Monday, February 1, 2016

ஆண்களிடம் பெண்கள் முதலில் கவனிப்பது என்ன?......தம்பி

Return to frontpage

ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் கேட்டால் கொஞ்சமல்ல ரொம்பவே ‘ஜெர்க்’ஆகிவிடுவீர்கள்.

நிறைய பெண்கள் ஆண்களின் காலணிகளை, ஷூக்களைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். பாலிஷ் செய்த ஷூக்களைப் போட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரே ஜோடி சாக்ஸை ஒரு வாரம் போடுபவரா நீங்கள்? என்றால் பெண்களிடமிருந்து பல கிலோ மீட்டர் விலகிச் செல்லுங்கள். ஆம், நாற்றமடிக்காத சாக்ஸை அணிந்திருக்க வேண்டும் என்று பெண்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். மால், பப் போன்ற இடங்களுக்குச் சாதாரண காலணிகளைப் போட்டு வரும் ஆண்களையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லையாம். பளபளா இடங்களில் பளபளா ஷூக்கள்தான் போட்டுவர வேண்டுமாம்.

அது மட்டுமா, உடல் துர்நாற்றம், வேர்வை நாற்றம், வாய் துர்நாற்றம் என்றாலே முகம் சுளிக்கிறார்கள். பாவம், பேருந்துகளில் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருப்பார்கள். இருந்தாலும் பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம்தான், இல்லையா. ரொம்பவும் வேர்த்து வடியக் கூடாது, வேர்வையைத் துடைப்பதற்குக் கையில் எப்போதும் கர்ச்சீஃப் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கால்களைப் போலவே கைகளையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் பெண்கள். குறிப்பாக, அழுக்கு மியூசியமாக இருக்கும் நகங்களென்றாலே அவர்களுக்கு ரொம்பவும் அலர்ஜி.

இங்கிதமில்லாமல் ஆண்கள் செய்யும் அட்டூழியங்கள் எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ரோட்டில் எச்சில் துப்புவது, எக்குத்தப்பான இடங்களில் சொறிந்துகொள்வது போன்றவற்றையும் கவனித்து ஒதுக்குகிறார்கள்.

இப்படியாக சுத்தம் தொடர்பான விஷயங்கள் மட்டுமல்ல, ஆண்கள் நடந்துகொள்ளும் விதம், பாடி லாங்குவேஜ் போன்றவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஹோட்டல்களில் வெயிட்டர்களிடம் எப்படிப் பேசுகிறீர்கள், மற்றவர்களிடமும் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதையும் கவனிக்கிறார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பவரா நீங்கள், எல்லாப் பெண்களையும் பார்த்து அசடுவழிபவரா நீங்கள்? அப்படியென்றால், கடைசிவரை நீங்கள் அதையேதான் செய்துகொண்டிருக்க வேண்டும்.உங்களிடம் எந்தப் பெண்ணும் ஃப்ரெண்ட் ஆக மாட்டார்.

இங்கிதமில்லாமல் பேசினால் பிடிக்காது, பயமுறுத்தும்படி பேசினால் பிடிக்காது, ரொம்பவும் நேர்மையாக, வெளிப்படையாகக் காட்டிக்கொண்டால் பிடிக்காது, ரொம்ப நல்லவனாக இருந்தாலும் பிடிக்காது, கெட்டவனாக இருந்தாலும் பிடிக்காது, தப்புத்தப்பாக இங்கிலீஷ் பேசினால் பிடிக்காது, மோசமான ரசனைக்கும் நோ, ஆர்வக் கோளாறுக்கும் நோ, ஓவர் தன்னம்பிக்கைக்கும் நோ, ராமராஜன்மாதிரி கலர் காம்பினேஷன் டிரெஸ் போட்டாலும் நோ, முகத்தைப் பார்த்து, கண்களைப் பார்த்துப் பேச வேண்டும், கண்கள் வேறு எங்கேயும் அலைந்தால் ‘நோ’!

அப்பப்பா, மூச்சு முட்டுகிறதா?! அப்புறம் என்னதான் செய்ய வேண்டும் பாஸ் என்று பெருமூச்சுடன் கேட்கிறீர்களா? ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் இயல்புடன் இருங்கள், போதும்! இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதுதான் ஊத்திக் கொள்கிறது. கூடவே, சுத்தபத்தமாக இருங்கள். அப்போதுதான் அட்லீஸ்ட் பார்க்கவாவது செய்வார்கள்.

பெண்களெல்லாம் நம்மை அதிகம் பார்க்கவே மாட்டார்கள் என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன், இவ்வளவு தூரம் கவனித்திருக் கிறார்களே என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா? பாவம் சார் நீங்கள், இன்னும் ஒரு மில்லினியம் ஆனாலும் பெண்களை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஆண்கள் எல்லாவற்றையும் பார்ப்பவர்கள், அதனால் எல்லாவற்றையும் தவறவிடுகிறார்கள். பெண்களோ குறிப்பாகப் பார்ப்பவர்கள், தேவையானவற்றை மட்டும் பார்ப்பவர்கள், பார்க்காததுபோல் பார்ப்பவர்கள்.

ஆகவே, அவர்களால் துல்லியமாக இருக்க முடிகிறது. ஆனாலும், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ‘ஆகா, பெண்களைப் புரிந்துகொண்டுவிட்டேன்’ என்று துள்ளிக் குதித்துவிட்டு ‘ஹோம் ஒர்க்’ செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களைப் பார்த்து ‘என்னா இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு’ என்றுதான் சொல்ல வேண்டும். அப்புறம் என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? போங்க ப்ரோ, நீங்கள் நீங்களாகவே இருங்க ப்ரோ!

கொசுறாகச் சில கேள்விகள்: இதே கேள்வியைக் கிராமத்துப் பெண்களிடம் கேட்டால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? அவர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்?

வீடியோவுக்கான இணைப்பு: https://goo.gl/SKMzvw

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024