகளில் சிறந்த கல்வி நிலையங்களில் படிக்க முடியும். இதுவரை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 150 நாடுகளில் டோஃபல் தேர்வு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜிஆர்இ (GRE) தேர்வானது மாணவர்களின் யோசிக்கும் திறன், ஆங்கிலம், கணிதத்தில் ஈடுபாடு, எழுதும் திறன், தர்க்க அறிவு ஆகியவற்றைச் சோதிக்கிறது. இத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளைப் படிக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024