Monday, February 1, 2016

ஆ'வலை' வீசுவோம் 17 - ஆங்கில அகராதிகளின் 'கூகுள்'!

சைபர்சிம்மன்

இணைய தேடலின் ஆற்றலையும் வீச்சையும் உணர்த்தும் அருமையான ஆங்கில அகராதி தேடியந்திரம்.

இணைய அகராதிகளை தேடியந்திரமாக கொள்ள முடியுமா? வார்த்தைகளுக்கான பொருள் தேட உதவும் தன்மை காரணமாக இவற்றை தேடியந்திரமாக கருதலாம் என்றாலும், அகராதிகளின் இணைய வடிவம் என்பதால், இவற்றை தேடியந்திரம் கீழ் வகைப்படுத்த வேண்டுமா என்றும் யோசிக்கலாம்.

அச்சு வடிவிலான அகராதிகளில் இருந்து இணைய அகராதிகள் பெரும் பாய்ச்சலாக இருப்பதை 'தி ஃபிரி டிக்‌ஷ்னரி' அல்லது 'யுவர் டிக்‌ஷனரி' அளிக்கும் விரிவான தேடல் வசதிகளில் இருந்தே புரிந்துகொள்ளலாம். பாரம்பரிய ஆங்கில அகராதிகளான ஆக்ஸ்போர்டு, மேக்மில்லன் போன்றவற்றின் இணைய அகராதிகளும் கூட காகித பக்கங்களின் வரம்பில் இருந்து விடுபட்டு டிஜிட்டல் பரப்பில் புதிய பரிமாணம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

எனவே, அகராதிகளை வார்த்தைகளுக்கான தேடியந்திரமாக கொள்ளலாம். அப்படியே இதில் இலக்கண சிக்கல் இருப்பதாக தோன்றினாலும் கூட, 'ஒன்லுக்' அகராதியை நிச்சயம் தேடியந்திரமாக கருத வேண்டும். ஏனெனில் ஒன்லுக் அகராதிகளின் அகாரதி - இணையத்தின் பேரகராதி. இணையவாசிகளுக்கு எளிதில் புரியக்கூடிய மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது அகராதிகளின் கூகுள்!

எளிமைக்கு பின்னால்...

ஒன்லுக் முகப்பு பக்கத்தில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். கூகுளின் முகப்பு பக்கம் போலவே இதன் முகப்பு பக்கமும் எளிமையாக இருப்பது தற்செயலானது அல்ல; அந்த எளிமை தான் தேடியந்திரங்களுக்கான முக்கிய அம்சமும் கூட!

தி ஃபிரி டிக்‌ஷனரி அகராதியை பயன்படுத்தியிருக்கிறீர்களா? அது அகராதி போலவே இருக்காது. மாறாக, ஒரு வலைவாசலின் தோற்றத்துடன் அது வரவேற்கும். வார்த்தைகளுக்கான தேடல் கட்டம் மேல் பகுதியில் இருக்க மற்ற முகப்புப் பக்கம் முழுவதும் எண்ணற்ற அம்சங்களாக நிறைந்திருக்கும். மற்றொரு மிகச் சிறந்த இணைய அகராதியான யுவர் டிக்‌ஷனரியும் இதே ரகத்தை சேர்ந்தது தான். ஆனால் இதன் முகப்பு பக்கம் இப்போது சீரமைக்கப்பட்டு நவீன வடிவமைப்புடன் மேம்பட்டிருக்கிறது. தெளிவாக, குழப்பமில்லாத வகையிலான அகராதி எனும் வர்ணனையுடன் இதன் தேடல் கட்டம் நடுநாயகமாக அமைந்திருக்கிறது என்றாலும் கூட, இதிலும் கூட, வார்த்தை பட்டியல், மேற்கோள்கள், உதாரணங்கள், வார்த்தை தேடல் என கூடுதல் அம்சங்கள் அநேகம் இருக்கின்றன.

ஆனால், ஒன்லுக் முகப்பு பக்கம் மிக எளிமையாக தேடல் கட்டத்துடன் காட்சி அளிக்கிறது. அதன் கீழ் வழிகாட்டுவதற்கான தேடல் உதாரணங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. ஆனால், தோற்றத்தை கண்டு ஏமாந்துவிடக் கூடாது. இதன் தேடல் கட்டத்தில் பொருள் தெரிய வேண்டிய வார்த்தையைக் குறிப்பிட்டு தேட முற்படும்போதுதான் இதன் அற்புதமே தெரியவரும். அல்லது தேடல் உதாரணங்களை கிளிக் செய்து பார்த்தாலும் இதன் தேடல் விஸ்வரூபம் எடுப்பதை பார்க்கலாம்.

தேடல் விஸ்வரூபம்

ஒரு குடிசையின் கதவை திறந்து உள்ளே சென்றால் மாடமாளிகை அறைகளுக்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பிரமிப்பை இதில் தேடும்போது உணரலாம்.

உதாரணத்துக்கு, இதில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளுபேர்ட் எனும் வார்த்தையை கிளிக் செய்து பார்த்தால் அடுத்து தோன்றும் பக்கத்தில், 33 அகராதிகளில் இந்த வார்த்தைக்கான பொருள் இருக்கிறது என தகவலுக்கு கீழே வரிசையாக ஒவ்வொரு அகராதியில் தோன்றும் பொருளுக்கான இணைப்பு இடம்பெற்றிருக்கும்.

அதாவது, ஒன்லுக் நாம் தேடும் வார்த்தையை இணையத்தில் உள்ள அகராதிகள் அனைத்திலும் தேடிப் பார்த்து சலித்தெடுத்து, எந்த எந்த அகராதிகளில் எல்லாம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவற்றை எல்லாம் பட்டியலிடுகிறது. எந்த அகராதி தேவையோ அதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். தேவை எனில் ஒன்றுக்கும் மேற்பட்ட அகராதி விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

பரவலாக அறியப்பட்ட ஆக்ஸ்போர்டு, மெரியம் வெப்ஸ்டர்ஸ், மேக்மில்லன் போன்ற அகராதிகள் தவிர வேறு பல அகராதிகளும் இந்தப் பட்டியலில் இருப்பதை பார்க்கலாம். இப்படி எல்லாம் கூடவா அகராதிகள் இருக்கின்றனவா? என வியப்பை ஏற்படுத்தும் வகையில் பல புதுமையான இணைய அகராதிகளையும் இதில் பார்க்கலாம். தேடும் வார்த்தையின் தன்மைக்கேற்ப அகராதிகளின் பட்டியல் மாறும் - பல புதிய அகராதிகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு இணைப்புடனும் அதற்கான விவரங்கள் மற்றும் மூல தளத்திற்கான சுட்டி இடம்பெற்றிருக்கும்.

அகராதி பட்டியல்

இந்தப் பட்டியலில் பொதுவான நோக்கிலான பொருள்களும், அதன் கீழ் குறிப்பிட்ட துறை சார்ந்த விளக்கத்தையும் பார்க்கலாம். மொழி ஆர்வம் கொண்டவர்களுக்கு சரியான வேட்டையாக அமையும். இல்லை, குறிப்பிட்ட பொருள் தான் தேவை எனில், இந்தப் பட்டியலை பார்ப்பதற்கு முன்னரே பொதுப் பிரிவில் அர்த்தம் தேவையா அல்லது அறிவியல், மருத்துவம், கணிணி போன்ற துறை சார்ந்த விளக்கம் தேவையா என தீர்மானித்து அதற்கேற்ப தேடிக்கொள்ளலாம்.

உதாரணமாக ஜாவா எனும் வார்த்தையை தேடும்போது, கணினி சார் விளக்கம் தேவை எனில் நேரடியாக 19 தொழில்நுட்ப அகராதிகளில் தேடிக்கொள்ளலாம். அதே போல ஆர்சனிக் எனும் சொல்லுக்கு மருத்துவத்தின் கீழ் ஆறு அகராதிகளை காணலாம்.

இவை தவிர வழக்கமான பெயர்ச்சொல், வினைச்சொல் போன்ற விளக்கங்களையும் அருகே பெட்டியாக பார்க்கலாம். அது மட்டும் குறிப்பிட்ட வார்த்தை தோன்றிய வரலாறு, அதன் பயன்பாடு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். கொச்சை வழக்கிலான பயன்பாடு, சொற்றொடர்களின் பயன்பாடு என்றும் கூடுதல் விவரங்கள் சிறகு விரிக்க காத்திருக்கின்றன.

தலைகீழ் தேடல்

இணையத்தில் மொத்தம் எத்தனை அகராதி இருக்கிறது என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இவ்வளவு ஏன்... பெரும்பாலானோருக்கு குறிப்பிட்ட துறை சார்ந்த இணைய அகராதிகள் இருப்பது கூட தெரியாது. அதனால் என்ன, ஒன்லுக்கை பயன்படுத்துவது மூலம் அவை அனைத்திலும் தேடலாம்.

இந்தத் தேடலில் அநேகமாக ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தரிசனமோ அல்லது சின்ன கண்டுபிடிப்போ சாத்தியமாகலாம். சும்மா இல்லை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய அகராதிகளில் இருந்து தேடித் தருகிறது அல்லவா!

தேவை எனில் அகராதிகளின் பட்டியலையும் பார்க்கலாம். பொது அகராதிகள் மற்றும் துறை சார்ந்த அகராதிகள் என பட்டியல் விருகிறது. எந்த ஒரு வார்த்தைக்கும் குறிப்பிட்ட ஓர் அகராதியில் பொருள் தேடும் வசதியும் இருக்கிறது. நேரடியாக நமக்கு தேவையான வகையிலும் தேடலை கட்டமைத்துக்கொள்ளலாம்.

இவை தவிர, தலைகிழ் தேடலும் சாத்தியம். அதாவது ஏதேனும் விளக்கத்தை சமர்பித்து அதற்கு பொருத்தமான வார்த்தையும் தேடலாம்.

இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்ன என்றால் ஒன்லுக் அகராதி தேடியந்திரம் 1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதுதான். துவக்கத்தில் ராபர்ட் வேர் என்பவர் இதை நடத்தியிருக்கிறார். அதன் பிறகு டபிபீபர்மேன் இதற்கு பொறுப்பேற்று இதன் தற்போதைய வடிவை கொண்டு வந்தார். டேட்டாமியூஸ் நிறுவனம் இதை பராமரித்து வருகிறது.

ஒன்லுக் தேடியந்திர முகவரி: http://www.onelook.com

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...