By ஆசிரியர்
First Published : 16 October 2015 01:39 AM IST
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ததுபோல, இப்போது பருப்பு விலையைக் கட்டுப்படுத்த பருப்புகளை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே 5,000 டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகங்களுக்கு வந்துள்ள நிலையில், மேலும் 2,000 டன் பருப்பு முன்னெச்சரிக்கையாக இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.85-ஆக இருந்தது. சில வாரங்களாக ரூ.130 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு, கடும் தட்டுப்பாடு காரணமாக தற்போது சந்தையில் ரூ.180 வரை விற்கப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால், இந்த விலை உயர்வின் பயனை அனுபவிப்பது இடைத்தரகர்களான பருப்பு வியாபாரிகளே தவிர, விவசாயிகள் அல்ல.
பருப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும் என மத்திய வேளாண் துறை கடந்த மே மாதத்திலேயே தோராய மதிப்பீடு செய்து அறிவித்தது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில்தான் இந்தியாவின் 60% பருப்பு சாகுபடி செய்யப்படுகிறது. பருவமழைப் பற்றாக்குறை, புயல் காரணமாக, பருப்பு சாகுபடி பாதிக்கும் என்றும், எதிர்பார்க்கப்பட்ட 180 லட்சம் டன் பருப்பு உற்பத்தி, குறைந்தபட்சம் 6% வீழ்ச்சி அடைவதால், 170 லட்சம் டன் பருப்பு உற்பத்திக்கே வாய்ப்பு உள்ளது என மத்திய வேளாண் துறை கணக்கிட்டு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வந்தபோதே மத்திய அரசு சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியாவில் சமையல் எண்ணெய், பருப்பு இவற்றுக்கான தேவை, உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி இருக்கிறது. சமையல் எண்ணெய், பருப்பு இரண்டையும் நாம் ஆண்டுதோறும் இறக்குமதி செய்துதான் தேவையை நிறைவு செய்கிறோம். இதில் உள்நாட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரத்துக் குறையும் என்றால் பற்றாக்குறையும் விலையேற்றமும் நடைபெறுவது இயல்பு.
எப்போதெல்லாம், மத்திய வேளாண் துறை விளைச்சல் குறையும் என்று கணித்துச் சொல்கிறதோ, அப்போதெல்லாம் பருப்பு வியாபாரிகள் உடனடியாகப் பதுக்கல் வேலைகளைத் தொடங்கி விடுகிறார்கள். ஏற்கெனவே உள்ள பற்றாக்குறையுடன் இந்தப் பதுக்கலும் சேர்ந்தால், தட்டுப்பாடு கடுமையாகி, விலையேற்றமும் அதிகரிக்கிறது. இது சாமானியனுக்குக்கூட தெரிந்த உண்மை.
மத்திய வேளாண் துறை உற்பத்திக் குறைவு பற்றி கணித்தபோதே, மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், இந்நேரம் சந்தையில் பருப்புத் தட்டுப்பாடு இருந்திருக்காது. மத்திய அரசு பருப்பு வகைகளை சந்தையில் சரியான நேரத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று தெரிந்தால், லாபம் இல்லாத பதுக்கலில் வியாபாரிகளும் ஈடுபட மாட்டார்கள்.
உள்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, வெளிநாடுகளில் பருப்பைத் தேடிப் போகும்போது அவர்களும் நமது இயலாமைப் புரிந்து கொண்டு விலையை ஏற்றிவிடுகிறார்கள். அதிக விலைக்கு வாங்கி வந்து, அதை இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பதால் அரசுக்கு ஒருபுறம் நஷ்டம். இதுதவிர, விலைக் கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.500 கோடியை ஒதுக்கி, பருப்புகளின் இறக்குமதிக் கட்டணம், பருப்பு உடைப்பு மற்றும் சுத்திகரிப்பு கட்டணம், லாரி வாடகை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு, சந்தையில் குறைந்த விலையில் பருப்பை விற்பனை செய்யும் கட்டாய நிலைமையும் ஏற்படுகிறது.
உணவுப் பொருள்கள் பற்றாக்குறை அல்லது சமையல் எண்ணெய்ப் பற்றாக்குறை என்பது பேரிடர் மேலாண்மை போன்றது அல்ல. வேளாண்மைத் துறை இவற்றின் உற்பத்தியைக் கணித்துச் சொல்லிவிடுகிறது. அப்போதே நாம் இறக்குமதியைச் செய்யத் தொடங்கினால், சந்தையில் விலையேற்றம் என்பது இயல்பாகவே கட்டுப்பாட்டில் இருக்கும். இது ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனது என்பதை நம்ப முடியவில்லை.
பருப்பு அழுகும் பொருள் அல்ல. சரியான முறையில் பாதுகாக்கப்பட்டால் ஓராண்டுக்கும் மேலாக இருப்பில் வைக்கக்கூடிய பொருள். பருப்புத் தேவையைப் பொருத்தவரையில், ஒவ்வோர் ஆண்டும், இந்தியா 40 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்துதான் தனது தேவையை நிறைவு செய்கிறது.
"எப்போதும் கூடுதலாகவே இறக்குமதி செய்து, பருப்புக்கு தனி சேமிப்பு கிடங்கு உருவாக்கப்படும்' என்று இப்போது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். இந்த நிலையைப் புரிந்துகொள்ள நிதி அமைச்சருக்கும், வர்த்தக அமைச்சருக்கும் வேளாண் அமைச்சருக்கும் இவ்வளவு நாள் தேவைப்படுகிறது என்றால், அவர்களது திறமையின்மையைத்தான் அது வெளிச்சம்போடுகிறது.
சேமிப்புக் கிடங்கில் போதுமான அளவு எப்போதும் இருப்பில் இருக்கவும், தேவைக்கு அதிகமாக பருப்பு, எண்ணெய் கையிருப்பில் மிகும்போது, அதை மட்டும் அவ்வப்போது பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யவுமான நடவடிக்கை, இவற்றின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பருப்பு விலை உயர்வு திறமையின்மையின் விளைவா? இல்லை ஆட்சியாளர்கள் தெரிந்தே செய்த தவறா?
உணவுப் பொருள்கள் விலைவாசி ஏற்றம் தொடருமேயானால் அதனால், பாதிக்கப்படப் போவது அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள்தான். ஐந்து ஆண்டுகள் என்னதான் நல்லாட்சி நடத்தினாலும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஏற்படுமேயானால், அந்த ஆட்சிகள் மக்களால் அகற்றப்பட்டிருப்பதுதான் சரித்திரம் காட்டும் உண்மை. அதனால்தான், மத்திய அரசு மெத்தனமாக இருந்துவிட்டதோ?