தென்னகத்து கும்பமேளா என்று அழைக்கப்படும் கும்பகோணம் மகாமக திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ல் வருகிறது. அதற்கு முன்பாக இளைய மகாமகம் வரும் மார்ச் 4-ல் நடக்கவிருக்கும் நிலையில், மகாமக பணிகள் மந்தமாக நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன.
மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள 69 திருக்கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டும் இன்னமும் பெரும்பாலான கோயில்களில் பணிகள் ஆரம்பிக்கவில்லை. நகருக் குள் உள்ள 36 குளங்களில் ஆக்கிர மிப்புகளை அகற்றவும் தூர்வார வும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை. நகருக்குள் ஓடும் திறந்த வெளிச் சாக்கடைகளும் கழிவுநீர் கால்வாய்களாகிப்போன சுகாதாரச் சந்துகளும் பொது சுகாதாரத்துக்கு சவால்விடுகின்றன.
பொதுக் கழிப்பிடங்களில் பெரும் பாலானவை பராமரிப்பின்றி மூடிக் கிடக்கின்றன. மகாமகத்தின்போது இங்குள்ள வைணவ கோயில் உற்சவ மூர்த்திகள் காவிரி கரையின் படித்துறைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். இந்தப் படித் துறைகளும் சிதிலமடைந்து தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.
அரசு தலைமை மருத்துவ மனையையும் கருப்பூர் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் உயர்மட்டப் பாலம் அமைப் பது, அரசலாற்றில் உச்சிப்பிள்ளை யார் கோயில் அருகேயுள்ள பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றுவது இவ்விரண்டு கோரிக் கைகளும் முதல்வர் கவனத்துக்குப் போன பிறகும் கண்டுகொள்ளப் படவில்லை.
இது குறித்துப் பேசிய விஸ்வ இந்து பரிஷத்தின் நகரத் தலைவர் கண்ணன், ‘‘மகாமகத்துக்காக கடந்த ஓராண்டாக ஆலோசனைக் கூட்டங்களை போடுகிறார் மாவட்ட ஆட்சியர். ஆனால், உருப்படியாக எந்தப் பணியும் நடக்கவில்லை. முடிந்த வரை காலம் கடத்திவிட்டு கடைசி நேரத்தில் தரமற்ற வகையில் பணிகளை செய்து மக்கள் பணத்தை வீணடிக்கப் போகிறார்கள்’’ என்கிறார்.
கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்ய நாராயணன், ‘‘மகாமகத்துக்கு இம்முறை சுமார் ஒரு கோடி பேர் வருவார்கள். கும்பகோணம் - விருத்தாசலம் புதிய ரயில் பாதை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை இதுவரை ஐந்து முறை சந்தித்துப் பேசிவிட்டோம். எந்தப் பயனும் இல்லை’’ என்கிறார்.
நகராட்சி தலைவர் ரத்னாவுக்காக பேசிய அவரது கணவர் சேகர், ‘‘பாலங்கள், சாலைகள், தெருவிளக்கு கள் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழக அரசு ரூ.43.73 கோடி வழங்கி இருக்கிறது. ஐந்து குளங்களை தூர்வாரு வதற்காக சிட்டி யூனியன் வங்கி ரூ.1.35 கோடி அளித்துள்ளது. இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்’’ என்றார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையனிடம் மகாமக பணிகள் குறித்து பேசியபோது, ‘‘அனைத்துத் துறைகளின் சார்பில் ரூ.200 கோடிக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரூ.70 கோடிக்கான பணிகளை தொடங்கி விட்டோம். இன்னும் மூன்று மாதத்துக்குள் மகாமக பணிகள் ஒரு வடிவத்துக்கு வந்துவிடும்’’ என்றார்.
No comments:
Post a Comment