மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.,க்கு ஒதுக்கீடு
Added : ஜூன் 22, 2020 22:40
சென்னை; மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத இடங்களை வழங்க கோரிய வழக்கின் விசாரணையை, ஜூலை, 9க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் பட்டய படிப்பு இடங்களில், 15 சதவீதம்; முதுநிலை படிப்பில், 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படுகின்றன.வழக்குஇந்த இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., - திராவிட கழகம் ஆகிய கட்சிகளும், 27 சதவீத ஒதுக்கீடு கோரி, பா.ம.க.,வும் மனுக்கள் தாக்கல் செய்தன.இவ்வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீத ஒதுக்கீடு கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், அடுத்த மாதம், 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
அந்த வழக்கில், மத்திய சுகாதார துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மாநில ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.'ஆனால், மொத்த ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான தற்போதைய ஒதுக்கீட்டில், எந்த இடையூறும் இருக்காது' என, கூறப்பட்டுள்ளது.எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், மனுதாரர்கள் இணைந்து கொள்ளலாம்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சாத்தியம்இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், ''இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீத ஒதுக்கீடு கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், ஜூலை, 8ல் விசாரணைக்கு வருகிறது.''அதனால், இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.
தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் வாதாடியதாவது:மத்திய அரசின் பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, ஒதுக்கீடு வழங்க சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மொத்தமாக, 50 சதவீதம் ஒதுக்கீடு தான் என்பதை ஏற்க முடியாது.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதற்காக, எங்களையும் அங்கே செல்லும்படி, மத்திய அரசு கூற முடியாது.மாநில அரசு ஒப்படைக்கும் இடங்களுக்கு, மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு பொருந்தும்.இவ்வாறு, அவர் வாதாடினார்.இதையடுத்து, வழக்கு விசாரணையை, ஜூலை, 9க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment