நல்ல முன்னுதாரணங்களைத் தேடி எடுத்துக்கொள்வது முன்னேற்றப் பாதையில் செல்வோருக்கான அடையாளங்களில் ஒன்று. சென்னை மாநகராட்சியின் ‘புதிய வரிவசூல்’ முறையை என்னவென்று சொல்வது?
சொத்துவரி செலுத்தத் தவறிய நட்சத்திர விடுதியின் முன்பு திருநங்கையரை ஆட விட்டு வரி வசூல் செய்த சென்னை மாநகராட்சியின் செயல் அவமானகரமானது மட்டுமல்ல; மனித உரிமை மீறலும்கூட. பெங்களூரு, தெற்கு டெல்லி போன்ற மாநகராட்சிகள்தான் சென்னை மாநகராட்சிக்கு இந்த விஷயத்தில் ‘முன்னோடிகள்’! பிஹாரின் பாட்னா மாநகராட்சி இன்னும் ஒரு படி கீழிறங்கி, பொதுமக்களிடம் இருந்து வரி வசூலிக்கவும் திருநங்கைகளை ரசக் குறைவான விதத்தில் பயன்படுத்தியது. வசூலிக்கும் வரியில் 4%-ஐ பாட்னா மாநகராட்சி திருநங்கைகளுக்கு வழங்கியது. மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புக்குப் பிறகு அந்த மாநகராட்சி இந்த நடைமுறையைக் கைவிட்டது. அதேபோல், பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கையை ‘நாகரிகமற்ற செயல்’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித் திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.
இதை வெறும் சென்னை மாநகராட்சியின் தவறாக மட்டும் பார்க்க முடியாது. நம் மனோபாவத்தின் குறியீடுகளில் ஒன்று இது. இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படத்தில் மூன்றாம் பாலினத் தோரை இழிவுபடுத்தியதும் இதே போன்ற செயல்தான். ‘ஐ’ படத்துக்கெதிராகத் திருநங்கைகள் போராடியும் அந்தப் படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. திருநங்கைகளின் எதிர்ப்பு அந்தத் திரைப்படத் தரப்பிடம் மட்டுமல்ல; பொதுமக்களிடமும் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு குறியீடுதான்.
காலம்காலமாகச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு ஒதுங்கி வாழ்பவர்கள் தான் மூன்றாம் பாலினத்தோர். ஒடுக்கப்பட்ட தரப்புகளிலேயே கடைநிலையில்தான் அவர்களை நாம் வைத்திருக்கிறோம். அவர்களில் சிலர் பிச்சை எடுத்துப் பிழைக்கிறார்கள்; குறிப்பாக, வலுக்கட்டாயமாகப் பிச்சை பெற்றுக்கொள்கிறார்கள்; இன்னும் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதற்கான சூத்ரதாரிகள் நாம்தான் என்பதை மறந்துவிட முடியாது. அவர்கள் கண்ணியமாக வாழ நாம் என்ன வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்? சக மனிதர்களாகக் கூட அவர்களை மதிப்பதில்லையே? கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவர்களுடைய குரல் பொதுச் சமூகத்தின் காதுகளில் சற்றே விழ ஆரம்பித்திருக்கிறது. சில உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அவர்களுடைய வாழ்நிலையில் மிகச் சிறிய அளவிலாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்தை மீண்டும் பின்னோக்கித் தள்ளுகின்றன இந்தச் சம்பவங்கள்.
ஒருவரை அவமானப்படுத்துவது தவறு என்றால் ஒருவர் மேல் சமூகம் தொடர்ந்து சுமத்திவந்திருக்கும் அவமானத்தைக் கருவியாகக் கொண்டு இன்னொருவரை அவமானப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? மாநகராட்சியின் உயர் அதிகாரிகளுக்கு இந்தப் பிரக்ஞையெல்லாம் சற்றும் இல்லை என்பது அவர்கள் மற்ற விஷயங்களில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான ஒரு சோறு பதம். உண்மையில், மாநகராட்சி அவமானப்படுத்தியது நட்சத்திர விடுதிக்காரர்களையோ திருநங்கைகளையோ அல்ல; தன்னையே அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறது.
ஒரு சமூகம் தனது சிறுபான்மையினரையும், விளிம்புநிலையி னரையும் நடத்தும் விதத்தைக் கொண்டுதான் அது எவ்வளவு நாகரிகம் அடைந்த சமூகம் என்று மதிப்பிடப்படும். எனில், நமது நாகரிகத்தின் முகமோ தற்போது கிழிந்து தொங்குகிறது!
No comments:
Post a Comment