Thursday, February 12, 2015

அண்ணாபல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் துணைவேந்தர் மு.ராஜாராம் தகவல்



அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 5–ந்தேதி தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைகிறது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவு மே மாதம் வெளிவரும். மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் அண்ணாபல்கலைக்கழக ஒருங்கிணைப்பு கல்விக்குழு கூட்டம் நேற்று துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அவரிடம் என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:–

கடந்த ஆண்டு போல கலந்தாய்வு

தமிழ்நாட்டில் 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. கட்டிடக்கலை கற்பிக்கும் கல்லூரிகள் 44 உள்ளன.

இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்.சேர்வதற்கு பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகள் விண்ணப்பிப்பார்கள்.




கடந்த வருடம் போலவே என்ஜினீயரிங் கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடக்கும். எந்தவித மாற்றமும் இல்லை. விண்ணப்பம் ரூ.500–க்கு விற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆகும். ஆனால் அவர்கள் அதற்கு உரிய சான்று கொடுக்கவேண்டும்.

ஜூன்மாத இறுதியில் கலந்தாய்வு

விண்ணப்ப படிவம் 2 லட்சத்து 40 ஆயிரம் அச்சடிக்கப்பட உள்ளது. கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 40 நாட்களுக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும். புதிதாக வரக்கூடிய என்ஜினீயரிங் கல்லூரிகள் எத்தனை என்பது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற இயலாது. என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கிய 3 நாட்களுக்கு பின் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் தங்களை, முதல் பட்டதாரி மாணவர் அல்லது மாணவி என்று குறிப்பிடவேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் அதற்கான சலுகையை அவர்கள் பெறமுடியும்.

இவ்வாறு பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

பேட்டியின்போது அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் கணேசன், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன், பேராசிரியர் ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024