அம்மாவோ அப்பாவோ ‘‘செலவுக்கு வைச்சுக்க’’ என்று தருகிற பாக்கெட் மணிக்கு நீங்கள் பட்ஜெட் போட மாட்டீர்களா? ‘‘முதல்ல இதை வாங்கிக்கலாம். இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும். அப்புறமா அதை வாங்கலாம்” னு மனசுக்குள்ளே பட்ஜெட்டுக்கான ஒரு திட்டம் போட மாட்டீங்களா? அப்படித்தான் பல அம்மா, அப்பாக்களும் பட்ஜெட் போட்டு வாழ்கிறார்கள்!
அவர்களின் பட்ஜெட்களில் உங்களின் படிப்புகளுக்கான செலவுகள் முதல் இடத்தில் இருப்பது நீங்கள் அறிந்ததுதானே?
அதுபோலத்தான் இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் மாநகராட்சிகள் உள்ளிட்ட பஞ்சாயத்து அரசாங்கங்களும் தங்களுக்கான பட்ஜெட்களைப் போட்டுச் செயல்படுகின்றன.
ஆமாம் ஆனா இல்லை
ஒரு குடும்பம் தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு கம்பெனி தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு நாடு தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் சிறு சிறு ஒற்றுமைகள் இருக்கலாம். அதே நேரத்தில் பலவிதமான வேற்றுமை களும் இருக்கவே செய்கின்றன.
ஒரு நிறுவனம் தனது ஒரு ஆண்டின் வரவையும் செலவுகளையும் ஒப்பிட்டுச் சமன் செய்து கணக்கை முடிப்பதுபோல ஒரு நாட்டின் பட்ஜெட் இருக்காது.
மத்தியப் பட்ஜெட்
மத்திய அரசை எடுத்துக்கொள்வோம். அது நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டுக்குள்ளே சட்டம் ஒழுங்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவது என்னும் பல முனைகளில் செயல்படுகிறது. இவற்றை எல்லாம் செய்வதற்கு அரசாங்கத்துக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. வெளிநாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் உள்நாட்டு பணமான ரூபாய் நோட்டுகள் பயன்படாது. வெளிநாட்டுப் பணம் எனப்படுகிற அந்நியச் செலாவணியும் தேவையாக இருக்கிறது.
மத்திய அரசு தனக்குத் தேவையான பணத்தை மக்களின் மீது விதிக்கப்படும் பல விதமான வரிகள், கட்டணங்கள், அரசு நிறுவனங்களின் வருமானம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிடமும் கடன்கள் வாங்குதல் என்ற முறைகளில் சேகரிக்கிறது.
ஏன் பட்ஜெட்?
இதையெல்லாம் தன்னிடம் வாங்கிக்கொள்கிற மத்திய அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரிச் செலவழித்துக்கொள்ள வேண்டியதுதானே? ஏன் பட்ஜெட் என்று ஒவ்வொரு வருடமும் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாகச் சமர்ப்பிக்க வேண்டும்? நிறைய பணம் வருகிற சில பணக்கார வீடுகளில் வீட்டுச் செலவுகளுக்கு எல்லாம் தனியாகப் பட்ஜெட் போட்டு நேரத்தை வீணாகச் செலவு செய்ய மாட்டார்கள். அது மாதிரி வருகிற வருமானத்தை வைத்துக்கொண்டும் நினைக்கிற செலவைச் செய்துகொண்டும் அரசாங்கம் பாட்டுக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கவேண்டியதுதானே என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
அப்படி எல்லாம் ஒரு நாட்டால் செய்ய முடியாது.
ஒரு நாட்டில் வளங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு வரம்புக்குட்பட்டவைதான் என்பது முதல் காரணம். நாட்டின் வளங்களைச் செலவழித்துக்கொண்டே இருந்தால் அவை என்றோ ஒருநாளில் தீர்ந்துபோக வேண்டியவைதான். அப்படி நடந்துகொள்கிற நாடுகள் பொறுப்பில்லாத அரசுகளாகத்தான் இருக்க முடியும்.
இரண்டாவதாக, ஒரு அரசாங்கம் எப்படித் தனக்கான நிதியாதாரங்களை பயன்படுத்துகிறது என்பதும் எப்படிச் செலவழிக்கிறது என்பதும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் இறுதியில் அந்த நாட்டையும் பாதிக்கும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, ஒவ்வொரு வருடமும் மக்களிடம் வெளிப்படையாகத் தனது வரவு செலவுகளைக் காண்பிக்க வேண்டும்.
இந்த இரண்டும் தார்மிகரீதியான காரணங்கள். இந்தியாவுக்கு மூன்றாகவதாக ஒரு காரணமும் இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் இப்படிப் பட்ஜெட் போடுவதை ஒரு கட்டாயக் கடமையாக நிர்ணயித்துள்ளது.
அரசியல் கடமை
இந்தியா ஒரு நாடாளுமன்ற ஜனநாயக நாடு. நமது நாடாளு மன்றத்தை ஒரு அரசியல் சாசனம் வழிநடத்துகிறது. அந்த அரசியல் சாசனம் மத்திய அரசாங்கத்துக்குப் பல கடமைகளை நிர்ணயித்துள்ளது.
மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தனது வரவு செலவுகளையும் நாட்டின் வளங்களை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதையும் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற்றே செயல்பட வேண்டும் என்பதைக் கட்டாயக் கடமையாக அது நிர்ணயித்துள்ளது. அதனால்தான் மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தனது பட்ஜெட்டை நாடாளுமன்றம் முன்பாகச் சமர்ப்பிக்கிறது.
அரசியல் சாசனத்தில் 112, 265, 266 எனும் எண்களைக்கொண்ட சட்டக்கூறுகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் அனுமதி பெறாமல் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவுகள் நடக்கக்கூடாது என்பதற்கான கடமைகளை நிர்ணயித்துள்ளன.
பட்ஜெட்டின் பகுதிகள்
ஏப்ரல் 1 முதலாக மார்ச் 31 வரையான காலம் நிதியாண்டு எனப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் செய்யக்கூடிய வரவு செலவுக்கான அனுமதியை நாடாளுமன்றத்தில் வாங்குவதற்காகத்தான் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது.
பட்ஜெட்டில் பொதுவாக இரண்டு பகுதிகள் இருக்கின்றன: செலவுகளுக்கான பட்ஜெட், வருமானங்களுக்காகப் பட்ஜெட். செலவுகளுக்கான பட்ஜெட்டில் அந்தச் செலவுகளின் மூலமாக வரும் வருமானங்கள் விவாதிக்கப்படலாம். வருமானங்களுக்கான பட்ஜெட்டில் வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய செலவினங்கள் பற்றிய விவாதங்களும் விவரங்களும் இருக்கலாம்.
அடுத்த நிதியாண்டில் எவ்வளவு பணத்தை எந்த எந்த விஷயங்களில் என்ன என்ன வகைகளில் செலவு செய்ய அரசு நினைக்கிறது என்பது பொதுவாக, செலவுகளுக்கான பட்ஜெட்டில் விளக்கமாகத் தரப்படும்.
அரசு தான் செலவு செய்ய நினைத்துள்ள பணம் எங்கிருந்தெல்லாம் வரும் என்பதையும் அந்தப் பணம் வரக்கூடிய நிதி ஆதாரங்களையும் என்னென்ன முறைகளில் சேகரிக்கப்போகிறது என்பது வருமானங்களுக்கான பட்ஜெட்டில் விளக்கப்படும்.
மாப்பிள்ளைத் தோழன்
மத்திய அரசின் பட்ஜெட் கல்யாண மாப்பிள்ளை என்றால் அதன் பக்கத்திலேயே மாப்பிள்ளைத் தோழன் போல ரயில்வே பட்ஜெட் வெளியாகிறது. இது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மரபு. சில நாட்கள் இடைவெளியில் இரண்டு பட்ஜெட்களும் வெளியாகின்றன.
இந்தியாவின் இருப்புப் பாதைகளைச் சீரமைப்பதற்காக வில்லியம் அக்வொர்த் என்பவர் தலைமையில் 1920-ல் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைப்படி 1924-ல் இந்தியாவின் இருப்புப் பாதை வரவு-செலவு அரசின் பொதுநிலையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது.
இந்தப் பழக்கம் இன்றும் சுதந்திர இந்தியாவில் கடைப்பிடிக்கப் படுகிறது. இப்போதும் ரயில்வே பட்ஜெட் தனியாகச் சமர்ப்பிக்கப் பட்டாலும் பொதுப் பட்ஜெட்டின் விவரங்களுக்குள் ரயில்வே பட்ஜெட்டின் விவரங்களைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
ஒரு சம்பிரதாயமாகத்தான் ரயில்வே பட்ஜெட் தனியாக வெளியாகிறது.
பட்ஜெட் போடுவது என்ன பெரிய இமயமலை ஏறும் சாதனையா? அதையே செய்ய முடிகிறபோது, இதையும் செய்ய உங்களாலும் முடியும்.
No comments:
Post a Comment