Tuesday, February 10, 2015

போலீசுக்கு துணிச்சல்

logo

சில தினங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த பூந்தமல்லி கோர்ட்டு வளாகத்திலேயே நடந்த ஒரு கொலை மிகவும் பயங்கரமான சம்பவமாக இருந்தது. ஒரு கொலை வழக்கு தொடர்பாக வேலூர் சிறையில் கைதியாக இருந்த வரதன் என்பவர் கோர்ட்டில் விசாரணைக்காக கையில் விலங்கு போடப்பட்டு, ஒரு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஏட்டுகளின் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்டார். கோர்ட்டு வளாகத்துக்குள் அவரை அழைத்துக்கொண்டு போகும்போது முதலில் 2 பேர்களும், அதைத்தொடர்ந்து மேலும் சிலரும் அந்த கைதியை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதில் மிகவும் கண்டிக்கத்தகுந்த செயல் என்றால், அந்த கைதியின் பாதுகாப்புக்காக கைகளில் துப்பாக்கியோடு இருந்த போலீஸ் ஏட்டுவும், ரிவால்வார் வைத்திருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டரும், ஏதோ ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல மிகவும் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டதுதான். அவர்களின் பணியே அந்த கைதியை பாதுகாப்பாக ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கும், மீண்டும் கோர்ட்டில் இருந்து ஜெயிலுக்கும் கொண்டுபோவதுதான். ஆனால், தங்கள் கடமையை ஆற்றுவதற்கு முயற்சிசெய்யாமல், ஓடி ஒளிந்தார்கள் என்றால், தமிழக போலீசாருக்கு துணிச்சல் ஊட்டும் பயிற்சிகளை அளிக்கும் வகையில், புதிய திட்டங்களை வகுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

இவ்வளவுக்கும் பழிக்கு பழிவாங்கும் முன்விரோதம் காரணமாக, இந்த கைதியின் உயிருக்கு ஆபத்து என்று ஏற்கனவே உளவுப்பிரிவு எச்சரித்து இருக்கிறது. அப்படியிருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. கையில் துப்பாக்கி கொடுத்திருப்பது எதற்காக என்றே தெரியாத போலீசாரை பாதுகாப்புக்காக மேல் அதிகாரிகள் அனுப்பியிருக்கிறார்கள். கோர்ட்டு வளாகங்களில் கைதிகளை கொலை செய்வது தொடர்கதையாகிவிட்டது. பழைய காலங்களில் இதுபோல கோர்ட்டில் கொலை செய்தவர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். இவ்வாறு என்கவுண்டரில் போலீசார் சுட்டதால் கொஞ்சகாலத்துக்கு இதுபோன்ற சம்பவங்கள் கோர்ட்டு வளாகங்களில் நடக்காமல் இருந்தது.

பூந்தமல்லி கோர்ட்டில் நடந்த இந்த சம்பவம், எதிர்காலத்தில் இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கவேண்டுமானால், என்னென்ன நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும்? என்பதை பகிரங்கப்படுத்திவிட்டது. முதலில் போலீசாருக்கு காக்கி உடை உடலில் அணிந்தவுடன் எத்தகைய அளவில் தைரியமாக தங்கள் கடமையை ஆற்றவேண்டும் என்ற பயிற்சியை அளிக்கவேண்டும். மேலும், எளிதில் கையாளக்கூடிய நவீனரக துப்பாக்கிகளை வழங்கவேண்டும். இன்னும் தமிழக போலீசாருக்கு பழையகாலத்தில் உள்ள 410 மஸ்கட் ரக துப்பாக்கிதான் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கையில் தூக்கிக்கொண்டு வருவதற்கும், இதுபோன்ற சம்பவங்களில் தோளில் வைத்து சுடுவதற்கும் நிச்சயமாக சிரமம்தான். எனவே, வெளிநாடுகளில் வழங்கப்பட்டுள்ளதுபோல, நவீனரக துப்பாக்கிகள் வழங்கப்படவேண்டும். வேலைக்கு தேர்வானபோது அளிக்கப்படும் பயிற்சிகளில் துணிச்சலை ஊட்டும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அடிக்கடி துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பயிற்சி கொடுத்து, யார் குறிதவறாமல் மின்னல் வேகத்தில் கையில் எடுத்து சுடுகிறார்களோ, அவர்களையே முக்கிய பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தவேண்டும். மேலும், போலீசாருக்கும் ஒரு குறை இருக்கிறது. முன்பெல்லாம் என்கவுண்டரில் இதுபோல குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் போலீசார் வீரமிக்கவர்களாக கருதப்பட்டு, மேல் அதிகாரிகளாலும், சமுதாயத்தாலும் பாராட்டுப்பெற்று வந்தனர். ஆனால், இப்போதோ உடனடியாக விசாரணை என்ற பெயரில் வெகுகாலத்துக்கு துறை ரீதியாகவும், வழக்குகளுக்காக கோர்ட்டுகளுக்கும் அலையவேண்டிய நிலை இருக்கிறது. மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற நிலைமைகளை தவிர்த்தாலேபோதும், வீரம் தானாக வரும் என்கிறார்கள் போலீசார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024