Tuesday, February 10, 2015

மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்கம்



மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.

ரெயில் சேவை தொடக்கம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பகத் கீ கோத்தி (ஜோத்பூர்) என்ற இடத்திற்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபாகர்பிரபு டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி நேற்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் கொடி அசைத்தார். இதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளாரங்கராஜன், கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ராஜ்புரோகித், மன்னார்குடி நகரசபை தலைவர் சுதாஅன்புச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் உதயகுமாரிதமிழ்க்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதை யொட்டி மன்னார்குடியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 6 மணி அளவில் ஜோத்பூர் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நாளை (புதன்கிழமை) இரவு 11.45 மணி அளவில் ஜோத்பூர் சென்றடையும்.

இந்த ரெயில் திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கல், சிராலா, தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், பெத்தபல்லி, ராமகுண்டம், சிற்பூர்காகநகர், பெல்லர்ஷா, நாக்பூர், இட்ராசி, ஹபிப் கன்ட்ஜ், போபால், சுஜல்பூர், உஜ்ஜையினி, நாக்டா, பவானிமன்டி, கோட்டா, சவாய்மதேபூர், துர்காபூரா, ஜெய்பூர், புளேரா, மக்ரானா, தேகானா, மெர்டாரோடு, கோட்டன், ராய்காபக்பேலஸ் ஆகிய இடங்கள் வழியாக ஜோத்பூர் செல்கிறது.

வாராந்திர எக்ஸ்பிரஸ்

வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலான ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 11.30 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி அளவில் சென்னை சென்றடையும். அங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மாலை 6 மணி அளவில் ஜோத்பூர் சென்றடையும்.

அதுபோல் வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் ஜோத்பூரில் இருந்து புறப்படும். பின்னர் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை வந்தடையும் ரெயில், மாலை 6 மணி அளவில் மன்னார்குடி வரும்.

எக்ஸ்பிரஸ் ரெயில் குறித்து திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளாரங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை வழிப்பாதை

இந்த ரெயிலில் 6 பொதுப் பெட்டிகள், 6 முன்பதிவு பெட்டிகள், 2 பெண்கள் பெட்டிகள் உள்பட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இன்று 8 ரெயில்களை ரெயில்வே மந்திரி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் 2 தமிழ்நாட்டை சேர்ந்த ரெயிலாகும். அதில் ஒன்று மன்னார்குடி-ஜோத்பூர் ரெயில் ஆகும்.

பொன்மலை-தஞ்சாவூர் இடையே இரட்டை வழிப்பாதை பணிக்கு நேற்றுமுன்தினம் பூஜை போடப்பட்டது. வரும் மகாமக திருவிழாவுக்குள் திருக்காட்டுப்பள்ளி- பூதலூர் வரை இரட்டை வழிப்பாதை நிறைவு பெற்று விடும். பூதலூரில் இருந்து திருச்சி வரை பெரிய பாலங்கள் கட்ட வேண்டி இருப்பதால் இந்த இரட்டை வழிப்பாதை பணிகள் 18 மாதத்திற்குள் நிறைவடையும். மன்னார்குடி -பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் ஆகிய ரெயில்வே திட்டங்கள் ரெயில்வே கட்டுமான துறையிடம் உள்ளது. ரெயில்வே பட்ஜெட் வந்த பிறகுதான் இதுபற்றி முழுமையாக தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024