எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்கிற வாசகம் ஒரு வரி நகைச்சுவையாக
பலரும், பல இடத்திலும் சொல்லியிருக்கிறோம், சொல்லக் கேட்டிருக்கிறோம்.
ஆனால் இந்த வார்த்தைகளைக் கேட்டு சிரிப்பதற்கான பொருள் இருக்கிறதா என்றால்
எதுவும் கிடையாது. இதை திரைப்படக் காட்சியோடு பொருத்தி வெறும்
நகைச்சுவையாக கடந்துபோவதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.
எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்பதுதான் உண்மை. வேலைகளை திட்டமிடுவது
என்பது, வேலைகளை பாதி செய்து முடித்ததற்கு சமமானது என்கிறனர் அறிஞர்கள்.
இது பொதுவான அனைத்து இடத்துக்கும், சூழலுக்கும், வேலைக்கும் பொருந்தும்
என்றாலும், இந்த புது ஆண்டு தொடக்கத்தில் நமது வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்ப
பிளான் பண்ணுவது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக வரவு, செலவு பொருளாதார
விஷயங்களில் குழப்பமில்லாமல், தெளிவான திட்டத்துடன் இருந்தால் தனிநபர்களின்
வாழ்க்கை இலக்குகளில் சிக்கல் இருக்காது என்கின்றனர் குடும்ப நிதி
ஆலோசகர்கள்.
பொருளாதார விஷயங்களில் இந்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய திட்டங் கள், அதை
அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்காக நிதி ஆலோச கர்கள் தரும்
விளக்கங்கள் இது.
இந்த ஆண்டில் வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், வெளிநாட்டுச்
சுற்றுலா போக வேண்டும் என கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சில வேண்டும்கள்
அதிகரித்திருக்கலாம். இந்த அனைத்து தேவைகளையும் அடைவதற்கு தேவை ஒரு முறையான
திட்டமிடுதல். அதை இந்த புது ஆண்டிலிருந்தாவது தொடங்குவோம்.
கடன்களை முடியுங்கள்
தனிநபர்களின் பொருளாதார திட்ட மிடுதல்களில் முதன்மை கடமையாக
வலியுறுத்தப்படுவது கடன்கள் இல் லாமல் இருப்பதுதான். ஒவ்வொரு கடனையும்
அவ்வப்போது அதற்குரிய கால அவகாசத்தில் முடிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள
கடன்களை திருப்பி செலுத்துவதில் நாணயமானவர் என்கிற பட்சத்தில்தான் புதிய
கடன்களை வாங்கு வதற்கான தகுதி தீர்மானிக்கப்படும். அப்போதுதான் நிதிச்
சார்ந்த இலக்கு களை எளிதாக திட்டமிட முடியும்.
வருமானத்தை அதிகப்படுத்துங்கள்
கூடுதல் வருமானத்தை உறுதிப் படுத்த வேண்டும். மாதாந்திர சம்பளக்காரர்கள்
என்றால் உங்கள் வேலை நேரம் போக, மீதி நேரங்களில் இரண்டாவது வருமானத்துக்கு
வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனித் திறமைகளை வருமானமாக்கும் வழிகளை
திட்டமிடுங்கள். சொந்த தொழில் என்றால் தொழிலில் வருமானத்தை அதிகரிக்கும்
வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடுங்கள்.
சேமிப்பை தொடங்கவும்
ஒவ்வொரு மாதமும் சேமிப்பது பழக்கமாகட்டும். சென்ற ஆண்டில் செய்த தேவையற்ற
செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம்.
செலவு களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். அவசியமில்லாத செலவுகளை மேற் கொள்ள
ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கலாம்.
எழுதி வைக்கவும்
ஒவ்வொரு செலவையும் எழுதி வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
அப்போதுதான் எவ்வளவு செலவாகிறது, அதில் தேவையில்லாத பழக்கங்களுக்கு எவ்வளவு
ஒதுக்கி இருக்கிறோம் என்பது தெரிய வரும். கணக்கில்லாமல் செலவு செய்வது மாத
திட்டமிடலில் துண்டு விழ வைக்கும்.
இதுபோல நமது சேமிப்பு, முதலீடுகள், வங்கி கணக்கு விவரங்கள், காப்பீடு போன்ற
நிதி சார்ந்த ஆவணங்களை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்
வகையில் எழுதி வைப்பதும் தெரிந்து கொள்ளச் செய்வதும் முக்கியமானது.
ஒருவருக்கு மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்கிற ரகசியம் கடைபிடிப்பதை
இந்த வருடத்திலிருந்து கைவிடுங்கள்.
வீண் செலவுகள்
வீண் செலவுகள் என்று எதுவுமில்லை. ஆனால் அதை எப்போது செய்கிறோம் என்பதைப்
பொறுத்துதான் வீண் செலவா, இல்லையா என்பது முடிவு செய்ய முடியும். ஆன்லைன்
ஸ்டோரில் ஆபர் கிடைக்கிறது என்பதற்கான கடன் வாங்கி பொருட்களை வாங்குவது
வீண் செலவுதான் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். நோக்கமில்லாமல் மால்களுக்கு
சென்று பொருட்களை வாங்குவது, நமக்கு உபயோகப் படாத கருவிகளை அந்தஸ்துக்காக
வாங்குவது போன்ற செலவுப் பழக்கங்களையும் குறைக்க வேண்டும்.
காப்பீடுகள்
காப்பீடுகளின் அவசியம் குறித்து தெரிந்து வைத்திருந்தாலும் அதன் முழு பலனை
அனுபவிப்பதற்கு திட்டமில்லை. வருமானம் ஈட்டுபவர்களுக்கான டேர்ம்
இன்ஷூரன்ஸூம், குடும்பத்திற்கு போதுமான மருத்துவ காப்பீடு திட்டங் களையும்
இந்த ஆண்டிலாவது திட்ட மிடுங்கள்.
வருமானம் ஈட்டும் இளவயதினருக் கான டேர்ம் காப்பீட்டின் பிரீமியத் தொகை ஒப்பீட்டளவில் குறைவானது என்பது முக்கியமானது.
அவசர தேவைகள்
அவசரகால தேவைகளுக்கான நிதி ஒதுக்குவது முக்கியமானது. இதை சேமிப்பு போல
கருதி கை வைக்காமல் இருக்க வேண்டும். சாதாரணமாக சமாளிக்கக்கூடிய
செலவுகளுக்கு இதில் கை வைக்க கூடாது. இப்படி ஒரு தொகையை ஒதுக்கி வைக்க
வேண்டும் என்கிற எண்ணம் பலருக்குமே இருப்பதில்லை. ஆனால் அவசியம் என்கிறனர்
அனுபவசாலிகள்.
முதலீடுகள்
இதுவரை முதலீடுகள் மேற்கொள் வது குறித்து யோசிக்காதவர்கள் இனிமேலா வது
யோசிக்க வேண்டும். மாத திட்டமிடலில் இதற்கும் ஒரு தொகை ஒதுக்குங்கள்.
குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இதற்கு ஒதுக்க வேண்டும்.
நிதி சார்ந்த முதலீடு திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என முதலீடு
திட்டங்களை பிரித்து மேற்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட், தங்கம் என ஒரே
முதலீட்டில் கவனம் செலுத்துவது சரியான வழியல்ல. எதிர்கால நலன்கள் பொருட்டு
முதலீடுகள் அவசியம்.
ஓய்வு கால நிதி
ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதி யாக வைத்துக்கொள்ளவும் நிதி ஒதுக்க வேண்டும்.
வருமானம் ஈட்டும் வரை தற்போதைய வாழ்க்கைத் தரம் இருக்கும். அதற்கு பிறகு
இதே வாழ்க்கைத் தரத்தை நீடிக்க வேண்டு மெனில் ஓய்வுகால நிதி ஒதுக்கீடு
தேவை. இதற்கு என்று பிபிஎப், என்பிஎஸ் திட்டங்கள் உள்ளன.
பட்ஜெட் போடுங்கள்
இலக்கில்லாத பயணம் கடைசியில் எந்த இடத்துக்கும் சென்று சேராது என்பார்கள்
அதுபோல திட்டமிடா மல் செய்கிற செலவுகளால் எந்த பழக்கத்தையும் கடை பிடிக்க
முடியாது. வருமானத்துக்கும் செலவுக்குமே சரியாக இருக்கிறது அப்பறம் எதற்கு
திட்டமிடுவது என யோசிக்க வேண்டாம். நிதி கையாளுவதில் நமது திறமை என்ன
என்பதை நாம் தெரிந்து கொள்வதற்குகூட திட்டமிடுதல் அவசியமாகிறது.
மாதந்தோறும் குடும்பத்திற் கான பட்ஜெட் முன் கூட்டியே எழுத வேண்டும்.
இதனால் செலவுகளுக் கான முன்னுரிமையை திட்டமிட லாம். கடந்த காலங்களில்
உங்கள் நிதி ஆளுமை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இந்த ஆண்டு
தொடக்கத்தில் இப்படியான உறுதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிதி ஆளுமை என்பது
நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை ஆண்டின்
முடிவில் அறிந்து கொள்வீர்கள்.