Tuesday, June 23, 2020

அரசு அலுவலக பணி நடைமுறை வெளியிடாதது அதிருப்தி


அரசு அலுவலக பணி நடைமுறை வெளியிடாதது அதிருப்தி

Added : ஜூன் 22, 2020 23:05

சென்னை; 'அரசு அலுவலகங்களில், 33 சதவீத பணியாளர்கள், எவ்வாறு பணியாற்ற வேண்டும்' என, அரசாணை வெளியிடாதது, அரசு ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அடுத்தடுத்து ஊரடங்குஆரம்பத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் தவிர்த்து, மற்ற துறைகளில், 33 சதவீத பணியாளர்கள் பணிபுரிய, அரசு உத்தரவிட்டது.

அவர்கள் பணிக்கு வந்து செல்ல, அரசு சார்பில், போக்குவரத்து வசதி செய்யப்பட்டது.அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மே, 18ம் தேதி முதல், 50 சதவீதம் ஊழியர்கள் பணிபுரிய, அரசு உத்தரவிட்டது. அப்போது, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என, அரசு அறிவித்தது; இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.தற்போது, அரசு அறிவித்த ஊரடங்கு, வரும், 30 வரை அமலில் இருக்கும். எனினும், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நோய் பரவல் அதிகமாக உள்ளதால், அப்பகுதிகளுக்கு மட்டும், ஜூன், 19 முதல், 30 வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பகுதிகளில், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில், 33 சதவீத பணியாளர்கள் பணிபுரிய, அரசு அனுமதி அளித்தது. ஆனால், எந்த அடிப்படையில், 33 சதவீத பணியாளர்கள் பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தவில்லை. இது, அரசு ஊழியர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது:அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதித்தபோது, அவர்கள் சுழற்சி முறையில், எப்படி பணிபுரிய வேண்டும் என்று, அரசு அறிவித்தது.அரசாணைஅதேபோல், 33 சதவீத பணியாளர்கள் மட்டும் பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிட்டபோது, ஊழியர்கள், சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டுமா; விடுப்பு எடுக்கலாமா என்பது உள்ளிட்ட, பணி நடைமுறைகளை, அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும்.அதை செய்யாததால், பல அலுவலகங்களில் குழப்பம் ஏற்பட்டுஉள்ளது. அதேபோல, 50 சதவீத பணியாளர்கள் பணிபுரிய அரசாணை வெளியிட்ட அரசு, அந்த பணிக் காலத்தில், ஊழியர்கள் விடுப்பு எடுப்பதற்கான விதிமுறைகளை, மிகவும் காலதாமதமாக வெளியிட்டது.தற்போது, விடுப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சில ஊழியர்கள், அலுவலகம் வராமல் உள்ளனர். அவர்கள் பணிக்கு வராதது, விடுப்பாக கருதப்படுமா, பணி நாளாக கருதப்படுமா என்பதும் தெரியவில்லை.அரசு தெளிவான அறிவுரை கூறாததால், பணிக்கு வராதவரும், பணிக்கு வந்தது போல் கணக்கிட வாய்ப்புள்ளது. அரசு தெளிவான அறிவுரையை அறிவித்தால், ஊழியர்கள் அதற்கேற்ப பணிபுரிய உதவியாக இருக்கும்.மேலும், தற்போது போக்குவரத்து வசதியும் செய்து தரப்படவில்லை. குறைந்த ஊழியர்களே வருவதால், பணியும் நடக்கவில்லை. எனவே, ஜூன், 30 வரை, அத்தியாவசியப் பணிகள் அல்லாத அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024