Thursday, February 12, 2015

பேருந்துகளை எளிதாக அடையாளம் காண வழித்தட எண்களில் மாற்றம்

பேருந்துகளை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், பேருந்து வழித்தட எண்ணை ஒரே மாதிரியாக மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக 20 வழித்தடங்களில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இப்போது 806 வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு சில வழித் தடங்களில் பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில பேருந்துகள் மாறுபட்ட வழித்தட எண்களிலும் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், குறிப்பிட்ட வழித் தடத்தில் ஒரே எண் கொண்ட பேருந்துகளை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பிராட்வேயிலிருந்து வெவ்வேறு வழிகளில் தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் 102 என்ற எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது 21ஹெச் பேருந்து வழித்தடம் 102 எனவும், டி21 என்ற வழித்தடம் 102கே என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளன.

இதுபோல் டி51 வழித்தட பேருந்துக்கு 95 என்ற எண்ணும், டி51எஸ் என்ற வழித்தடத்துக்கு 95சி என ஒரே எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் 20 வழித் தடங்களில் முதல் கட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் அனைத்துப் பேருந்துகளிலும் பழைய எண், புதிய எண் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் அறிவிப்புகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த மூன்று வார காலங்களில் பிற பேருந்துகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024