By ஆர்.எஸ். நாராயணன்
First Published : 03 February 2016 01:43 AM IST
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா } அலங்காரத் தாரகையோடு ஆனந்தம் காணுதே...'
-என்று கண்டசாலா அன்று பாடினார். இன்று அந்த இனிமையான பாடல் நம் மனதில் நிற்கிறது. ஆனால், நாளுக்கு நாள் ஆகாய வீதியும் குப்பையாகி வருகிறது. அழகான வெண்ணிலாவைச் சுற்றி நிற்பது மேகமா? மாசுகளா?
புவியில் கட்டப்பட்ட தொழிற்சாலைகளினாலும் கார், லாரி போன்ற வாகனங்களாலும் எழுந்த கார்பன் புகைதான் கார்மேகங்களாகத் தெரிகின்றன. கார்பன் புகைகள் கார்மேக நீரை உறிஞ்சி விடுவதால் பயந்து ஓடும் கார்மேகங்கள் ஒரே இடத்தில் கூடி ஒரே ஒரு ஊரில் மழை பெய்துவிட்டு மறைவதால் மற்ற ஊர்கள் வறட்சியில் வாடுகின்றன.
பஞ்ச பூத சக்திகளில் நீருக்கு விலை உண்டு. காற்றுக்கு (எஅந) விலை உண்டு. மண்ணுக்கு நிறையவே விலை உண்டு. தீக்கும் (எரிபொருள்) விலை உள்ளது. ஐந்தாவது பூதமாகிய வெளிக்கு விலை இல்லை.
"வெளி' என்பது ஆகாயம். 100 அடி உயரமுள்ள மரமானாலும் 1 அடி உயரமுள்ள செடியானாலும் மண்ணில் வேர் பதித்தாலும் அவற்றின் தலையும் உடலும் வெளியில்தான் உள்ளன. வீடுகளும், கட்டடங்களும், ஆலைகளும், சாலைகளும், அணைகளும், கால்வாய்களும் வெளியில் உள்ளன. மனிதன் மண்ணில் கால் பதித்து நின்றாலும் நடந்தாலும் அது வெளிதானே. நாம் வெளியை நம்பி வாழும் உண்மையை நமக்குப் புரிய வைக்கவே திருச்சிற்றம்பலத்தில் கூத்தபிரானாகிய நடராஜன் கனகசபையில் ஆனந்த நடனம் ஆடுகிறான்.
"வெளி' உருவமற்று இருப்பதால் அதை "சிதம்பர ரகசியம்' என்று ஆன்றோர் மொழிந்தனர். பஞ்சபூத சக்திகளை தெய்வங்களாகப் போற்றி வளர்த்த காரணமே இயற்கையின் பாதுகாப்புக்குத்தான். மெத்தப் படித்தவர்களுக்கு இந்தப் பொது அறிவு புரியவில்லை.
மண்ணைக் காக்க காஞ்சியில் ஏகாம்பரநாதருக்கு ஒரு கோயில். காற்றைக் காக்க காளஹஸ்தியில் காளத்திநாதருக்கு ஒரு கோயில். நீரைக் காக்க திருவானைக்காவலில் ஜலகண்டேஸ்வரருக்கு ஒரு கோயில். தீயைக் காக்க திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு ஒரு கோயில். விண்வெளி காக்க சிதம்பரத்தில் கூத்தபிரானுக்கு ஒரு கோயில்.
நாமோ மண்ணை மாசாக்கினோம். காற்றை மாசாக்கினோம். நீரை மாசாக்கினோம். வெளியை அதிகபட்சம் மாசாக்கி வருகிறோம். ÷தீ மட்டும் எஞ்சியுள்ளது. தீ மட்டும் மிஞ்சினால் உலகே சாம்பலாகும். புவிவெப்பமாகும் பொருள் தீ தானே. இதைக் கருத்தில் கொண்டுதான் இஞட - 21 என்று சுருக்கமாகக் கூறப்பட்ட 21-ஆவது புவி உச்சி மகாநாடு பாரீஸில் கூடியது.
புவிவெப்பமாதலின் விளைவால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பேரிடர் பேய் மழையாகக் கொட்டித் தீர்த்துக் கழிவுநீர் ஓடிய கூவமும் அடையாறும் கரை புரண்டோடி சுத்தமானாலும், நிகழ்ந்த சோகம் மறக்க முடியாதது. வெள்ளம் சூழ்ந்து தத்தளித்த சென்னை, உலகச் செய்தியாகி 21-ஆவது பாரீஸ் மகாநாட்டைத் தலைமையேற்று நடத்திய பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் லாரன்ஸ் ஃபேபியஸ் புவிவெப்பமானதால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுக்குச் சென்னை வெள்ளத்தை உதாரணம் காட்டி அறிவித்தது நினைவிருக்கலாம்.
பூமி வெப்பமாவதால் தட்பவெப்பம் தடுமாறுவதைத் தவிர்க்கும் முயற்சியில்தான் இஞட - 21 - புவி உச்சிமகாநாடு 29.11.2015-இல் தொடங்கி 12.12.2015 வரை 14 நாள்கள் தொடர்ந்து பாரீஸில் நிகழ்ந்தது. இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 30.11.2015 அன்று உரையாற்றினார்கள்.
ஒவ்வொரு நாடும் வளர்ச்சியைக் காரணம் காட்டிப் புகை விட்டுப் புகை விட்டு ஆகாயத்தை ஆக்கிரமித்தால், 2050-ஐ நாம் நெருங்கும்போது எரிமலை, பூகம்பம், அளவு மீறிய வறட்சி, வெள்ளிப் பனிமலை உருகுதல், ஊழிக்காற்று, ஊழிவெள்ளம், கடல் மட்டம் உயர்தல், சுனாமி போன்ற பேரிடர்கள் மிக அதிகமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகத் தலைவர்கள் இதைக் கருத்தில் கொண்டு புவிவெப்பமாகும் இன்றைய நிலை 2 டிகிரி சென்டிகிரேடு என்பதை 1.5 டிகிரி சென்டிகிரேடு நிலைக்குக் குறைக்க வேண்டுமென்பதில் ஏகமனது முடிவை எடுத்துள்ளனர். இதன் காரணமாக பாரீஸ் புவி மகாநாட்டை "வரலாற்றுச் சிறப்புடையது' என்று ஒவ்வொரு தலைவரும் கூறியதை வரவேற்போம். அதேசமயம் இது நிகழக் கூடியதா?
வடக்கு நாடுகளும் வளரும் நாடுகளும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஆகாய ஆக்கிரமிப்புகளை நிறுத்தப் போவதாகத் தோன்றவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடு நிறைய உண்டு. ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லாமல் உணர்ச்சி நிரம்பிய பேச்சுக்களால் ஆகப் போவது என்ன? புவிவெப்பமாவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் தன்னை விட்டால் கிடையாது என்று மார் தட்டும் அமெரிக்கா எந்த அளவில் சாதித்தது?
"நாங்கள் இதுநாள் வரை வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து மரபுசாரா எரிசக்திப் பயனை உகந்த அளவுக்கு வளர்த்தோம். இனி வருங்காலத்தில் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள்தாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஆகாய ஆக்கிரமிப்பைக் குறைக்க வேண்டும்...' என்று ஒபாமா கூறுகிறார். பார்க்கப் போனால் அமெரிக்கா அப்படி எதுவும் சாதித்து விடவில்லை.
2030-ஐ நெருங்கும்போது அமெரிக்காவால் வெளியிடப்படும் கார்பன் புகை அளவு 155 கோடி டன்களாம். இன்றைய நிலவரப்படி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கார்பன் புகை அளவில் 155 கோடி டன்கள் என்பது 75 சதவீதம். ஆகாய ஆக்கிரமிப்பில் முக்கால் பங்கை ஒரே நாடு முழுங்கினால் மற்ற நாடுகள் எங்கே செல்லும்?
2030-இல் அமெரிக்காவின் நிலக்கரி உற்பத்தி 60 கோடி டன்கள் ஆகுமாம். இன்றைய இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியின் அளவும் இதுவே. 2030-இல் அமெரிக்காவில் 60 சதவீத மின்சார உற்பத்தி நிலக்கரி அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படும். 3 சதவீதம் மட்டுமே சூரிய எரிசக்தி.
பாரீஸ் மகாநாட்டில் அமெரிக்கா பேசியதெல்லாம் வாய்ச்சொல் வீச்சுக்களே. 2035-க்குள் உலக நாடுகளின் நிலக்கரிப் பயனை - அதாவது ஊர்ள்ள்ண்ப் ஊன்ங்ப் பயன்பாட்டை பூஜ்ஜியமாக்கினால்தான் புவிவெப்பமாகும் அளவை 1.5 டிகிரி சென்டிகிரேடு என்ற இலக்கை சாதிக்க முடியும். இவ்வாறே, பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மாற்றாக எத்தனால் - உண்ணாத் தாவர எண்ணெய்ப் பயனீடும் உயர வேண்டும்.
இந்தியாவின் சார்பில் பேசிய பிரதமர் மோடியின் உரையில் நல்ல பொருள் உண்டு. மரபுசாரா எரிசக்திப் பயனில் இந்திய எழுச்சி சிறப்புமிக்கது என்றும் 2022-இல் இந்திய மரபுசாரா எரிபொருள் உற்பத்தி 175 ஜிகா வாட் (எ.ர.) அளவில் உயரும் என்றும் இதில் 50 சதவீதம் சூரியசக்தி என்றும் குறிப்பிட்டார். வடக்கு நாடுகள் உதவினால் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் மேலும் வளர்ச்சி பெறலாம் என்று கூறிய அவர், ஆகாய ஆக்கிரமிப்பில் அமெரிக்க அக்கிரமங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
ஆகாய ஆக்கிரமிப்பில் நிலவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்ட அவர், வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது வடக்கு நாடுகளின் ஆகாய ஆக்கிரமிப்புகள் மிக அதிகம் என்றும், ஆகவே, வடக்கு நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் கார்பன் புகை வெளியேற்றத்தில் ஒரே அளவுகோல் பொருந்தாது என்றும், அமெரிக்காவும், வளர்ந்த வடக்கு நாடுகளும் ஆகாயத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்றார் காட்டமாக.
இந்நிலையில், வளரும் நாடுகளுக்கு விண்ணில் நியாயமான இடம் தரவேண்டும் என்றும், வளர்ச்சியை அலகாக வைத்து எந்த நாடு, எந்த அளவில் கார்பன் புகையை வெளியேற்ற வேண்டுமென்று வித்தியாச அடிப்படையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்பதே தலையான பிரச்னை.
வெப்பநிலையை 2 டிகிரி சென்டிகிரேடிலிருந்து 1.5 டிகிரி சென்டிகிரேடாகக் குறைக்க வேண்டுமென்பதில் ஒருமித்த கருத்து உண்டு. இது பொதுவான திட்டம். இதை நாம் ஏற்றே தீர வேண்டும். ஆனால், ஆகாய ஆக்கிரமிப்பில் சமத்துவம் என்பது வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவிட்டு வேற்றுமைப்பட்ட அளவுகோலை உருவாக்குவதே நியாயம்.
ஆகாய ஆக்கிரமிப்பை நிறுத்தும் நிலை பொதுவானது. அதற்குரிய தீர்வு முற்றிலும் மரபுசாரா எரிசக்திப் பயனைச் சார்ந்துள்ளது. மரபுசாரா எரிசக்தியின் தொழில்நுட்பம் வடக்கு நாடுகளின் பிடிப்பில் உள்ளது.
வளரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மரபுசாரா எரிசக்தி நுட்பங்களை விற்று லாபம் பார்ப்பதே அவர்களின் லட்சியம். இவற்றை இறக்குமதி செய்து வளர வேண்டிய கட்டாயம் வளரும் நாடுகளுக்கு உள்ளதால் செலவு கூடுகிறது. மரபுசாரா எரிசக்தியை ஏற்கும் ஆர்வம் தணிந்து விடுகிறது.
வடக்கு நாடுகள் மரபுசாரா எரிசக்தி நுட்பங்களை உதவி அடிப்படையில் ஏழை நாடுகளுக்கு வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஆகாய ஆக்கிரமிப்பில் சமத்துவம் நிலவும்.
இந்தியாவின் அணுகுமுறையை ஏற்கும் வடக்கு நாட்டுத் தலைவர்கள், "உறுப்பு நாடுகள் ஏற்கும் வண்ணம் ஆகாயத்தில் எவ்வளவு இடம் வேண்டுமென்று கூட்டாக நிர்ணயித்துப் பங்கீட்டு இலக்குகளை நிர்ணயம் செய்துவிட்டுப் பேச்சுக்கு வாருங்கள்' என்று சவால் விடுகின்றனர். உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை ஏற்பட்டால்தான் "வேற்றுமைப்பட்ட அளவுகோல்' சாத்தியம். அதுவரை வடக்கு நாடுகளே ஆகாயத்தை ஆக்கிரமிக்கும்.
உலகை வாழ வைக்க ஆண்டுதோறும் உலகத் தலைநகரங்களில் புவி மகாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை கூட்டுகிறது. முதல் புவி உச்சி மகாநாடு 1994-இல் பிரேசிலில் ரியோடி ஜெனிரோவில் கூடியது. அங்குதான் முதல் முறையாகப் புவி வெப்பமாதலை நிறுத்தும் யோசனையை முன்வைத்து ஒவ்வொரு நாடும் அதற்கான இலக்குகளை நிர்ணயித்து, மறு ஆண்டு கூடும் மகாநாட்டில் விவாதிக்கப் பணித்தது.
அதன் பின், 19 உலக மகாநாடுகள் கூட்டப்பட்டன. உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி வாய்கிழியப் பேசுவதில் ஒரு குறையும் இல்லை. இன்றுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாரீஸில் 2015 இறுதியில் இஞட 21 கூடியது. கி.பி. 2050 வருவதற்குள் இன்னும் 30 மகாநாடுகள் உலகத் தலைநகரங்களில் கூடப் போகின்றன. "இப்போது என்ன அவசரம் மெதுவாகப் பார்த்துக் கொள்ளலாம்...' என்று ஒவ்வொரு நாடும் நினைத்துவிட்டால் 1.5 டிகிரி சென்டிகிரேடு என்ற இலக்கை எட்ட முடியாது.
பேச்சுவார்த்தைகள் மட்டுமே மிச்சம் என்று மெத்தனமாயிருந்தால் "அண்ணாமலைக்கு அரோகரா'! பஞ்ச பூதங்களில் தீ மட்டும் மிஞ்சும். பூமியை யாராலும் காப்பாற்ற முடியாது.
No comments:
Post a Comment