Monday, February 9, 2015

இந்தியா-பாக். போட்டி: விமான நிறுவனங்கள் கட்டண கொள்ளை!



உலகக் கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளின் மோதலுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. விற்பனையான 50 ஆயிரம் டிக்கெட்டுகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை இந்தியர்கள் வாங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் பிற நகரங்களான சிட்னி, மெல்பர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களை சேர்ந்தவர்கள்

இந்த போட்டியையொட்டி அடிலெய்ட் நகரத்தில் ஆயிரக்கணக்கான ஹோட்டல் அறைகள் நிறைந்து விட்டன. ஞாயிற்றுக்கிழமை வேறு இந்த ஆட்டம் நடைபெறுவதால், வார விடுமுறையை கழிப்பவர்களும் ஹோட்டல் அறைகளை புக் செய்துள்ளனர். இதனால் போட்டியை காண டிக்கெட் வாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடிலெய்டில் நகரில் ஹோட்டல் அறைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அடிலெய்ட் அருகில் உள்ள குட்டி குட்டி நகரங்களிலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹோட்டல்கள் அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன. சாதாரணமாக 100 ஆஸ்திரேலிய டாலருக்கு கிடைக்கும் அறைகள் இப்போது 250 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு புக் செய்யப்படுகிறதாம்.

அதோடு இந்த தருணத்தை பயன்படுத்தி விமான நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. சாதாரணமாக சிட்னியில் இருந்து அடிலெய்டுக்கு 300 ஆஸ்திரேலிய டாலர்களில் சென்று விடலாம். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முன்னிட்டு 800 ஆஸ்திரேலிய டாலர்கள் என விமான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் டிக்கெட் வாங்கிய போதே அறைகள் மற்றும் விமான டிக்கெட்டுகளை புக் செய்யத் தவறிய ரசிகர்கள் இப்போது தவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 4 பேர் அடங்கிய இந்திய குடும்பம் இந்த போட்டியை காண வேண்டுமென்றால், குறைந்தது 5 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை செலவு செய்ய வேண்டிய கட்டயாத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த எதிர்பாராத விலைஉயர்வு காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண டிக்கெட்டுகளை வாங்கிய 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள், போட்டியை காண அடிலெய்டுக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024