தில்லியில் கத்தியின்றி ரத்தமின்றி நடந்த யுத்தத்தில் மத்தியில் ஆண்டவரையும் ஆள்பவரையும் மக்கள் தூக்கி கடாசிவிட்டு புதிய கட்சிக்கு மகத்தான வெற்றியை தில்லி மக்கள் அளித்துள்ளனர்.
வென்றவருக்கு வாழ்த்து சொல்லும் வேளையில், தோற்றவர்கள் கற்க வேண்டிய பாடம் என்ன என்றும் சிந்திப்போம்.
ஐ.ஐ.டி. மாணவரான அரவிந்த் கேஜரிவால் வண்ணக் கனவுகளுடன் இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதிய இந்தியர்.
வருவாய்த் துறை பணியில் பயிற்சி பெற்று, சக பணியாளரை மணந்து, வேலையை துறந்து அண்ணா ஹசாரேயின் இயக்கத்தில் இணைந்தார்.
அரவிந்துக்கும் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவுக்கும் ஓர் ஒற்றுமை. அண்ணா, பெரியாரின் சீடராக பொது வாழ்க்கைக்கு வந்தார். அரவிந்த், அண்ணா ஹசாரேயின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தார்.
அண்ணாவும் அரவிந்தும் படித்தவர்கள். வெறும் கொள்கை கோஷம் போட்டால் எதுவும் ஆகாது என்று தனிப்பாதையில் தலைவர் புகழ் பாடியபடியே அவர்களிடமிருந்து விலகி தனிக்கட்சி கண்டவர்கள்.
புதிய கட்சி கண்ட அண்ணா ஆட்சியைப் பிடிக்க கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆட்சியை பிடிக்கும் சாதனையை அரவிந்த் 18 மாதத்தில் செய்து காட்டினார். ஆனால், உணர்ச்சிவசப்பட்டவராக உடனே ஆட்சியைத் துறந்தார்.
அரவிந்தின் சாதனை இந்திய ஜனநாயக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கது.
என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர். போல அவருக்குத் திரைப்படக் கவர்ச்சியோ, ரசிகர் பட்டாளமோ கிடையாது. அரவிந்தின் குறுகிய கால வளர்ச்சி, மாற்றத்தை விரும்பும் இந்திய மக்களின் எண்ணங்களுக்கான வடிகால். அவர் மோடிக்கு முன்பே கையில் துடைப்பத்துடன் ஊரைச் சுத்தம் செய்ய கிளம்பியவர்.
பா.ஜ.க.வின் படுதோல்விக்கு கிரண் பேடி ஒரு முக்கியக் காரணம். அரசியல் என்பது விரும்பும் போது உள்ளே வந்து, விரும்பும் போது வெளியே செல்லும் விளையாட்டு மைதானம் அல்ல.
லட்சிய வெறியுடன் போராட வேண்டிய களம் அரசியல். லட்சியங்களில் ஒன்று ஆட்சியைப் பிடிப்பது. அரவிந்த், அண்ணா ஹசாரேவை விட்டு வெளியே வந்து தனிக்கட்சி கண்டபோது அதை விமர்சித்தவர் கிரண் பேடி.
அரவிந்த் முதல்வராவார் என்று கிரண் பேடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஒரு முன்னாள் தில்லி காவல் துறை அதிகாரிக்கு தில்லி முதல்வரின் அதிகாரம் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
கிரண் பேடி கொள்கையில் பூத்த மலர் அல்ல. அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் விரும்புபவர். அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை ஆட்சியாளரிடம் அடகு வைத்த போது இவர் தனது அதிகாரங்களை உபயோகித்தார். மீடியாவின் துணையுடன் இவர் புகழ் ஏறத் தொடங்கியது.
கிரண் பேடி மலை மாநிலத்திற்கு மாற்றப்பட்டபோது, விதிகளை மீறி தன் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டார்.
மக்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் தாங்க முடியாமல் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் புகுந்து தப்பி வந்ததாக அவர் தன் புத்தகத்தில் எழுதியிருப்பதை மறக்க முடியுமா?
கிரண் பேடியின் லஞ்ச எதிர்ப்புக் கொள்கை, பொறாமையால் அரவிந்த் கேஜரிவால் எதிர்ப்புக் கொள்கையாக மாறியது. இதைப் புரிந்து கொண்ட பா.ஜ.க.வினர் அவரை தூண்டில் போட்டு பிடித்தனர்.
காலங்காலமாக கட்சியில் இருந்தவர்களை ஒதுக்கி விட்டு கிரண் பேடியின் பத்திரிகை புகழை மட்டும் கணக்கெடுத்து செயல்பட்டதன் விளைவு பா.ஜ.க.வின் பலம் சட்டப்பேரவையில் மூன்றாக குறைந்துவிட்டது.
அரசியல்வாதிகள் தில்லி தேர்தலில் படிக்க வேண்டிய பாடம், நம்பிக்கையூட்டும் சிறிய கட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் ஆதரவுதான். அரவிந்த் பதவியை ராஜிநாமா செய்தபோது சிலர் பா.ஜ.க.விற்கு தாவினார்கள். ஆனால், மாற்றத்தை விரும்பிய மக்கள் அரவிந்தைத் தூக்கிப் பிடித்துள்ளனர்.
தில்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி யில் ஊழல் மிகுந்திருக்கிறது. பேருந்துப் போக்குவரத்து மோசமாக இருக்கிறது. இவற்றைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரவிந்துக்கு உள்ளது. ஆட்சியைப் பிடிப்பது வேறு, ஆளுவது வேறு.
அரவிந்த் கேஜரிவால் இந்திய ஜனநாயகத்தின் புதிய வரவு. மோடியைப் போலவே கனவுகளை விற்று ஆட்சிக்கு வந்தவர். ஆட்சிப் படுக்கை என்பது ரோஜா மலர்களால் ஆனது அல்ல.
உச்சநீதிமன்றமும், ஊடகங்களும், மக்களும் விழிப்போடு இருப்பது நிஜம். இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் துவங்கி விட்டன. இதை அரசியல்வாதிகள் புரிந்த கொள்ளாவிட்டாலும் மக்கள் புரிந்து கொண்டனர்.
ஷீலா தீட்ஷித்தின் மெட்ரோ ரயிலையும் அகலமான சாலைகளையும் மேம்பாலங்களையும் சுரேஷ் கல்மாடியின் தேசிய அவமானமான ஆசிய விளையாட்டு ஊழல் அடித்து நொறுக்கி விட்டது.
திடீர் கிரண் பேடிகளால் பேரும், புகழும், ஓட்டுகளும் கொண்டு வர முடியாது. தில்லி போன்ற படித்தவர்கள் நிறைந்த பகுதியில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
இதுதான் தில்லி கற்றுத் தரும் பாடம்.