முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே பின்னணியாகக் கொண்ட படங்களின் வரிசையில், ‘முண்டாசுப்பட்டி', ‘ஆடாம ஜெயிச்சோமடா', ‘பப்பாளி', ‘ஜிகிர்தண்டா', ‘பட்டையக் கெளப்பணும் பாண்டியா', ‘வானவராயன் வல்லவராயன்', ‘கப்பல்', ‘வெள்ளக்கார துரை'ஆகிய படங்களைச் சொல்லலாம்.
இவற்றில், ‘முண்டாசுப்பட்டி'யும் 'ஜிகிர்தண்டா'வும் தனிக் கவனம் ஈர்த்தவை. கடுமையான விமர்சனங்களைக் கடந்தும் ‘வெள்ளக்கார துரை' பி அன்ட் சி எனச் சொல்லப்படும் மையங்களைத் திருவிழாத் தலங்களாக மாற்றியிருக்கிறது.
காமெடி பிரதானமாக இல்லாவிட்டாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இதர படங்களின் வரிசையில் 'ஜில்லா', ‘வீரம்', ‘மான் கராத்தே', ‘வேலையில்லா பட்டதாரி', ‘திருடன் போலீஸ்', ‘ஜீவா', ‘பூஜை' உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம். 2013-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2014-ல் காமெடிப் பஞ்சம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம், காமெடியன்கள் பலருக்கும் கதாநாயகன் ஆசை தொற்றிக்கொண்டதுதான்.
வடிவேலுவின் மறுபிரவேசம் தமிழ் சினிமாவை மீண்டும் குலுங்க வைக்கப் போகிறது எனப் பொடிசுகள் முதல் பெரியவர்கள் வரை காத்திருக்க, ‘தெனாலிராமன்' படத்தில் ஹீரோவாகக் களம் இறங்கினார் வடிவேலு. காமெடியை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டுக் கருத்து சொல்கிறேன் பேர்வழி என வடிவேலு கிளம்ப, மழை நாள் விறகாக நமத்துப் போனது அவருடைய மறுவரவு.
வடிவேலுவின் வனவாசத்தால் உருவான வெற்றிடத்தை நிரப்பியிருக்க வேண்டியவர்கள் சந்தானம், விவேக் உள்ளிட்ட காமெடியன்கள். ஆனால், அவர்களுடைய ஹீரோ கனவுகளும் கிட்டத்தட்ட அரைவேக்காடாக அமைய, 'உள்ளதும் போச்சுடா' கணக்காகத் தவித்துப் போனது நகைச்சுவை உலகம். சந்தானத்தின் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்', விவேக்கின் ‘நான்தான் பாலா', கஞ்சா கருப்பின் ‘வேல்முருகன் போர்வெல்ஸ்' என வரிசையாகக் காமெடியன்களின் ஹீரோ கனவுகள் கெட்ட கனவுகளாகின.
மற்றவர்களோடு ஒப்பிடும்போது சந்தானத்தின் முயற்சி ஓரளவு வெற்றிதான் என்றாலும் தொடர்ந்து மையப் பாத்திரமாக நடிக்கும் அளவுக்கு அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. வடிவேலு பாணியிலேயே ‘மீண்டும் ஹீரோதான்' எனச் சந்தானம் முறுக்கினாலும், அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைகாட்டத் தவறவில்லை. 'வீரம்' படத்தின் வெற்றிக்கும் ‘அரண்மனை' படத்தின் வரவேற்புக்கும் சந்தானத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது.
விவேக், ‘வேலையில்லா பட்டதாரி'யில் தன் தனித்துவமான காமெடியை நிரூபித்தார். நிறைய படங்களில் சதீஷ், கருணாகரன், காளி, பாலசரவணன் ஆகியோரும் சில படங்களில் பாபி சிம்ஹாவும் காமெடியில் களமிறங்கினர். இவர்களில் சிம்ஹா தேறிவிட்டார் என்று சொல்லலாம். கருணாகரன் ஓகே ரகம். சதீஷ் இன்னமும் திணறிக்கொண்டிருக்கிறார்.
இத்தனை ரணகளங்களுக்கு மத்தியில் சுயேச்சை வேட்பாளர் வாகை சூடியதைப்போல் தனித்து நின்று ரகளை கட்டி வயிறு குலுங்க வைத்துவிட்டார் சூரி. 'நானா... கதாநாயகனா... இப்புடியெல்லாம் பேசிட்டுத் திரியாதிய அப்பு... அப்புறம் பொதுநல வழக்கு போட்டுட்டாய்ங்கன்னா என்னய பொல்லாப்பு சொல்லக் கூடாது' என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்து மிகுந்த சாதுரியமாகக் காய் நகர்த்தினார் சூரி. அதனால், 2014-ம் வருடத்தின் காமெடி முகமாக மாறினார்.
விஜயுடன் ‘ஜில்லா', சூர்யாவுடன் ‘அஞ்சான்', விஷாலுடன் ‘பூஜை', சிவகார்த்திகேயனுடன் ‘மான் கராத்தே', ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்', விக்ரம் பிரபுவுடன் ‘வெள்ளக்காரதுரை' எனத் தனது கூட்டணியை வலுவாக்கிக்கொண்டார் சூரி. ஹீரோவாக நடிக்கவில்லையே தவிர, ‘பட்டையக் கெளப்பணும் பாண்டியா', ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா', ‘வெள்ளக்காரதுரை' படங்களில் ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்குத் திரையில் அதிக நேரம் தோன்றிப் பாட்டு, நடனம், சண்டை எனக் கிடுகிடுக்க வைத்தார் சூரி. அப்பாவித்தனமான உடல்மொழியும், வார்த்தை சுழட்டல்களும், அசலான வட்டார வழக்கும், டங்கிலீஷும் சூரியை வடிவேலுவுக்கு மாற்றாகவே மாற்றிவிட்டன.
மொத்தத்தில் 2014-ல் காமெடி கம்மிதான் என்றாலும், கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சூரி காமெடி களத்தில் முன்னணியில் நிற்கிறார். இவருக்குப் ‘பெயர்’ பெற்றுத்தந்த பரோட்டா காட்சியைப் போல நினைத்து நினைத்துச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் காட்சிகளை உருவாக்கும் பட்சத்தில் காமெடியன்கள் வரலாற்றில் அவருக்கும் ஒரு இடம் கிடைக்கும்.
கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே சிரிக்கவைக்க முயற்சிக்கின்றன. முழு நீள காமெடிப் படங்களும் வந்துள்ளன. ஆனால் ‘ஜிகர்தண்டா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘மான் கராத்தே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’என்று ஒரு சில படங்கள் மட்டுமே அந்த நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றன. தனி காமெடியன் என்று பார்த்தால் சூரி வாகை சூடுகிறார். வாய்விட்டுச் சிரிக்க வைத்த படம் எதிலும் சூரி இல்லை என்பதைப் பார்க்கும்போது முரணாகத் தெரியும். இந்த முரண்தான் 2014-ன் சிரிப்புக் களத்தின் சாரம்.
கா. இசக்கிமுத்து