M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.
1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?
‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்
எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
|
தொடரும்..
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
No comments:
Post a Comment