Wednesday, May 12, 2021

தன்னாட்சி அந்தஸ்து விண்ணப்பம் யு.ஜி.சி.,க்கு அதிகாரம்: ஐகோர்ட்


தன்னாட்சி அந்தஸ்து விண்ணப்பம் யு.ஜி.சி.,க்கு அதிகாரம்: ஐகோர்ட்

Added : மே 11, 2021 23:04

சென்னை:'தன்னாட்சி அந்தஸ்து கோரும் கல்லுாரிகளின் விண்ணப்பங்கள் மீது, தகுதி அடிப்படையில் பல்கலை மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில்உள்ள அன்னபூரணா பொறியியல் கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்து கோரி, அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பம், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,க்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், மாணவர்கள் சேர்க்கை குறைவு, தேர்ச்சி விகிதம் குறைவு என காரணங்களை காட்டி, அண்ணா பல்கலை நிராகரித்தது.

இதையடுத்து, தன்னாட்சி அந்தஸ்து அளிக்கக்கோரி, நேரடியாக யு.ஜி.சி.,க்கு, அன்னபூரணா கல்லுாரி விண்ணப்பித்தது. அதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலை நிராகரித்ததை எதிர்த்தும், விண்ணப்பத்தை பரிசீலிக்க, யு.ஜி.சி.,க்கு உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கந்தன் துரைசாமி, அண்ணா பல்கலை சார்பில், வழக்கறிஞர் விஜயகுமார், யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர் ரபு மனோகர் ஆஜராகினர்.மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

தன்னாட்சி அந்தஸ்து கோரும் விண்ணப்பங்களை, சுதந்திரமாக யு.ஜி.சி., பரிசீலிக்க எந்த தடையும் இல்லை. விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட பல்கலை வழியாக விண்ணப்பங்கள் வர வேண்டும். அந்த விண்ணப்பங்களை, பரிந்துரைகளுடன் யு.ஜி.சி.,க்கு அனுப்பலாம் அல்லது காரணங்களை குறிப்பிட்டு பல்கலை நிராகரிக்கலாம்.

அவ்வாறு பல்கலை நிராகரித்தாலும், மேல் நடவடிக்கைக்காக, அதை யு.ஜி.சி.,க்கு தான் அனுப்ப வேண்டும். அது தான் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம். இரண்டு காரணங்களை குறிப்பிட்டு, விண்ணப்பத்தை அண்ணா பல்கலை நிராகரித்துள்ளது.இந்த இரண்டு காரணங்களும், விண்ணப்பத்தை சுதந்திரமாக பரிசீலிப்பதற்கு குறுக்கே நிற்குமா என்பதை, யு.ஜி.சி., தான் முடிவெடுக்க வேண்டும்; பல்கலை அல்ல.

மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை, சட்டப்படி தகுதி அடிப்படையில், சுதந்திரமாக யு.ஜி.சி., பரிசீலிக்க முடியும்.எனவே, தன்னாட்சி அந்தஸ்து கோரி, மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை, யு.ஜி.சி., பரிசீலிக்க வேண்டும். அவ்வாறு பரிசீலிக்கும் போது, அண்ணா பல்கலை தெரிவித்து உள்ள கருத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.இரண்டு மாதங்களில் முடிவெடுத்து, இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024