‘ரெயில்வே மந்திரியே இப்படி கூறிவிட்டார். அப்படி யானால், நிச்சயமாக இந்த ரெயில்வே பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வரும்’ என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்திருந்தது. இதுமட்டுமல்லாமல், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 11–ந் தேதி பிரதமர் நரேந்திரமோடிக்கே, ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாடு 2023 கண்ணோட்டம் அறிக்கையில், முக்கியமான 10 ரெயில்வே திட்டங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அந்த திட்டங்களை நிறைவேற்றவேண்டும். மேலும், மாநில அரசு பங்களிக்க தயாராக உள்ள சென்னை–தூத்துக்குடி சரக்கு ரெயில் வழிப்பாதை, சென்னை–மதுரை–கன்னியாகுமரி அதிவேக பயண ரெயில் இணைப்பு, மதுரை–கோயம்புத்தூர் அதிவேக பயண ரெயில் இணைப்பு நிறைவேற்றுவதற்கு தனியாக அமைப்பு அமைக்கவேண்டும் என்பது உள்பட கடந்த பல பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டு, தொடங்கப் படாமல் இருக்கும் பல திட்டங்களை குறிப்பிட்டு, இதை யெல்லாம் நிறைவேற்ற பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
எல்லோருமே ரெயில்வே பட்ஜெட்டில் இவையெல்லாம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர் பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவில் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. ஆனாலும், வரவேற்கத்தக்க அளவில் சில பொது அறிவிப்புகளும், தமிழ்நாட்டுக்கான அறிவிப்பு களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, பயணிகள் ரெயில் கட்டண வருவாயும், சரக்கு ரெயில் கட்டண வருவாயும் குறைந்துள்ள நிலையில், அதை சரிக்கட்டுவதற்கு பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வோ, சரக்கு ரெயில் கட்டண உயர்வோ அறிவிக்காமல், கட்டண உயர்வு இல்லாத மற்ற இனங்களில் வருவாயைப் பெருக்க அவர் தீட்டியுள்ள திட்டங்கள் மிகவும் வரவேற்புக்குரியவை ஆகும்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், சென்னை அருகே நாட்டிலேயே முதல்முறையாக, ரெயில்வே மோட்டார் வாகன சரக்கு முனையம் அமைக்கும் அறிவிப்பு வெளியிடப் பட்டிருப்பது, நிச்சயமாக பாராட்டுக்குரியது. பொதுத்துறை, தனியார்துறை பங்களிப்புடன் டெல்லியையும், சென்னை யையும் இணைக்கும் வகையில், சரக்கு ரெயில் வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை சென்னையோடு நிறுத்திவிடாமல், தூத்துக்குடி வரை நீடிக்கவேண்டும். காரக்பூர்–விஜயவாடா சரக்கு ரெயில் வழித்தடத்தையும் தூத்துக்குடி வரை இணைத்தால், நிச்சயமாக நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். மாநில அரசின் துணையோடு சென்னை புறநகர் ரெயில் நிலையங்கள் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். மற்றபடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல திட்டங் களுக்கு அதிக அளவில் இல்லாவிட்டாலும், ஓரளவு நிதி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழக திட்டங் களுக்காக 2,064 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பதுபோல, தர்மபுரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அடிக்கடி ரெயில்வே மந்திரியை சந்தித்ததன் விளைவாக, மொரப்பூர்–தர்மபுரி புதிய ரெயில் பாதை திட்டத்திற்கு 134 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, எந்த இடத்துக்கு என்று குறிப்பிடாமல் பொதுவாக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இனி தமிழக எம்.பி.க்களும், தெற்கு ரெயில்வே நிர்வாகமும் இந்த பொது அறிவிப்புகளின் பலனை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கும், நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படுவதற்கும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கும் வாதாடி, போராடி, வற்புறுத்தி பெறவேண்டும்.
No comments:
Post a Comment