Tuesday, February 10, 2015

2003: சறுக்கிவிட்ட பதற்றம்

உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணியினர். படம்: வி.வி. கிருஷ்ணன்

மார்ச் 1-ம் தேதியன்று நடந்த அந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது. டாஸை வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்தது. சயீத் அன்வர் 101 ரன் அடித்தார். யூனிஸ் கான் (32), யூசுஃப் (25) ஆகியோரின் உதவியுடன் ஸ்கோர் வலுவான நிலையை எட்டியது.

கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியின் முன் பதற்ற மாக அமர்ந்திருக்க, சச்சினும் சேவாகும் களமிறங்கினார்கள். வழக்கமாக சேவாக்தான் முதல் பந்தை எதிர்கொள்வார். அன்று அவரை மறுமுனைக்கு அனுப்பி விட்டு சச்சின் ஆடத் தயாரானார்.

அதிரடியாக ஆடும் எண்ணம் சச்சின் மனதில் இல்லை. முதல் பத்து ஓவர்களில் பெரிய சேதம் இல்லாமல் பார்த்துக்கொள்வ துடன் ரன் விகிதமும் ரொம்பவும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தியாவின் வியூகம்.

முதல் இரண்டு பந்துகளில் ரன் வர வில்லை. மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி. அடுத்து ஒரு ரன். கடைசிப் பந்தில் சேவாக் ஒரு பவுண்டரி. முதல் ஓவரில் 9 ரன்கள். இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.

அடுத்த ஓவர்தான் போட்டியின் திருப்புமுனை. பதற்றத்துடன் வைட் பால் போட்டு ஓவரைத் தொடங்கிய ஷோயிப் அக்தரின் நான்காவது பந்து நன்கு எகிறி வந்தது. ஆனால் ஆஃப் ஸ்டெம் புக்கு வெளியே வந்தது. அதைப் பார்த்த சச்சின் வேகமாக எதிர் வினை ஆற்றினார். துல்லியமான தருணத்தில் பந்தை எதிர்கொண்டு அப்பர் கட் அடித்தார். பந்து தேர்ட் மேன் திசையில் எல்லைக் கோட்டைத் தாண்டிப் பறந்தது. அடுத்து ஒரு நான்கு. அதை அடுத்து ஒரு நான்கு.

அக்தரின் முதல் ஓவரில் 18 ரன்கள் அரங்கம் அதிர்ந் தது. அதன் பிறகு சச்சினைத் தடுக்க முடியவில்லை. வேகமாக வும் நேர்த்தியாகவும் பந்துகளைப் பதம்பார்த்தார். சேவக் விரைவில் ஆட்டமிழந்தார் (21). கங்கூலி முதல் பந்திலேயே வெளியேறி னார். கைஃப் (60 பந்துகளில் 35) நெடு நேரம் தாக்குப் பிடித்தார். மிக அருமையான சச்சினின் இன்னிங்ஸ் (75 பந்துகளில் 98) முடிவுக்கு வந்தபோது ஸ்கோர் 177-4. ஓவர்கள் 27.4. இன்னும் 22.2 ஓவர்களில் 97 ரன் அடிக்க வேண்டும்.

அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இதே பாகிஸ் தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி யில் சச்சின் 136 ரன் அடித்து ஆட்டமிழந்தபோது இன்னும் 20க்கும் குறைவான ரன்களை அடிக்க முடியாமல் மற்றவர்கள் ஆட்டமிழந்தார்கள். அதுபோலவே இப்போதும் ஆகிவிடுமா என்னும் அச்சம் சூழ்ந்தது.

ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. நல்ல தொடக்கத்தை வெற்றியாக மாற்றும் கலை இந்தியாவுக்குக் கைவந்திருந்தது. திராவிடும் (44) யுவராஜும் (50) ஆட்டமிழக்காமல் அணியைப் பத்திரமாகக் கரைசேர்த்தார்கள். இந்திய ரசிகர்கள் கோப்பையே கைக்கு வந்ததுபோலக் குதித்தார் கள். “மற்ற போட்டிகள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, பாகிஸ் தானை வென்றதே போதும்” என்று இந்திய ரசிகர் ஒருவர் சொன்னதைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஆனால் இந்தியா அப்படி விட்டு விடவில்லை. சூப்பர் சிக்ஸில் கவன மாக ஆடி மூன்று போட்டிகளை யும் வென்று அரையிறுதிக்குச் சென்றது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப் பாக ஆடியது. சச்சின் (97), சேவாக் (66), கங்கூலி (48) ஆகியோரின் ஆட்டத்தால் 292 ரன் எடுத்தது.

வேகப் பந்து வீச்சாளர்களின் அற்புதமான பந்து வீச்சால் 23 ஓவர் களில் 109 ரன்னுக்கு இலங்கை யைச் சுருட்டியது. அதன் பிறகு நடந்த போட்டியில் நியூஸிலாந்தை 45.1 ஓவரில் 146 ரன்னுக்குச் சுருட்டியது. அரை இறுதியில் கென்யாவை எளிதாக வீழ்த்தியது.

தோற்றது ஏன்?

இப்படிப் பந்து வீச்சு, மட்டை வீச்சு இரண்டிலும் பிரகாசித்து இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இந்தியா வாய்ப்பைத் தவறவிட்டது.

அதற்கு முக்கியக் காரணம் ஆஸ்திரேலியாவின் ஆட்டம். குறிப்பாக அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கின் ஆட்டம். ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 140 ரன் எடுத்தார். அடுத்த காரணம் இந்தியாவின் பதற்றம். நன்றாக வீசிக்கொண்டிருந்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் தொடரிலேயே மோசமாக இறுதிப் போட்டியில் வீசினார்கள். உச்சகட்ட சவாலில் ஆக மோசமாகப் பந்து வீசினார்கள்.

கங்கூலி என்னென்னமோ செய்துபார்த்தார். மொத்தம் எட்டுப் பேர் பந்து வீசினார்கள். ஹர்பஜன் சிங் மட்டுமே 2 விக்கெட் எடுத்தார். ஆடம் கில்கிறிஸ்ட் (57), மேத்யூ ஹைடன் (37), ரிக்கி பாண்டிங் (ஆட்டமிழக்காமல் 140), டேமியன் மார்ட்டின் (ஆட்டமிழக்காமல் 88) ஆகியோர் இந்தியப் பந்து வீச்சை நார் நாராகக் கிழித்தார்கள். ஸ்கோர் 359-2.

பதற்றம் மட்டை வீச்சிலும் தொடர்ந்தது. முதல் ஓவரில் க்லென் மெக்ரா பந்தில் நேர்த்தி யான ஒரு பவுண்டரி அடித்த சச்சின் அடுத்த பந்தை ஹுக் செய்ய முயல, பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு மெக்ராவிடமே கேட்சாக மாறியது. இந்தியர்களின் நம்பிக்கை சரிந்தது.

சேவாக் (82), திராவிட் (44), கங்கூலி (24), யுவராஜ் (24) என்று மற்றவர்கள் போராடினாலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எடுக்க வேண்டிய ரன் விகிதம் 7க்கு மேல் இருந்தது. ஒவ்வொரு ஓவருக்கும் அது அது ஏற ஏற இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இறங்கிக்கொண்டேபோனது. 39.2 ஓவர்களில் 234 ரன் எடுத்து இந்தியா ஆட்டமிழந்தது. 125 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் கனவு சிதைந்தது.

தொடர் முழுவதும் இருந்த கட்டுக்கோப்பும் முனைப்பும் கடைசிக் கட்டத்தில் சிதறியதால் இந்தியா தோற்றது. இறுதிப் போட்டி குறித்த பதற்றம் நோபாலுடன் தொடங்கிய ஜாகீரின் முதல் ஓவரிலேயே தெரிந்தது. அந்த ஓவரில் அவர் பத்துப் பந்துகள் வீசினார்.

நல்ல பந்து வீச்சையே சிதற அடிக்கும் ஆஸ்திரேலிய மட்டையாளர்கள் பதற்றமும் பிழைகளும் மலிந்த பந்து வீச்சைச் சும்மா விடுவார்களா? போராடி உச்சம் தொட்ட இந்தியா பதற்றத்தில் கோப்பையைத் தவறவிட்டது.

கென்யா ஏற்படுத்திய ஆச்சரியம்

2003 போட்டிகளில் ஆச்சரியம் ஏற்படுத்திய அணி கென்யா. பலவீனமான அணிகள் தம்மை எதிர்த்து ஆடும் வலுவான அணிகளின் ரன் விகிதத்தைக் கணிசமாகக் கூட்டிக்கொள்ளவே பயன்படும் என்பதே இதுபோன்ற தொடர்களின் நிலைமை. கென்யாவும் அப்படிப்பட்ட அணிதான். ஆனால் அது வலுவான அணிகளுக்குக் கடும் அதிர்ச்சியைத் தந்தது.

தென்னாப்பிரிக்காவுடன் தோற்ற கென்யாவுக்கு கனடாவுடனான போட்டியில் வெற்றி கிடைத்தது. நியூஸிலாந்து போட்டியில் தற்செயலாக வெற்றி கிடைத்தது. நைரோபியில் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து அங்கே ஆட வர மாட்டோம் என்று நியூஸிலாந்து அறிவித்ததால் கென்யா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இலங்கையுடனான போட்டியில் கென்யா இலங்கையை 157 ரன்னுக்குள் சுருட்டி 53 ரன் வித்தியாசத்தில் வென்றது உண்மையிலேயே ஆச்சரியமான திருப்பமாக அமைந்தது. பிறகு பங்களாதேஷை வென்று நான்கு வெற்றிகளுடன் சூப்பர் சிக்ஸுக்குள் நுழைந்தது. வலுவான தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

சூப்பர் சிக்ஸில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தாங்கள் ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்றன. ஜிம்பாப்வே மூன்றிலும் தோற்றது. தலா ஒரு வெற்றி பெற்ற இலங்கை, நியூஸிலாந்து, கென்யா அணிகளில் ரன் விகித அடிப்படையில் கென்யா அரை இறுதிக்கு முன்னேறியது. அங்கே இந்தியாவிடம் தோற்றாலும் அரை இறுதிக்கு வந்த பெருமிதத்துடன் வெளியேறியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024