கடந்த காலத் தவறுகளின் நிழல்கள் பின்தொடர, கனத்த மனதுடன் வளையவரும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பழைய நினைவின் ஏதோ ஒரு கீற்றின் ஸ்பரிசமும் கனத்த மனதை உடைந்து வெடிக்கச் செய்துவிடும். அப்படியான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான சில பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் ‘தியாகம்’(1978). வங்காள மொழியிலும் இந்தியிலும் ‘அமானுஷ்’ எனும் பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் வடிவம் இப்படம். பிரதான பாத்திரங்களில் சிவாஜி, லட்சுமி. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கடல்சார் வாழ்விடத்தில் நடக்கும் கதை இது. பணக்கார நாயகன், சூழ்ச்சி வலையொன்றில் சிக்கி, குடிகாரனாக மாறிவிட, அவனைக் காதலித்த பெண் கலங்கி நிற்கும் கண்ணீர்க் காவியம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து மொழிகளிலும் அந்தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற இசையை வழங்கியிருந்தார்கள் இசையமைப்பாளர்கள். தமிழ் வடிவத்துக்கு இசை இளையராஜா. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவரது குரலுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ் போன்றவர்களுக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்களின் நவீனத் தன்மையை, டி.எம்.எஸ்.ஸுக்காக அவர் தந்த பாடல்களில் காண முடியாது. மாறாக, எம்.எஸ்.வி. இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் நீட்சியாகவே அப்பாடல்களை இளையராஜா உருவாக்கினார் என்று சொல்லலாம். எனினும், பாடல்களின் மெட்டிலும், நிரவல் இசையிலும் பழமையும் புதுமையும் கலந்த இனிமையைத் தந்தார்.
இப்படத்தில் இடம்பெறும் ‘தேன்மல்லிப் பூவே’ பாடல் ஒரு உதாரணம். டி.எம்.எஸ். ஜானகி பாடியது. கடற்கரையோரத் தென்றலின் ஸ்பரிசத்துடன் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில் பூவை மொய்க்கும் வண்டின் ரீங்காரத்தைப் போன்ற புல்லாங்குழலை ஒலிக்க விடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் ‘செல்லோ’ இசை, பிரம்மாண்டமான புல்வெளிப் பரப்பின் மீது திரட்சியான கருமேகங்களின் நகர்வைக் கண்முன் நிறுத்தும். தொடர்ந்து வீணை, வயலின் இசைக் கலவையின் சாம்ராஜ்யம் என்று அற்புதமான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல் இது.
‘வருக எங்கள் தெய்வங்களே’ எனும் குழுப் பாடலில் டி.எம்.எஸ்.ஸுடன் நாகூர் யூசுப், கெளசல்யா போன்றவர்கள் பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ். பாடிய மற்றொரு முக்கியமான பாடல் இப்படத்தில் உண்டு. அது, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ பாடல். செய்யாத குற்றத்துக்காக வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன் தன் மனதின் குமுறல்களை வேதனையுடன் வெளிப்படுத்தும் பாடல் இது. கடல் மேற்பரப்பின் சிற்றலைகளில் மிதந்தபடி செல்லும் படகின் மேல் தளத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பு. மனதின் துயரங்களைக் கடல் காற்றுடன் கரையவிடும் பாடல். டி.எம்.எஸ்.ஸின் மெலிதான் ஹம்மிங்கைத் தொடர்ந்து ஒலிக்கும் குழலோசை, ரணத்தின் மீது வருடிக்கொடுக்கும் மயிலிறகின் மென்மையுடன் ஒலிக்கும்.
சுயஇரக்கமும் தத்துவார்த்த மனநிலையும் கலந்த குரலில் அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். மனதை நெகிழச் செய்யும் வயலின், ஆழ்மனதின் விம்மல்களை வெளிப்படுத்தும் கிட்டார், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் துயர நினைவுகளின் தொகுப்பாக ஒலிக்கும் புல்லாங்குழல் என்று எளிமையான இந்தப் பாடலில் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும். இரண்டாவது நிரவல் இசையில், வயலின் இசைக் கோவைக்கு நடுவே ஒலிக்கும் சாரங்கி ஒரு கணமேனும் கண்ணீரை வரவழைத்துவிடும்.
இப்பாடலின் மிகப் பெரிய பலம் கண்ணதாசன். ‘பறவைகளே பதில் சொல்லுங்கள்.. மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’, ‘தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே… தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ போன்ற வரிகளை கண்ணதாசனைப் போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘வசந்தகால கோலங்கள்’. இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.
முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in