Tuesday, June 9, 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு


மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

Updated : ஜூன் 09, 2020 12:11 | Added : ஜூன் 09, 2020 12:05

புதுடில்லி: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு ஊழியர்கள், அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சிலர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். எனவே பணியில் உள்ள ஒவ்வொரு ஊழியரும் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வதுடன், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும், மத்திய அரசு அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:

1. கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும். லேசான அறிகுறி அல்லது இருமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

2. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வசிக்கும் அதிகாரிகள்/ ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் மாறும் வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.

3. ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர கூடாது. பட்டியல் அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும். மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்.

4. ஒரே அறையில் பகிர்ந்து கொள்ளும் செயலர் மற்றும் துணை செயலர்கள், மாற்று நாட்களில் வருவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

5. ஒரு பிரிவில் ஒரே நேரத்தில் 2 ஊழியருக்கு மேல் இருக்க கூடாது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்தில் 20 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேல் இருக்க கூடாது. காற்றோட்டம் இருக்கும் வகையில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

6. அலுவலகத்தில் உள்ளேயும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலக வளாகத்திற்குள் முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

7. பயன்படுத்தபட்ட முகக்கவசம் மற்றும் கையுறைகளை கவனமாக மஞ்சள் நிற பயோ கழிவுகள் தொட்டியில் மட்டுமே போட வேண்டும். பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை திறந்தவெளியிலோ, மற்ற குப்பைகளோடு வீசியெறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்களிடம் மருத்துவ கழிவுகளை கையாள்வது குறித்து பொது பிரிவு அறிவுறுத்த வேண்டும்.

8. நேரடி சந்திப்பு, கூட்டம் மற்றும் ஆலோசனைகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதிகாரிகள், ஊழியர்கள், ஆலோசனைகள் நடத்த போன், இண்டர்காம், வீடியோகால் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

9. அதிகாரிகள் தங்கள் அறைகளில் இருந்து வீடியோ கால் செய்யலாம். வழக்கமாக கூடும் இடத்தில் இருந்து வீடியோ கால் செய்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தேவையான சாதனங்களை பொது பிரிவில் இருந்து பெற்று கொள்ளலாம். தங்களது கணினி மூலம் வீடியோ கான்பரன்சில் இணைந்து கொள்ளலாம்.

10. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை கழுவுவது நோய் தொற்று பரவுவதை தடுக்க உதவும். எனவே அலுவலகத்தின் முக்கியமான இடங்களில் கைகளை கழுவ சானிடைசர்களை வைத்திருக்க வேண்டும்.

11. அடிக்கடி தொடக்கூடிய எலெக்ட்ரிக் சுவிட்சு, கதவு கைப்பிடி, லிப்ட் பட்டன்கள், கழிப்பறை சாதனங்கள் உள்ளிட்டவற்றை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை 1% சோடியம் ஹைபோகுளோரைடு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். ஊழியர்கள் கீபோர்டு, மவுஸ், போன்கள், ஏசி ரிமோட் உள்ளிட்டவற்றையும் எத்தனால் சார்ந்த கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

12. நடக்கும் போதும், அமரும் போதும் 1 மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். பார்வையாளர்களுக்கு போடப்பட்டுள்ள நாற்காலிகள் உரிய சமூக இடைவெளி நடைமுறைகளுடன் போடப்பட்டிருக்க வேண்டும்.

13. அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024