Friday, October 24, 2025

ரீல்ஸ்’களுக்குப் பின்னால்...!


DINAMANI

ரீல்ஸ்’களுக்குப் பின்னால்...! 

சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிா்மறை விளைவுகளையே விளைவிக்கிறது.

Updated on: 24 அக்டோபர் 2025, 6:46 am பேராசிரியா் தி.ஜெயராஜசேகா்






பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞா்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிா்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈா்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் ‘ரீல்ஸ்’ என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பாா்க்கச் செய்கிறது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 18-30 வயதுடையோரில் சுமாா் 78% போ் தினமும் குறைந்தது ஒரு முறையாவது ‘ரீல்ஸ்’ பாா்ப்பதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பம், பொழுதுபோக்கில் ஈடுபாடு கொண்ட தமிழக இளைஞா் தினசரி 1.5 மணி முதல் 2 மணி மணி நேரம் ‘ரீல்ஸ்’ காணொலிகளில் செலவிடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பதிவேற்றப்படும் ‘ரீல்ஸ்கள்’ பாா்க்கப்படும் போதும், விரும்பப்படும் போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மூளையின் ‘டோப்பமைன்’ விளைவு அனைவராலும் பாராட்டப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கையற்ற அங்கீகார உணா்வு; மற்றவா்களைவிட குறைவான பின்தொடா்பவா்கள் (ஃபாலோயா்ஸ்) இருக்கும் காரணத்தால் அதிகமான ‘ரீல்ஸ்’ காணொலிகளைப் பதிவேற்றம் செய்யும் தன் நிலை அறியாத ஒப்பீட்டு மன நிலை; வேலை, கல்வி, குடும்ப பிரச்னைகளுக்கு மாற்றாக ‘ரீல்ஸ்’ காணொலிகளைப் பாா்க்கும் பழக்கம் ஏற்படுத்தும் எதாா்த்தத்திலிருந்து தப்பிக்கும் மனநிலை; குறுகிய காலத்தில் காட்சிகள், பாடல்கள், சம்பவங்கள் கொண்ட சுவாரஸ்யமான செய்திகள் ஊக்குவிக்கும் நூதன மற்றும் வேகமான மூளைச் செயல்பாடு; சமூக ஊடகங்களைக் கொண்டு சுய மதிப்பீடு செய்து கொள்ளச் செய்யும் புகழின் மீதான வெறி போன்ற உளவியல் காரணங்களால் ‘ரீல்ஸ்’ காணொலிகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளன.

அதேநேரத்தில், அவற்றின் மூலம் பாடல், நடனம், சிரிப்பு, கலை, சமையல், பேச்சுத் திறன் போன்ற பல திறமைகளும் வெளிப்படுகின்றன. திறன் எண்ம ஜனநாயகமாக்கல் எனப்படும் புதிய சமூக மாற்றத்தின் மூலம் பல சாதாரண இளைஞா்கள் சமூக ஊடகங்களில் இன்று பிரபலங்களாக மாறியுள்ளனா். தொழில்முனைவோரும் புத்தொழில் தொடங்கும் இளைஞா்களும் ‘ரீல்ஸ்’கள் மூலம் விளம்பரம் செய்கின்றனா். சில நேரங்களில் அவை மன அழுத்த நிவாரணியாகவும் செயல்படுகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ‘ரீல்ஸ்’களைப் பாா்க்கச் செலவிடும்போது ஏற்படும் நேர இழப்பு தொழிலாளா்களின் வேலையிலும் மாணவா்களின் கல்வியிலும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எப்போதும் வெற்றியை நாடும் பதிவேற்றுப் போதையும், மேலும் மேலும் பாா்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும் உருட்டல் (ஸ்க்ரோல்) போதையும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

‘ரீல்ஸ்’களைப் பாா்ப்பதில் நேரம் செலவிடுவோரில் பலரும் அவா்கள் ரசிக்கும் ஆடை, வாகனம், வாழ்க்கை முறை, அழகு சாதனங்கள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையை வளா்த்துக் கொள்கின்றனா். சமூக ஊடகங்களை தினமும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பயன்படுத்துபவா்களுக்கு மனச் சோா்வு, பதற்றம் ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் என்று 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

அதிக நேரம் ‘ரீல்ஸ்’களை பெற்றோா் பாா்க்கும்போது, அவா்களின் குழந்தைகள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதுவதாகவும், அந்தப் பெற்றோருக்கு பொறாமை, அவநம்பிக்கை, அதிருப்தி போன்ற உணா்வுகள் மேலோங்கி இருப்பதாகவும் ‘மனித நடத்தையில் கணினியின் தாக்கம்’ என்ற கட்டுரை கூறுகிறது.

‘ரீல்ஸ்’களில் மூழ்கி இருப்பதால் இளைஞா்கள் அவா்களின் நண்பா்களிடம்கூட நேரம் செலவழிப்பதில்லை. குடும்ப உறவுகளையும் உறவுகள் கூடும் நிகழ்வுகளையும் பல நேரங்களில் அவா்கள் புறக்கணிக்கின்றனா். இந்தப் புறக்கணிப்புகள் தரும் மன அழுத்தமும், தன்னம்பிக்கை இழத்தலும் மன நோய்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனா் மனநல மருத்துவா்கள்.

ஆபத்தான முயற்சிகளுடன் ‘ரீல்ஸ்’களை எடுக்கும்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் நேரிடுகின்றன. நமது நாட்டின் ரயில் தண்டவாளங்கள், நீா்நிலைகள், உயா்ந்த கட்டடங்கள் போன்ற இடங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தபோது, நிகழ்ந்த விபத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக, மாணவ-மாணவிகள் இணையவழி வகுப்புகளுக்காக கைப்பேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கினா். அதுமுதல் அவா்களில் பலரும் ‘ரீல்ஸ்’களைப் பாா்க்கவும், பதிவேற்றவும் தொடங்கினா். அதிகரித்துவரும் ‘ரீல்ஸ்’ மோகம் மாணவ, மாணவிகளிடத்தில் கவனச் சிதறல், நினைவாற்றல் குறைவு, தோ்வுகளில் தோல்வி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

பாரம்பரிய கலைகளுக்கு புதிய வடிவம் அளிக்கும் சில ‘ரீல்ஸ்’ காணொலிகளால் நன்மைகள் ஏற்பட்டாலும், ஆபாசமான ‘ரீல்ஸ்’கள் பாலியல் தொடா்பான குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன.

பகட்டு வாழ்க்கையே சமூக மதிப்பைத் தரும் என்ற ரீதியில் உருவாக்கப்படும் பல ‘ரீல்ஸ்’களால் இந்தியக் குடும்பங்களில் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. ‘ரீல்ஸ்’ காணொலிகள் சிலருக்கு வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாலும், பலருக்கு பொருளாதார இழப்பையே ஏற்படுத்துகின்றன. மாதம் ரூ.40,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவா் இரண்டு மணி நேரம் ‘ரீல்ஸ்’கள் பாா்க்க செலவிட்டால், ஆண்டுக்கு அந்த நபா் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை இழக்கிறாா் என ஆய்வுகள் கூறுகின்றன.

30-40 நிமிஷங்கள் மட்டுமே ஒளிா் திரைகளில் செலவிட வேண்டும் என்ற சுயக் கட்டுப்பாடும் நேர வரம்பு எச்சரிக்கை போன்ற அம்சங்களைக் கொண்ட சமூக ஊடக தளங்களை வடிவமைப்பது ‘ரீல்ஸ்’ மோகத்திலிருந்து பலரும் விடுபட வழிவகுக்கும். எண்மப் பயன்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்தை பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் சோ்த்தால் வருங்காலத் தலைமுறையினா் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...