Tuesday, October 28, 2025

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!


மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

 உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுவதைப் பற்றி...

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

 முனைவர் என். பத்ரி Published on: 

 Updated on: 28 அக்டோபர் 2025, 3:50 am 2 min read

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 20% பேர் அதைப் பற்றி அறிந்திருப்பதே இல்லை. நமது சராசரி ஆயுட்காலமான 79 ஆண்டுகளில் மனநலப் பிரச்னைகளால் நாம் சராசரியாக 50 முதல் 60 ஆண்டுகள் வரை வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, சமூகத் தொடர்புகள் இல்லாமை, நீண்ட தொலைவில் வேலை, நீண்ட காலத்துக்கு வீடுகளில் அடைபட்டு இருந்தது போன்றவை நம்மில் பலரின் மனநலனை வெகுவாகப் பாதித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, மனித இயலாமைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மனச்சோர்வு ஆகும். 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்டவர்களிடையே தற்கொலை மரணத்துக்கான நான்காவது முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. மனச்சோர்வு உலக அளவில் ஏழு இளம் பருவத்தினரில் ஒருவரைப் பாதிக்கிறது.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மனநல மருத்துவ மசோதா, மனநல பாதிப்பு கொண்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டியுள்ளது. ஆனால், இந்த மசோதா அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள், நிதி வசதிகள் குறித்து தெளிவாக வரையறுக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

2017-18-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தப் பங்கீடு மிக மிகக் குறைவு. 2013-14 ஆண்டிலிருந்தே சுகாதாரத் துறைக்கான செலவினம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியத்துக்கான மொத்த நிதிநிலை ஒதுக்கீட்டில் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே மனநலனுக்காக ஒதுக்கப்படுகிறது.

146 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாடு முழுவதும் உள்ள 812 மருத்துவக் கல்லூரிகளில் 9,000 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் 650 பேர்தான் பதிவுசெய்த மனநல மருத்துவர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மற்ற சாதாரண மக்களை விட 40% அதிகம் எனக் கூறப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும் 8 நோயாளிகளில் ஒருவருக்கு மனநல பிரச்னை உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 43 அரசு மனநல மருத்துவமனைகளில் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு லட்சம் மன நோயாளிகளுக்கு மொத்த மருத்துவ ஊழியர்களில் 0.3 மனநல மருத்துவர்கள், 0.17 செவிலியர்கள், 0.05 உளவியல் நிபுணர்களே இருக்கின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை மாவட்ட மனநல மருத்துவத் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார மையங்களில் வாரத்துக்கு ஒரு முறை நோயாளிகளைத் தேடி மனநல மருத்துவர்கள் செல்லும் நிலை உள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் 40 படுக்கைகள் மனநல சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்னைகள், பெண்கள், குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் என முழுமையான மருத்துவத்தின் ஒரு பிரிவாகவே மனநலப் பிரச்னைகள் கருதப்பட்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதுமையில் மனநலன் என்பது மனச்சோர்வு, பதற்றம், மறதி நோய் போன்ற பல சவால்களை உள்ளடக்கியது. தனிமை, மாறிவரும் குடும்பச் சூழல், உடல்நலக் குறைபாடுகள் (புற்றுநோய், இதய நோய்) போன்றவை இதற்குக் காரணங்களாகும். முதுமையில் மனநலனைப் பேண தனிமையைத் தவிர்ப்பதும், உடல் நலத்தைக் கவனிப்பதும், மன அழுத்தத்தைக் குறைப்பதும் மிகவும் அவசியம்.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மனக்காயம் அடைந்துவிடாமல் அவர்களை மிகுந்த கண்ணியத்தோடும், மரியாதையோடும் நடத்த வேண்டும்.

மனநலத்தை மேம்படுத்தும் பயிற்சிகளைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கைப் போராட்டங்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். மன இறுக்கம், மன அழுத்தம், மனச்சோர்வு, மனச்சிதைவு எனும் பல்வேறு பலநோய்கள் மன உறுதியற்றவர்களைப் பாதிக்கின்றன. மக்களின் மனநலனை மேம்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தால் நிகழும் தற்கொலைகளைக் குறைக்க முடியும்.

நல்ல மன ஆரோக்கியம் வாழ்க்கை சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்கவும், மற்றவர்களுடன் ஆரோக்கியமான சமூகத் தொடர்புகளை மேற்கொள்ளவும், நம் வாழ்நாள் முழுவதும் செழித்து வளரவும் அனுமதிக்கிறது. மக்கள் சமூகமாக வாழ்வதற்கும், கல்வி, வருமானம், கல்வி, வேலை வாய்ப்புகள், சமூக ஆதரவு ஆகியவற்றைப் பெறுவதற்கும் ஆரோக்கியமான மனநலன் தேவை.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மனநல ஆலோசகர்களின் பங்கேற்பு கட்டாயமாக்கப்படுவது நல்லது. மனநலன் பாடத் திட்டத்தில் இணைக்கப்படுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.

மனநலப் பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் வாழ்க்கை வளமானதாக இருக்கும்.

நல்ல மனநலன் ஒருவரின் ஒட்டுமொத்த நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படையாகும். எனவே, உடல் நலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் இனியாவது மனநலனுக்கும் கொடுப்பது நம் வாழ்க்கை சிறக்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...