By எஸ். ஸ்ரீதுரை
First Published : 08 February 2016 01:05 AM IST
நம் நாட்டில் சட்ட திட்டங்களை மதிப்பது என்பதே ஓர் அலாதியான விஷயம்.
வலியோர் - எளியோர், பணக்காரர் - ஏழை, அதிகாரி - கடைநிலை ஊழியர், அரசியல் கட்சியினர் - சாதாரண பொதுமக்கள் என்ற எதிரெதிர்ப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதில் வெளிப்படையான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
கூட்டங்கள் - தனி மனிதர் என்ற இன்னொரு பிரிவையும் சேர்த்தே அவதானிக்க வேண்டியுள்ளது. நியாயமான விஷயத்தைக் கேட்கவே ஒரு தனி மனிதன் தயங்க வேண்டியுள்ளது. ஆனால், கூட்டமாகப் பலர் சேர்ந்துவிட்டால் எத்தகைய அக்கிரமங்களையும் அரங்கேற்றி விடலாம் என்பது புதிய கலாசாரமாகியுள்ளது.
தனி மனிதன் ஒருவன் சற்றே நாகரிகம் கொண்டவன் போல் நடந்து கொண்டாலும், பல தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமாக உருவானால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காட்டுமிராண்டி ஆகி விடுகிறான் என்பது இப்போது பொது விதி ஆகியிருக்கிறது.
பெங்களூருவில் ஒரு தான்சானிய மாணவி எல்லோரும் பார்க்கப் பலரால் தாக்கப்பட்டதை வர்ணிக்கக் காட்டுமிராண்டித்தனம் என்பதை விட வலுவான வார்த்தை ஒன்று கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
சாலையில் விபத்து நேர்கிறது என்னும் போது, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முனைபவர்களைக் காட்டிலும், விபத்துக்குக் காரணமானவர்கள் என்று ஒரு கூட்டத்தால் கருதப்படுபவரை அடித்துத் துவைக்கும் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.
திருட வந்து மாட்டிக் கொள்பவனை அல்லது மாட்டிக்கொள்பவளைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் குற்றுயிரும் குலை உயிருமாக ஆக்குவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது. நிஜத் திருடர்களை விட, திருடர்களாகத் தவறாக எண்ணப்படுபவர்களும் கூட இதிலிருந்து தப்ப முடிவதில்லை.
அரசியல் கட்சிகளோ, ஜாதி இயக்கங்களோ ஓர் ஊரில் மாநாடு கூட்டிவிட்டால் போதும், அந்தப் பகுதி மக்கள் படும் அவதி சொல்லி முடியாது.
ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வம்பு வளர்த்துப் பணம் கொடுக்காமல் போவது, தங்களுக்கு எதிரான இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சிலைகள், அலுவலகங்கள், பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவது, நினைவுச் சின்னங்களைச் சிதைப்பது இவையெல்லாம் தாராளமாக அரங்கேறும்.
நகரமே குலுங்கியது, சாலைகள் கிடுகிடுத்தன என்று மறுநாள் செய்தி வரவேண்டும் என்பதற்காகவே பெரும் கூட்டத்தைக் கூட்டி வித்தை காட்டும் பொறுப்பற்ற தலைமைகளின் கைங்கரியம்தான் இத்தகைய அத்துமீறல்களுக்கு அஸ்திவாரம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ...?
தனிமாநிலக் கோரிக்கை, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை என்று போராடும் அரசியல் கட்சியினரும், ஜாதி அமைப்பினரும் அரங்கேற்றும் அராஜகங்கள் ஒன்றா? இரண்டா?
முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மீனா இனத்தவர் போராட்டம், குஜராத்தில் நடை பெற்ற படேல் இனத்தவரின் போராட்டம், வட இந்தியாவில் ஜாட் உள்ளிட்ட இனத்தவர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டம் ஆகியவற்றால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நஷ்டங்களும், பொது மக்களுக்கு விளையும் இன்னல்களும் மறக்கக் கூடியவைதானா?
தமிழகத் தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால், சட்டக் கல்லூரி உட்பட, பல்வேறு மாணவர் அமைப்பினர் நடத்தும் போராட்டங்களின் போது எவ்வளவு பொருள்சேதங்களும், உடற்காயங்களும் ஏற்படுகின்றன. இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையேயும், ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கிடையேயும் நடைபெறும் சண்டை சச்சரவுகளில் எத்தனை பொதுச் சொத்துக்கள் பாதிக்கப்படுகின்றன?
மாணவர்களின் போராட்டம் மற்றும் சண்டைதான் என்று இல்லை, கல்லூரி மாணவர் அமைப்புத் தேர்தல் வெற்றி மற்றும் நீதிமன்றங்களாலேயே கண்டிக்கப்பட்ட பேருந்து தினம் ஆகிய கொண்டாட்டங்களின் போதும் பொதுப் போக்குவரத்திற்கு எத்தனை இடைஞ்சல்கள்?
கொண்டாட்டத் தருணங்களின் போது கூட்டமாகச் சேருவோர் செய்யும் இடைஞ்சல்களைக் கூட ஒரு மாதிரி பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பொது இடத்தில் ஏற்படுகின்ற விபத்துகளின் போது, குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்று கூட்டமாகக் கிளம்புவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதிலும், பெங்களூர் சம்பவத்தை எடுத்துக் கொண்டால், இந்த தான்சானியா நாட்டு மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமை எல்லாவிதத்திலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
பெங்களூரில் தங்கிப் படிக்கும் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாகத் தனது மகிழுந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக, அவரது இனத்தைச் சேர்ந்த மாணவியிடம் ஒரு கூட்டமே வன்முறை செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
அரசியல் தலைவர்கள், கட்சியினர், ஜாதி அமைப்பினர், மாணவர்கள் ஆகியோர் கூட்டமாகத் திரளும் போது உருவாகின்ற ஒருவித கட்டுப்பாடின்மையும் வெறியும் பொதுமக்கள் அனைவரிடமும் பரவி விட்டால், அப்புறம் சட்டம் என்பது எதற்காக இருக்கிறது?
இவ்விதம் வெளிநாட்டுக் குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நமது தேசத்தைப் பற்றிய மதிப்பினை உலக அரங்கில் குலைப்பதுடன், பிறநாடுகளுடனான் சுமுக உறவுக்கு வேட்டு வைத்துவிடும்.
சட்டம், கொஞ்சம் தாமதமாகவேனும், தனது கடமையைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். கூட்டங்கள் அளிக்கின்ற தண்டனைகளும், சட்டத்தின் பார்வையில் தண்டனைக்குரியவைதான் என்பதைப் பொதுமக்கள் உணரவேண்டும்.