Wednesday, February 3, 2021

69 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்'

69 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்'

Added : பிப் 02, 2021 21:39

புதுடில்லி:தமிழகத்தில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில், 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு, இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த, சி.வி.காயத்திரி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில், 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இவை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 30 சதவீதம், மிகவும் பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு, 18 சதவீதம், பழங்குடியினருக்கு, 1 சதவீதம் என்ற அடிப்படையில் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

கர்நாடகாவைச் சேர்ந்த, பாலாஜி என்பவரது வழக்கில், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு பணிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு, 50 சதவீத உச்சவரம்பை தாண்டக் கூடாது என, உச்ச நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் வழங்கப்படும், 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த மனு தொடர்பாக, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024